வாழ்வுப் பயணத்தின் பாதையை காட்டும் தவக்காலம்

இறைவனை நோக்கி நாம் மேற்கொள்ளும் வாழ்வுப் பயணத்தின் பாதையை மீண்டும் கண்டுகொள்ளும் காலம், தவக்காலம் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, ஏப்ரல் 6, இச்சனிக்கிழமை வெளியிட்டார்.

“வாழ்வை நோக்கித் திரும்பிவரும் நம் பாதையை மீண்டும் கண்டுகொள்ளும் காலம், தவக்காலம். நமது இவ்வுலகப் பயணத்தின் இறுதி இலக்கு, இறைவனே: நம் பயணப்பாதை, அவரை நோக்கியதாக இருக்கவேண்டும்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

மேலும், வரும் ஜூன் மாதம் 16ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலியின் காமெரினோ-சான்செவெரினோ மார்க்கே (Camerino-Sanseverino Marche) மறைமாவட்டத்திற்குச் சென்று, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Camerino-Sanseverino Marche மக்களை சந்திப்பார் என திருப்பீடத்தின் செய்தித் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

ஜூன் 16ம் தேதி காலையில் இப்பகுதிக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்து, தற்போது தற்காலிக கூடாரங்களில் தங்கியிருக்கும் மக்களை சென்று சந்திப்பதுடன், பேராலயத்தையும் தரிசித்து, பின்னர், திறந்தவெளி அரங்கில் திருப்பலி நிறைவேற்றியபின், பிற்பகல் வத்திக்கானுக்கு வந்து சேருவார் என்ற விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2016ம் ஆண்டு, ஆகஸ்ட் 24ம் தேதியும், அக்டோபர் 26 மற்றும் 30 தேதிகளிலும் இத்தாலியின் மத்தியப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால், லெ மார்க்கே பகுதி பெருமளவு சேதங்களை கண்டது.