
கடுகு விதை வளர்ந்து மரமாயிற்று.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின” என்று கூறினார்.
மீண்டும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது” என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை.
“இறையாட்சி புளிப்புமாவுக்கு ஒப்பாகும்”
இரண்டு பணக்கார இளைஞர்கள் ஒரு கிராமத்துச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் விவசாயி ஒருவர் தன்னுடைய காலணிகளை வரப்போரமாய்க் கழற்றி வைத்துவிட்டு, சற்றுத் தள்ளி வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய இரண்டு காலணிகளைப் பார்த்ததும், அந்தப் பணக்கார இளைஞர்களில் ஒருவன் மற்றவனிடம், “இந்த மனிதர் தன்னுடைய காலணிகளை இங்கு கழற்றி வைத்துவிட்டு அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார். அதனால் இவருடைய காலணிகளை ஒளித்து வைத்துவிட்டு மறைந்து கொள்வோம். இவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு இங்கு வருவாரல்லவா! அப்பொழுது என்ன செய்கின்றார் என்று வேடிக்கை பார்ப்போம்” என்றான்.
அதற்கு மற்ற இளைஞன் அவனிடம், “அப்படியெல்லாம் செய்யக்கூடாது. இவரைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கின்றது. இவர் அணிந்திருந்தும் சட்டையைப் பார் எப்படிக் கிழிந்திருக்கின்றது என்று! இப்படிப்பட்டவரிடம் விளையாடினால், அது நமக்குத்தான் பாவமாய் அமையும். அதனால் இவருடைய இரண்டு காலணிகளிலும் நம்மிடம் இருக்கின்ற வெள்ளிக்காசுகளில் ஒவ்வொன்று வைப்போம். அதன்பிறகு என்ன நடக்கின்றது என்று மறைந்திருந்து பார்ப்போம்” என்றான். இரண்டாவது இளைஞன் சொன்ன யோசனை முதல் இளைஞனுக்குப் பிடித்துவிட, இருவரும் ஆளுக்கொரு வெள்ளிக்காசுகளை எடுத்து, அந்த விவசாயியின் காலணிகளில் ஒவ்வொன்றாக வைத்தார்கள்.
நேரமானதும், விவசாயி தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு, தான் கழற்றி வைத்திருந்த காலணிகளை அணிந்து கொள்வதற்காக அங்கு வந்தார். முதலில் வலது காலில் காலணியை போட்டுக்கொள்ளத் தொடங்கினார். அதில் ஏதோ வித்தியாசமாகத் தென்படவே, கீழே உற்றுப் பார்த்தார். அங்கு சூரிய வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்த வெள்ளிக்காசு ஒன்று கிடந்தது. அதைக் கண்டு வியப்படைந்த அவர், ‘யாராவது தவறுதலாகக் கீழே போட்டுவிட்டாரா…?’ என்று சுற்றுமுற்றும் யாருமே இல்லை. யாரும் அங்கு இல்லாததால், அவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, “இறைவா! என்னுடைய பிள்ளைகள் நீண்ட நாள்களாக சந்தையிலிருந்து பழங்களை வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர்கட்குப் பழங்களை வாங்கிக்கொடுக்கும் அளவுக்குக் என்னுடைய கையில் காசில்லை. ஆனால், இன்றைக்கு அதற்கொரு வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. இதற்காக இறைவா உமக்கு நன்றி’ என்றார்.
இதை மறைவிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அந்த இரண்டு இளைஞர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். இதற்குப் பின்பு அந்த விவசாயி தன்னுடைய இடது காலில் இரண்டாவது காலணியை அணிந்தார். அதிலும் ஏதோ தென்படவே குனிந்து பார்த்தார். அங்கேயும் ஒரு வெள்ளிக்காசு கிடப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, வானத்தை அண்ணார்ந்து பார்த்து, “இறைவா! என்னுடைய வீட்டுப் பிள்ளைகட்கு மட்டுமல்ல, என்னுடைய அண்டை வீட்டுப் பிள்ளைகட்கும் பழங்களை வாங்கித் தருவதற்கு நீர் இன்னொரு வெள்ளிக்காசினைத் தந்திருக்கின்றீரே! இதற்காகவும் உமக்கு நன்றி’ என்று சொல்லிவிட்டு, அந்த வெள்ளிக்காசையும் எடுத்து தன்னுடைய சட்டையில் போட்டுக்கொண்டு சந்தையை நோக்கி நடக்கத் தொடங்கினார் அந்த விவசாயி.
அந்த இரண்டு இளைஞர்களும் அவர் பின்னாலேயே சென்றார்கள். விவசாயி சந்தைக்குச் சென்று, அங்கிருந்த ஒரு பழக்கடையில் தன்னிடம் இருந்த இரண்டு வெள்ளிக்காசுகளையும் கொடுத்து ஒரு பெரிய சாக்குமூட்டை நிறைய பழங்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சுமந்துகொண்டு வந்தார். வீட்டுக்கு வந்ததும் தன் வீட்டுப் பிள்ளைகட்குக் கொஞ்சம் பழங்களைக் கொடுத்துவிட்டு, மீதிப் பழங்களை அண்டை வீட்டிலிருந்த சிறுவர் சிறுமியர்க்குக் கொடுத்தார். அவர்கள் தாங்கள் பெற்ற பழங்களை தாங்கள் மட்டும் உண்ணாமல், தங்களுடைய நண்பர்கட்கும் தோழிகட்கும் கொடுத்தார்கள். இதனால் அந்த விவசாயி இருந்த தெருவில் இருந்தவர்கள் அனைவரும் பழங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வந்த அந்த இரண்டு இளைஞர்களும், ‘நாம் செய்ததோ ஒரு சிறு உதவி. அது இத்தனைப் பேரைப் போய்ச்சேரும் என்று நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது’ என்று சொல்லிக்கொண்டு தங்களுடைய வீடு திரும்பினார்கள்.
ஆம், நாம் செய்கின்ற உதவி சிறிதாக இருந்தாலும், அது பலருக்கும் போய்ச் சேரும் என்ற உண்மையை எடுத்துச்சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய இறைவார்த்தையும் சிறிய அளவில் தொடங்கப்படும் ஒருசெயல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறையாட்சியும் புளிப்பு மாவும்
நற்செய்தியில் இயேசு இறையாட்சியை புளிப்பு மாவுக்கு ஒப்பிடுகின்றார். பெண் ஒருவர் சிறிதளவு புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைக்க மாவு முழுவதும் புளிப்பேறுகின்றது. அதுபோன்றுதான் அன்பினால் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் இறையாட்சியும் நாசரேத்து என்ற சிறிய ஊரில் தொடங்கித்தான் இன்று உலகம் முழுவதும் பறந்து விரிந்திருக்கின்றது. ஆகையால், நாம் செய்யும் நற்செயல் சிறியளவில் இருக்கின்றதே என்று நினைக்காமல், அந்தச் சிறிய நற்செயலையும் தொடர்ந்து செய்வோம். அது மெல்ல மெல்லப் பரவி, உலகெங்கிலும் உள்ள மக்கட்கெல்லாம் நன்மை தரும்.
சிந்தனை.
சிறிய விதையிலிருந்துதான் பெரிய விருட்சம் தோன்றுகின்றது. நாம் சிறியளவு உதவி செய்தாலும், அதைத் தொடர்ந்து செய்வோம். அதன்வழியாக இம்மண்ணில் இறையாட்சி மலர்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
