
இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28
அக்காலத்தில் இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.
அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
“உம் தாய் பேறுபெற்றவர்”
ஒரு தாய் தன்னுடைய இடுப்பில் கைக்குழந்தையை வைத்துகொண்டு, தலையில் அழுக்குத்துணிகள் இருந்த வாளியை வைத்துக்கொண்டு துணி துவைப்பதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றாள்; ஆற்றங்கரையை வந்தடைந்ததும், குழந்தையை கரையோரமாக உட்கார வைத்துவிட்டு, துணி துவைக்கத் தொடங்கினாள். அவள் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது பலாப்பழக் குலை ஒன்று ஆற்றில் அடித்துக்கொள்ளப்பட்டு வந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்கு, ‘அந்தப் பலாபழக் குலையை எப்படியானது எடுத்துவிடவேண்டும்’ என்ற எண்ணம் ஏற்பட்டது.
உடனே அவள் துணி துவைப்பதை விட்டுவிட்டு ஆற்றில் அடித்துக்கொள்ளப்பட்டு வந்த பலாப்பழக் குலையை எடுக்க ஆற்றுக்குள் நீந்திச் சென்றாள். அன்றைக்குக் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், அவள் அந்தப் பலாப்பழக் குலையை எடுக்க மிகவும் சிரமப்பட்டாள். ஒருவழியாக பலாப்பழக் குலையை எடுத்த பூரிப்பில் அவள் கரையில் இருந்த குழந்தையைப் பார்த்தாள். அந்தோ பரிதாபம்! கரையில் இருந்த குழந்தை அங்கு இல்லவே இல்லை; ஆற்றில் அடித்துக் செல்லப்பட்டிருந்தது. அவள் தன்னுடைய குழந்தையை எவ்வளவோ தேடிப்பார்த்தாள். அது அவளுக்குக் கிடைக்கவே இல்லை.
இப்படி அந்தத் தாய், பலாப்பழத்திற்கு ஆசைப்பட்டு, குழந்தையை ஆற்றில் விட்டதால் அந்த இடத்திற்கு ‘பிள்ளையை விட்டுவிட்டு பலாபழத்தைப் பிடித்தவள் ஓடை’ என்று இன்றளவும் அழைக்கப்படுகின்றது. இந்த இடம் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கின்றது.
பலாபழத்திற்கு ஆசைப்பட்டு பிள்ளையை ஆற்றில் விட்டுவிட்ட அந்தத் தாயைப் போல், இன்றைக்கும் எத்தனையோ தாய்மார்கள் பணத்திற்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு, தீய நாட்டங்களால் பிள்ளைகளை ‘அம்போ’வென விட்டுவிடும் அவலநிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படிப்பட்ட தாய்மார்கட்கு நடுவில், மிகவும் பேறுபெற்ற தாயாக மரியா விளங்குகின்றார். அவர் எப்படி பேறுபெற்ற தாயாக விளங்குகின்றார் என்பதை இன்றைய இறைவார்த்தையின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.
பெற்றெடுத்தனால் மட்டுமல்ல
நற்செய்தியில் இயேசு வல்லமையோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு பெண்மணி, “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்கின்றார். அதற்கு இயேசு அவரிடம், “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றவர்” என்கின்றார். இங்கு அந்தப் பெண்மணியின் வார்த்தைகளும் இயேசுவின் வார்த்தைகளும் ஆழமான சிந்தனைக்கு உட்படுத்திப் பார்க்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
இந்த உலகத்தில் யார்க்கும் கிடைக்காத பேறு தாய் மரியாவுக்குக் கிடைத்தது. ஆம், எத்தனையோ தாய்மார்கள் ‘இயேசு என்னுடைய வயிற்றில் பிறக்கமாட்டாரா…?’ என்று தவம் கிடந்தபோது, இயேசுவோ, மரியாவின் வயிற்றில் பிறந்தார். அந்த விதத்தில் தாய் மரியா பேறுபெற்றவர்தான். அதைத்தான் நற்செய்தியில் வருகின்ற பெண்மணி குறிப்பிட்டுப் பேசுகின்றார்; ஆனால், இயேசு அதைவிடப் பெரிய பேறு ஒன்று இருக்கின்றது என்று குறிப்பிடுகின்றார்.
இறைவார்த்தையைக் கேட்டுத் தியானித்ததால் மட்டுமல்ல
இயேசு குறிப்பிடுகின்ற அந்தப் பேறு, இறைவார்த்தையைக் கேட்பதா…? நிச்சயமாக இல்லை. மரியா ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதை உள்ளத்தில் இருத்திச் சிந்தித்தார் (லூக் 2: 51). அதனால் மட்டும் அவர் பேறுபெற்றவராக மாறிவிடவில்லை. ஏனென்றால் புனித யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுவது போன்று, பலர் இறைவார்த்தையைக் கேட்பவராக இருந்து தங்களையே ஏமாற்றிக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள் (யாக் 1: 22). மரியா இறைவார்த்தையைக் கேட்டு மட்டும் இருக்கவில்லை. அதை விட மேலான ஒரு செயலைச் செய்தார். அது என்ன என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவார்த்தையைக் கேட்டு நடந்ததனால் பெற்றுபெற்றவரான மரியா
மரியா இயேசுவைப் பெற்றெடுத்தனால் மட்டுமல்ல அல்லது ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டதனால் மட்டுமல்ல. மாறாக அதைவிட, தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவார்த்தையைக் கேட்டு, அதனைக் கடைப்பிடித்து வந்தார். அதனால் அவர் பேறுபெற்றவர் ஆகின்றார். அதைதான் இயேசு தன்னுடைய தாய் பேறுபெற்றவர் என்று கூறிய பெண்ணிற்குப் பதிலாகத் தருகின்றார்.
இயேசு அந்தப் பெண்ணுக்கு அளித்த பதில் மறைமுக, இயேசுவின் வார்த்தையைக் கேளாமலும் அதன்படி நடக்காமலும் இருந்த பரிசேயர்களைக் சாடுவதாக இருக்கின்றன. அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத இனத்தில் பிறந்திருந்தாலும் கடவுளின் மகனை நம்பவும் இல்லை, அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதனால் அவர்கள் பேறுபெற்றவர்களாக மாறாமல் போகின்றார்கள். இவர்களில் நாம் யாராக இருக்கின்றோம். இறைவார்த்தையைக் கேட்டு அதைக்க் கடைப்பிடித்து, பேறுபெற்றவரான மரியாவைப் போன்று இருக்கின்றோமா? அல்லது இறைவார்த்தையைக் கேளாமலே இருந்த பரிசேயர்களைப் போன்று இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை.
‘நற்பெயர் பெற்றவர் யார்? அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்’ (திபா 1: 1-2) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் மரியாவைப் போன்று ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து பேறுபெற்றவர்கள் ஆகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed
