
அறுவடையோ மிகுதி; வேலையாள்களோ குறைவு.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9
அக்காலத்தில் ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.
அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.
புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.
நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.
வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
’பரிசேயருடைய புளிப்பு மாவைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்”
1939 ஆம் ஆண்டு, அதாவது இரண்டாம் உலகப்போர் தொடக்குவதற்கு முன்னம் ஜெர்மனியும் ரஷ்யாவும் மோலோடோவ் – ரிப்பன்ட்ரோப் (Molotov – Ribbentrop Pact) என்ற ஒப்பந்தம் செய்துகொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம், ஒரு நாடு இன்னொரு நாட்டின்மீது போர்தொடுக்கக்கூடாது என்பதுதான். இருநாடுகளும் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஜெர்மனி ரஷ்யாவின்மீதும் ரஷ்யா ஜெர்மனியின்மீதும் தாக்குதல் நடத்தாமல் இருந்தன.
1941 ஆம் ஆண்டு, ஜெர்மனியை ஆண்டுவந்த ஹிட்லர்க்கு என்ன யோசனை தோன்றியதோ தெரியவில்லை, திடிரென்று ஒருநாள் அவன் தன்னுடைய படைத்தளபதியை அழைத்து, ரஷ்யாவின்மீது தாக்குதல் நடத்தச் சொன்னான். படைத்தளபதியால் ‘ஒரு நாடு இன்னொரு நாட்டின்மீது போர்தொடுக்கக்கூடாது என்ற ஒப்பந்தம் நடைபெற்றிருக்கின்றதே… நீங்கள் அதை மீறுகின்றீர்களே!’ என்று சொல்ல முடியவில்லை. ‘சொன்னால் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ?’ என்று பயந்து, அவர் ஜெர்மனிப் படையை ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்தச் சொன்னார். இதனால் பதிலுக்கு ரஷ்யப் படை ஜெர்மனியின்மீது தாக்குதல் நடத்த, இரண்டாம் உலகப்போரானது தொடங்கியது.
இந்த நிகழ்வில் வருகின்ற ஹிட்லர் எப்படி, சொன்னது ஒன்றும் செய்தது ஒன்றுமாக இருந்தானோ, அதுபோன்று பலர் சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக இருக்கின்றார்கள். இவர்களைக் குறித்து நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். இன்றைய நற்செய்தியிலும் ஆண்டவர் இயேசு சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக, வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், வெளிவேடத்தனமான வாழ்க்கை வாழ்ந்துவந்த பரிசேயர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்று கூறுகின்றார். இயேசு சொல்கின்ற பரிசேயர்களின் புளிப்புமாவு என்றால் என்ன/ இயேசுவைப் பின்பற்றுகின்றவர்கள் அதைக் குறித்து ஏன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பரிசேயர்களின் புளிப்புமாவு என்றால் என்ன?
ஏராளமான பேர் தம்மைப் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்த இயேசு, தன்னுடைய சீடர்கள் பக்கம் திரும்பி, “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்புமாவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்று கூறுகின்றார்.
பவுலடியாரின் திருமுகங்களைப் படித்துப் பார்க்கும்போது, புளிப்பு மாவு என்பது பரத்தமை அல்லது தீமையின் வடிவாக இருக்கின்றது (1 கொரி 5: 6-8) என்பதை அறிந்துகொள்ளலாம். மேலும் அது அளவில் சிறிதாக இருந்தாலும் மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும் (கலா 5:9) என்பதால், புளித்த மாவு என்னும் தீமையை, வெளிவேடத்தை, இன்ன பிறவற்றை ஒருவருடைய வாழ்விலிருந்து அகற்றிவிடவேண்டும் என்று அவர் குறிப்பிடுகின்றார். விடுதலைப் பயண நூலிலோ மோசே தன் மக்களைப் பார்த்து, “ஏழு நாட்களாக உங்கள் வீடுகளில் புளித்த மாவே காணப்படக்கூடாது” (விப 12: 19) என்று குறிப்பிடுகின்றார். இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கின்றபோது, புளிப்பு மாவு என்பது தீமையின் அடையாளமாக இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம், பரிசேயர்களின் வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்கின்றார் என்றால், அவர்கள் பரிசேயர்களைப் போன்று, சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கக்கூடாது என்பதால்தான்.
மக்களின் அங்கீகாரத்தைப் பெற வெளிவேடம் போட்ட பரிசேயர்கள்
பரிசேயர்கள் எதற்காக வெளிவேடத்தனமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள் எனில், அவர்கள் மக்களிடமிருந்து பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற விரும்பினார்கள். அதனால்தான் அவர்கள் வெளிவேடம் போட்டார்கள். சீடர்கள் அப்படி மக்களுடைய பாராட்டப் பெறவதற்காக வெளிவேடம் போடக்கூடாது என்பதைக் குறித்துக்காட்டவே இயேசு அவர்களிடம் இவ்வாறு சொல்கின்றார். மேலும் இத்தகைய வெளிவேடத்தனமான வாழ்விற்குப் பின்னால் எது ஒளிந்திருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், ‘மக்கள் தங்களைப் பற்றி அப்படி நினைத்து விடுவார்களோ, இப்படி நினைத்துவிடுவார்களோ’ என்ற பயம் அல்லது அச்சம்தான் வெளிவேடம் பரிசேயர்கள் வெளிவேடம் போடுவதற்குக் காரணமாக இருந்தது என்று சொல்லலாம். இதைத் தான் இறைவார்த்தை, “பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சி நடப்பவர், கண்ணியில் சிக்கிக்கொள்வார்’ (நீமொ 29: 25) என்று கூறுகின்றது.
ஆகவே, இயேசுவின் சீடர்கள் பிறர்க்கு நல்லவர்களாய்த் தங்களைக் காட்டிக் கொள்ள, வெளிவேடத்தனமான வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளக்கூடாது
ஆண்டவர்க்கு அஞ்சி நடந்தால் யார்க்கும் அஞ்சத் தேவையில்லை
ஆண்டவர் இயேசு எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, நிறைவாக, மனிதர்கட்கு அல்ல, ஆண்டவருக்கு அஞ்சி வாழுங்கள் என்று குறிப்பிடுகின்றார். ஒருவர் ஆண்டவர்க்கு ஏன் அஞ்சி வாழவேண்டும் என்றால், அவர்க்குத்தான் ஒருவரை நரகத்தில் தள்ள அதிகாரம் இருக்கின்றது; மனிதர்கட்கு இல்லை. எனவே, இயேசுவின் சீடர்கள், மனிதர்கள் இப்படி நினைப்பார்களோ, அப்படி நினைப்பார்களோ என்று அவர்கட்கு அஞ்சி, போலியான வாழ்க்கை வாழாமல், எல்லா அதிகாரமும் கொண்டிருக்கும் ஆண்டவர்க்கு அஞ்சி, அவர்க்கு உண்மையுள்ளவராக நடந்தால், வேறு யார்க்கும் அஞ்சி நடக்கத் தேவையில்லை. இந்த உண்மையை உண்மையை உணர்ந்து, அவர்கள், நாம் உண்மையான வாழ்க்கை வாழ்வது நல்லது.
சிந்தனை.
‘ஆண்டவர்க்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவர்க்குத் தாம் தேர்ந்துகொள்ளும் வழியை அவர் கற்றுத் தருவார்’ (திபா 25: 12) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் மனிதர்க்கு அல்ல, ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போம். அதன்வழியாக அவர் நமக்குக் காட்டும் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed