
அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்.
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர் கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு
மறையுரைச் சிந்தனை.
இயேசு பெற்ற இன்னொரு திருமுழுக்கு
ஒரு சமயம் சிற்பி ஒருவர் ஒரு மலைப்பாங்கான பகுதி வழியாக தன்னுடைய மாட்டு வண்டியில் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய பார்வையில் இரண்டு பாறையில் தென்பட்டன; அவை பார்ப்பதற்கு மிக அழகாகவும் சிற்பம் வடிப்பதற்கு உகந்ததாககவும் இருந்தன. உடனே அவர் அந்த இரண்டு பாறைகளையும் பக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களின் உதவியுடன் தன்னுடைய மாட்டுவண்டியில் ஏற்றினார். பின்னர் அவர் அந்த இரண்டு பாறைகளையும் மாட்டு வண்டியில் ஏற்றுவதற்கு உறுதுணையாக இந்த மனிதர்கட்கு நன்றி சொல்லிவிட்டு, தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி வந்தார்.
அன்று இரவு அவர் தன்னுடைய மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு பாறைகளையும் தன்னுடைய சிற்பக்கூடத்திற்குள் இறக்கி வைத்து, அவற்றைச் செதுக்கத் தொடங்கினார். இதில் முதலாவது பறை, சிற்பி தன்னுடைய உளியைக்கொண்டு செதுக்கத் தொடங்கியதும், “ஐயோ! எனக்கு வலிக்கின்றது… என்னை ஒன்றும் செய்ய வேண்டாம்” என்று கத்தத் தொடங்கியது. இதனால் சிற்பி அந்தப் பாறையைச் செதுக்குவதை விட்டுவிட்டு, இரண்டாவது பாறையைச் செதுக்கத் தொடங்கினார்.
இரண்டாவது பாறை முதல் பாறையைப் போன்று இல்லாமல், சிற்பியின் கையில் தன்னையே ஒப்படைத்தது. சிற்பி அதனைச் செதுக்கியபோது அதற்குக் கடுமையாக வலித்தது. ஆனாலும், தான் படும் வலிகள் நல்லதுக்குத்தான் என்று நினைத்துக்கொண்டு, அமைதியாக இருந்தது. ஒரு மாதம் கழித்து, இரண்டாவது பாறையிலிருந்து ஓர் அழகிய சிற்பம் பிறந்திருந்தது. அதைப் பார்த்துவிட்டு சிற்பி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ‘நான் உருவாக்கியிருக்கும் இந்தச் சிற்பம் மற்றெல்லாச் சிற்பங்களை விடவும் மிகவும் அழகாக இருக்கின்றது. அதனால் இதை ஊருக்கு நடுவில் மக்கள் பார்வைக்கு வைத்தால், அவ்வழியாக வருவோர் போவோர் இந்தச் சிற்பத்தைப் பார்த்து இரசித்துவிட்டுச் செல்வார்கள்’ என்று யோசித்தார்.
அதனடிப்படையில் அவர் அந்தச் சிற்பத்தைக் கொண்டுபோய் ஊரின் நடுவில் வைத்தார். அப்பொழுது அவருடைய மனதில், ‘இந்தச் சிற்பத்தை கொஞ்சம் உயரத்தில் வைத்தால், அது பார்ப்பதற்கு இன்னும் நன்றாக இருக்குமே’ என்ற இன்னொரு யோசனையும் பிறந்தது. உடனே அவர் பதினைந்து அடி உயரத்தில் ஒரு மேடை அமைத்து, அதன்மேல் தான் செதுக்கிய சிற்பத்தை வைத்தார். மேலும் மக்கள் மேலே சென்று பார்ப்பதற்கு வசதியாக தன்னிடம் இருந்த இன்னொரு பாறையைத் துண்டு துண்டுகளாக வெட்டி, அவற்றைப் படிக்கட்டுகளாகப் பதித்தார்.
இப்பொழுது ஊரின் நடுவில் வைக்கப்பட்டிருந்த சிற்பத்தைப் பார்பதற்காகப் பலரும் மேலே ஏறிச் சென்று வந்தனர். அப்பொழுதுதான் படிக்கட்டுகளாய் மாறிப்போன அந்த முதல் பாறை, “சிற்பி என்னைச் செதுக்கத் தொடங்கியதுபோன்று அவருடைய கையில் என்னை ஒப்படைத்து, வலிகளைப் பொறுத்திருந்தால், இன்றைக்கு நானும் அந்தச் சிற்பம்போல் மக்களால் உயர்வாக மதிக்கப்பட்டிருப்பனே…! இப்பொழுது மக்களால் இப்படி மிதிபட்டுச் சாகின்றேனே…!” என்று மிகவும் வருத்தப்பட்டது. ஆனால், உயரே இருந்த சிற்பமோ, ‘அப்பொழுது வலிகளைத் தாங்கிக் கொண்டதால்தான் இப்பொழுது உயர்ந்த இடத்தில் இருக்கின்றேன்’ என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
எவர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் வலிகளையும் தாங்கிக்கொள்கின்றாரோ, அவர் உயர்ந்த இடத்திற்குச் செல்வார் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நமக்கு கவனத்திற்கு உரியது. நற்செய்தியில் இயேசு தான் பெறவிருந்த இன்னொரு திருமுழுக்கைக் குறித்துப் பேசுகின்றார். இயேசு பெறவிருந்த அந்த இன்னொரு திருமுழுக்கு என்ன? அதை அவர் பெறவேண்டியதன் அவசியம் என்ன? என்பவற்றைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு பெற்ற இரத்தத் திருமுழுக்கு
நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம், “நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றேன்” என்றார்.
இயேசு பெறவிருந்த இன்னொரு திருமுழுக்கு வேறொன்றும் இல்லை; அது கல்வாரியில் அவர் படவிருந்த, பட்ட சிலுவைச்சாவுதான். இயேசு அச்சிலுவைச்சாவை அடைவதற்கு முன்னம் கெத்சமனியில் மிகுந்த மனவேதனை அடைந்தார். இருந்தாலும் இறைவனின் திருவுளம் நிறைவேறவேண்டும் என்பதற்காக சிலுவைச் சாவை அல்லது இரத்தினால் ஆன திருமுழுக்கை ஏற்றுக்கொண்டார். இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு யோவானிடமிருந்து பெற்ற தண்ணீரால் ஆன திருமுழுக்கு அவர் தன்னுடைய பணியைச் தொடங்கிவிட்டார் என்பதன் அடையாளமாக இருந்தது என்றால், அவர் கல்வாரி மலையில் பெற்ற இரத்ததினால் ஆன திருமுழுக்கு, அவர், தந்தைக் கடவுள் தனக்குக் கொடுத்த பணியைச் செய்துவிட்டார் என்பதன் அடியாளமாக இருக்கின்றது.
இயேசு கல்வாரி மலையில் பெற்ற இரத்ததினால் ஆன திருமுழுக்கினை நாமும் பெறுவதற்கு முன்வரவேண்டும். ஏனென்றால், இயேசுவின் சீடர்கள் அவரைப் போன்று இருக்கவேண்டும், அவர் வழியில் நடக்கவேண்டும். அப்பொழுதான் இயேசு கொண்டுவர நினைத்த உண்மையான அமைதி சாத்தியப்படும்.
சிந்தனை.
‘பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை’ (எபி 12: 4) என்று எபிரேயர்களைப் பார்த்துக் கூறுவார் அந்நூலின் ஆசிரியர். எனவே, நாம் இயேசுவைப் போன்று பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் இரத்தம் சிந்தும் அளவுக்குத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed