
சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்; நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.
நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, `ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார்.
அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், `நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.
இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார்.
அவருடைய தலைவர் அவரிடம், `நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.
ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.
அதற்கு அவருடைய தலைவர், `சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார். `எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று அவர் கூறினார்.”
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை.
“உழைப்பவர்க்கே உயர்வு வரும்”
ஓரூரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் ‘மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன வழி?’ எனத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். எனவே, அவன் பழங்காலத்தில் இருந்த துறவிகளைப் போன்று காட்டிற்குச் சென்று, கடுந்தவம் புரிந்து, அதன்மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்று முடிவுசெய்தான். அதனடிப்படையில் அவன் குடும்பம், உறவுகள், சொந்த பந்தங்கள என எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு காட்டிற்குள் சென்றான்.
இரண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடந்துகொண்டே சென்றான். ஆனால், அவன் தவம் புரிவதற்கான சரியான மட்டும் அமையவில்லை. அதனால் அவன் இன்னும் தொடர்ந்து நடந்தான். ஓரிடத்தில் சலசலத்து ஓடும் சிற்றாறின் சத்தம் கேட்டது. உடனே அவன் அதனருகே சென்றான். அங்கு ரம்மியமான ஓர் இடமிருந்தது. அதனருகே மரங்களும் செடி கொடிகளும் என்று பார்ப்பதற்கே அந்த இடம் அவ்வளவு அழகாக இருந்தது. அதைப் பார்த்த அவனது உள்ளம் பூரித்துப்போனது. ‘நாம் தேடிக்கொண்டிருந்த இடம் இதுதான்… இந்த இடத்திலிருந்து தவம் செய்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்று முடிவுசெய்தான்.
அதன்பிறகு அவ்விடத்தில் இருந்த ஒரு மேடான பகுதியில் அமர்ந்துகொண்டு தவம் செய்யத் தொடங்கினான். ஓரிரு நாள்கள் அவனுக்கு நன்றான இருந்தன. ஏதோ புதுவிதமான ஓர் உலகத்திற்குள் செல்வதைப் போன்று அவன் உணர்ந்தான். அதன்பிறகு அவனால் தவம் செய்யமுடியில்லை. தனிமையாக இருப்பது அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. இதனால் அவன் சிந்தை கலங்கித் தன்னையே வெறுக்கத் தொடங்கி, கடவுளை நோக்கி கூக்குரலிட்டான்: “கடவுளே! என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே கிடையாதா?” இதற்கிடையில் அவன் இரண்டு மூன்று நாள்களாகச் சாப்பிடாததால், மயக்கம் போட்டு கீழே சரிந்து விழுந்தான்.
அப்பொழுது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் வானதூதர் ஒருவர் தோன்றினார். அவரிடம் அவன் தன்னுடைய நிலையை எடுத்துச் சொன்னபோது, அவர் ‘இதோ பார்! உனக்கு முன்னம் ஒரு பெரிய மரம் இருக்கின்றதல்லவா. இதை வெட்டிக் கயிறுகளாகத் திரித்து மக்களிடம் விற்பனை செய். அவர்கள் உனக்குப் பதிலுக்குப் பணம் தருவார்கள். அவற்றைக் கொண்டு நீ உன்னுடைய குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ். அதுதான் நீ மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழி. இப்படிச் சோம்பேறியாய் உட்கார்ந்திருப்பதால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது” என்று சொல்லி மறைந்து போனார். கனவிலிருந்து நிஜ உலகிற்கு வந்த அவன், வானதூதர் தன்னிடம் சொன்னது போன்றே செய்தான். அதன்மூலம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டான்.
ஒருவர்க்கு மகிழ்ச்சியும் உயர்வும் அவர் உழைப்பதனால் மட்டும் கிடைக்குமே ஒழிய, சோம்பித் திரிவதனால் கிடைப்பதில்லை என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தி வாசகமும் உழைத்தால் உயர்வு, உழைக்காவிட்டால் தாழ்வு என்ற செய்தியை எடுத்துச் சொல்கிறது. எனவே, நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
உழைப்பால் உயர்ந்த இரண்டு பணியாளர்கள்.
நற்செய்தியில் இயேசு தாலந்து உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இவ்வுவமையில் நெடும்பயணம் செல்லவிருந்த ஒருவர், தம் மூன்று பணியாளர்களை அழைத்து அவர்களிடம் அவரவர் திறமைக்கேற்ப அவர்களில் ஒருவர்க்கு ஐந்து தாலந்தும் இன்னொருவர்க்கு இரண்டு தாலந்தும் மற்றொருவர்க்கு ஒரு தாலந்தும் என பிரித்துக் கொடுக்கின்றார்.
இதில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில், தலைவர் ஒவ்வொருவர்க்கும் அவரவர் திறமைக்கேற்ப தலாந்துகளைப் பிரித்துக் கொடுப்பதுதான். ஐந்து தாலந்தை வைத்து வேலைபார்க்கும் ஒருவரிடம் ஒரு தாலந்தைக் கொடுத்து வேலை பார்க்கச் சொன்னாலும் பிரச்சினைதான். அதே நேரத்தில் ஒரு தாலந்தை வைத்துப் பணிசெய்பவரிடம் ஐந்து தாலந்துகளைக் கொடுத்தாலும் பிரச்சினைதான். அதனால்தான் அவர்களின் தலைவர் அவரவர் திறமைக்கேற்பத் தாலந்தைப் பிரித்துக் கொடுக்கின்றார். இதில் முதலில் வருகின்ற இரண்டு பணியாளர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்ட வேலைக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து மேலும் ஐந்து, இரண்டு தாலந்துகளை ஈட்டி, தங்கள் தலைவரால் உயர்ந்த பொறுப்புகளில் அமர்த்தப்படுகின்றார்கள்.
உழைக்காமல் சோம்பேறியாக இருந்து, தாழ்ந்த ஒரு பணியாளர்.
இதற்கு முற்றிலும் மாறாக, ஒரு தாலந்தைப் பெற்றவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணிக்கு நம்பிக்கைக்குரியவராய் இல்லாமல், அதைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கின்றார். இறுதியில் அவருடைய தலைவர் வருகின்றபோது கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றார். கடைசியில் வரும் இந்தப் பணியாளர், ‘தலைவர் தன்னை நம்பி ஒரு தாலந்தை ஒப்படைத்திருக்கின்றாரே (ஒரு தாலந்து என்பது இருபது ஆண்டுகால ஊதியம்), அதை பொறுப்போடு பயன்படுத்த வேண்டுமே’ என்று நினைக்கவில்லை; கடினமாக உழைக்கவுமில்லை. அதனால் தலைவரால் தண்டிக்கப்படுகின்றார்.
ஆகையால், நாம் கடவுள் நம்மை நம்பி ஒப்படைத்திருக்கின்ற பொறுப்புகளை, திறமைகளை வளர்த்தெடுக்கவேண்டும். அதற்காகக் கடுமையாக உழைக்கவேண்டும். அப்பொழுதான் நாம் கடவுளால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம்.
சிந்தனை.
‘சோம்பேறிக்கு எவ்வழியும் முள்நிறைந்த வழியே; சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்’ (நீமொ 15: 19) என்கின்றது நீதிமொழிகள் நூல். நாம் சோம்பேறிகளாக இல்லாமல், கடின உழைப்பாளர்களாக இருந்து, இறைவன் நம்மை நம்பிக் கொடுத்திருக்கும் தாலந்துகளைப் பெருக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
