மணமகனின் வருகைக்காக காத்திருக்கும் நமக்கு விசுவாசம் எனும் விளக்கு மட்டும் போதாது, அதனுடன் இணைந்து, பிறரன்பு, மற்றும், நற்செயல்கள் எனும் எண்ணெயும் தேவைப்படுகின்றது என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பத்து கன்னியர் உவமை குறித்து எடுத்துரைத்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மத். 25:1-13), மையப்படுத்தி தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசத்துடன், பிறரன்பின் நற்செயல்களையும் எடுத்துச்சென்றவர்கள், மணமகனுடன் நுழையமுடிந்தது, ஆனால், விசுவாசம் எனும் விளக்கை மட்டும் எடுத்துச் சென்றவர்களால், உள்ளே நுழைமுடியவில்லை என்றார்.
இறைவனின் வருகைக்காக எப்போதும் தயாராகி காத்திருக்கும் நாம், விசுவாசம் எனும் விளக்கை மட்டும் கொண்டிருந்தால் போதாது, பிறரன்பு, மற்றும், நற்செயல்கள் எனும் எண்ணெயும் தேவைப்படுகின்றது என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையருளுக்குரிய நம் பதில்மொழிகள், இறுதி நேரத்திற்கென ஒதுக்கி வைக்கப்படாமல், ஒவ்வொரு நொடியும் செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் எனக் கூறினார்.
பின்னர் நான் மனம் திருந்துவேன், நாளை என்னை மாற்றிக்கொள்வேன் என்று சாக்குபோக்கு சொல்லாமல், இறைவனுடன் கூடிய நம் சந்திப்பிற்கு தயாரிக்க வேண்டும் எனில், இறையன்பால் தூண்டப்படும் நற்செயல்களை தினம் ஆற்றவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார் திருத்தந்தை.
மறு உலக வாழ்வு என்ற ஒன்று இல்லை என்பதுபோல், இவ்வுலக செல்வங்களிலும், அதில் காணும் வெற்றிகளிலும் நாம் தங்கிவிடுவோமானால், நம் வாழ்வு பயனற்றதாகப் போவதோடு, நம் விசுவாச விளக்குக்கு தேவையான எண்ணெயையும் சேமிக்கத் தவறிவிடுவோம், என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளின் வாழ்வை முழுமையாக வாழும் நாம், நாளைய தயாரிப்புக்கள் குறித்து அக்கறை கொண்டவர்களாக, தினசரி வாழ்வின் நற்செயல்களால் அவைகளை நிரப்பவேண்டும் என கேட்டுக்கொண்டார்
Source: New feed