பொது நலத்தை ஊக்குவிப்பதற்கு மூலைக்கல்லாய் அமைந்துள்ள, கருவில் வளரும் குழந்தைகளின் வாழ்வைப் பாதுகாப்பதை, அரசியல்வாதிகள், தங்கள் பணிகளில் முதலிடத்தில் வைக்க வேண்டும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இத்தாலியில் வாழ்வை ஆதரிக்கும் 41வது தேசிய நாள், பிப்ரவரி 3, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, இத்தாலிய வாழ்வை ஆதரிக்கும் இயக்கத்தின் ஏறத்தாழ எழுபது பிரதிநிதிகளை, பிப்ரவரி 02, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், அனைத்து அரசியல்வாதிகளும், பிறக்கவிருக்கும் குழந்தைகளின் வாழ்வைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, புதிதாகப் பிறக்கும் குழந்தை, சமுதாயத்திற்கு, புதுமையையும், வருங்காலத்தையும், வாழ்வையும் கொண்டு வருகின்றது என்று தெரிவித்தார்.
மனித வாழ்வு, கடவுளிடமிருந்து பெறும் கொடையாததால், அதை நம் இலாபத்திற்காகவென கருத முடியாது என்றுரைத்த திருத்தந்தை, மனித வாழ்வைப் பாதுகாத்தல் என்பது, ஒரு மனிதரின் வாழ்வின் எல்லாக் கூறுகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதாகும் என்றும் கூறினார்.
நெருக்கடியில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் பிள்ளைகளைத் தத்து எடுப்பதற்கு உதவும் பணிகளை, மனித வாழ்வை ஆதரிக்கும் இத்தாலிய இயக்கம் ஆற்றி வருகின்றது. இந்த இயக்கத்தில், இத்தாலியின் ஏறத்தாழ 600 இயக்கங்கள் உறுப்புகளாக உள்ளன.
Source: New feed