
எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14
அக்காலத்தில்
இயேசு மீண்டும் உவமைகள் வாயிலாகப் பேசியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.
மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.
அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.
பின்னர் தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.
அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார்.
இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
மத்தேயு 22: 1-14
“விண்ணரசின் மதிப்பை நாம் உணர்ந்திருக்கின்றோமா?
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். இவருக்கு ஒரு பெரிய பணக்காரர் விலைமதிக்கப் பெறாத ஒரு வைர மோதிரத்தை அன்பளிப்பாக அளித்திருந்தார். இவரோ அதை அணிந்துகொள்ளாமல், பத்திரமாக வைத்திருந்தார்.
ஒருநாள் துறவி, சீடர் ஒருவரை அழைத்து, தன்னிடமிருந்த வைர மோதிரத்தை அவரிடம் கொடுத்து, “இதைக் கொண்டுபோய் கடைத்தெருவில் ஒரு தங்க நாணயத்திற்கு விற்றுவா” என்றார். சீடரும் துறவி தன்னிடத்தில் கொடுத்த வைர மோதிரத்தைக் கடைத் தெருவுக்கு எடுத்துக்கொண்டு சென்று, அங்கு, “இது விலையுயர்ந்த வைரமோதிரம்; இதனுடைய விலை ஒரு தங்க நாணயம்” என்று கூவிக் கூவி விற்றார்.
மக்களோ, ‘விலையுயர்ந்த வைர மோதிரத்தை யாராவது ஒரு தங்க நாணயத்திற்கு விற்பார்களா…? இது போலியாக இருக்கும்! அதனால்தான் இவர் இதை ஒரு தங்க நாணயத்திற்கு விற்கின்றார்’ என்று சொல்லிக் கடந்து போனார்கள். இன்னும் ஒருசிலர்,, ‘ஒரு வெள்ளி நாணயம் வேண்டுமானால் தருகின்றோம்… உங்களிடம் இருக்கின்ற இந்த வைர மோதிரத்தைத் தாருங்கள்’ என்றார்கள். “ஒரு வெள்ளி நாணயத்திற்கெல்லாம் இந்த வைர மோதிரத்தைத் தர முடியாது” என்று சொல்லிச் சீடர் மறுத்துவிட்டார். இப்படியே நேரம் போனதே ஒழிய, யாரும் அந்த வைர மோதிரத்தை ஒரு தங்க நாணயம் கொடுத்து வாங்கவில்லை. இதனால் சீடர் துறவியிடம் திரும்பிச் சென்று நடந்தது அனைத்தையும் எடுத்துக் கூறினார்.
அப்பொழுது துறவி அவரிடம், “பரவாயில்லை. நாளைய நாளில், நீ இந்த வைர மோதிரத்தை எடுத்துக் கொண்டு போய், நகரில் இருக்கும் வைர வியாபாரியிடம், ‘இதன் மதிப்பு எவ்வளவு?’ என்று கேட்டு வா” என்றார். சீடரும் துறவி தன்னிடத்தில் சொன்னதுபோன்றே, அந்த வரை மோதிரத்தை எடுத்துக்கொண்டு போய், நகரில் இருந்த வைர வியாபாரியிடம் காட்டி, “இதன் மதிப்பு எவ்வளவு?” என்றார். வைர வியாபாரியோ, சீடரிடம் கையில் இருந்த வைர மோதிரத்தைப் பார்த்து வியந்துபோய், “இது எப்படியும் ஆயிரம் தங்க நாணயங்கள் பெறும்” என்றார். இதைக் கேட்டு மிகவும் வியந்துபோன சீடர் வேகமாக வந்து, துறவியிடம் நடந்து அனைத்தையும் எடுத்துச் சொன்னார்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட துறவி சீடரிடம், “இதன் மூலம் நான் உனக்கு ஒரு செய்தியைச் சொல்லிக் கொள்ள விழைகின்றேன். இந்த வைரத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ளாத மக்களைப் போன்றுதான் பலர் தங்களுடைய வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்துகொள்ளாமல் இருக்கின்றார். இவர்கள் வைரத்தின் மதிப்பை உணர்ந்துகொண்ட வைர வியாபாரியைப் போன்று, தங்களுடைய வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும்” என்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற மக்கள், வைர வியாபாரி ஆகிய இருவரும் இன்றைய நற்செய்தியில் வருகின்ற விருந்துக்குச் செல்லாதவர்கள், விருந்துக்குச் சென்றவர்கள் ஆகிய இரு பிரிவினரை நமக்கு எடுத்துச் சொல்கின்றார்கள். இயேசு சொல்லக்கூடிய இந்த விண்ணரசு பற்றிய திருமண விருந்து நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
விண்ணரசின் மதிப்பை உணராத யூதர்கள்
நற்செய்தியில் இயேசு விண்ணரசைத் திருமண விருந்திற்கு ஒப்பிடுகின்றார். மன்னர் தான் ஏற்பாடு செய்திருக்கும் திருமண விருந்திற்கு, தன் பணியாளர்கள் மூலமாக ஏற்கெனவே அழைப்புப் பெற்றிருந்தவர்களை அழைத்து வரச் சொல்கின்றார். அவர்கள் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி திருமண விருந்திற்கு வராமல் இருக்கின்றார்கள். மன்னர் ஏற்பாடு செய்திருந்த திருமண விருந்திற்கு வராமல் இருந்தவர்கள் யூதர்கள் என்று சொல்லலாம். இவர்கள் விண்ணரசின் மகத்துவத்தை உணராமல், அனுப்பப்பட்டவர்களைக் கொன்றுபோட்டு, அதற்குத் தகுதியில்லாமல் போனார்கள்.
விண்ணரசின் மதிப்பை உணர்ந்த பிற இனத்து மக்கள்
விண்ணரசு என்ற திருமண விருந்தில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்ட யூதர்கள், தாங்கள் பெற்ற அழைப்பைப் புறக்கணித்ததும், அந்த அழைப்பு வழியில் இருந்தவர்களான பிற இனத்து மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. அவர்களோ அதைத் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொண்டு, திருமண விருந்தில் கலந்துகொள்கின்றார்கள். உண்மையில் யூதர்களை விடவும் பிற இனத்து மக்கள் விண்ணரசின் மதிப்பை நன்றாக உணர்ந்திருந்தார்கள். அதனாலேயே அவர்கள் அழைப்பு கிடைத்ததும், திருமண விருந்தில் கலந்து கொள்கின்றார்கள். ஆகையால், கடவுள் யூதருக்கு மட்டுமல்லாமல், எல்லாருக்கும் தரும் அழைப்பினை அறிந்து, விண்ணரசின் மதிப்பினை உணர்ந்து, அதில் பங்கு பெறுவதற்கு நாம் தகுதியுள்ளவர்கள் ஆவோம்.
சிந்தனை
‘என்னைப் புறக்கணித்து, நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவருக்குத் தீர்ப்பளிக்கும் ஒன்று உண்டு. என் வார்த்தையே அது’ (யோவா 12: 48) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவையும் அவருடைய வார்த்தையும், விண்ணரசையும் புறக்கணிக்காமல், அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு, விண்ணரசின் மதிப்பை உணர்ந்தவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed