
திருவருகைக் காலத்தின் முதல் வாரம்
புதன்கிழமை
I எசாயா 25: 6-10
II மத்தேயு 15: 29-37
“எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்”
மனிதர்கள் வழியாக இறைவன்:
அந்தப் பெண்மணி அவ்வளவு வசதி படைத்தவர் இல்லையென்றாலும், எல்லாருக்கும் இரங்கக்கூடியவர்; இறைவன்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அப்படிப்பட்டவருக்கு ஒருநாள் ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், “நாளைய நாளில் உங்களுடைய வீட்டிற்கு நான் வருகை தர இருக்கின்றேன் – இப்படிக்கு இயேசு” என்று எழுதப்பட்டிருந்தது.
கடிதத்தைக் கண்டதும், அவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ‘இயேசு என் வீட்டிற்கு நாளைக்கு வரவிருக்கின்றார். இதைவிடப் பெரிய பேறு என்ன இருந்துவிடப் போகிறது?’ என்று அவர் தன்னுடைய வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு, விருந்துக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் காய்கறிகளையும் வாங்கக் கடைக்குப் போனார். அவர் தேவையான பொருள்களை வாங்கிவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வரும்வழியில் ஒரு தாய் தன் பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடுப்பதற்குக் கூட வழியில்லாமல், தவிப்பதைப் பார்த்தார். உடனே அவர் தன்னிடமிருந்த உணவுப் பொருள்களையும் காய்கறிகளையும் அந்தத் தாயிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு நடையைக் கட்டினார். சற்றுத் தள்ளி ஒரு மூதாட்டி, குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். மறுவினாடி, தான் அணிந்திருந்த கோர்ட்டை அவருக்குக் கழற்றிக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது வாசலில் ஒரு கடிதம் இருக்கக் கண்டார் அவர். அந்தக் கடிதத்தை அவர் திறந்து பார்த்தபோது, “நீங்கள் கொடுத்த உணவுப் பொருள்களுக்கும் கோர்ட்டுக்கும் நன்றி – இப்படிக்கு இயேசு” என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்துப் பார்த்தும் அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த நிகழ்வு நமக்கு இரண்டு முக்கியமான உண்மைகளை உணர்த்துகின்றது. ஒன்று, மனிதர்களுக்கு நாம் செய்யும் உதவிகள் இறைவனைப் போய்ச் சேருகின்றன. இரண்டு, கடவுள் நேரடியாக மனிதர்களின் துன்பத்தைப் போக்குவதில்லை. மனிதர்கள் மூலமாகவே சக மனிதர்களின் துன்பத்தைப் போக்குகின்றார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்” என்கிறது. அது எப்படி என்று நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆண்டவராகிய கடவுள் யூதருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் கடவுள் என்கிற உண்மை புதிய ஏற்பாட்டில் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டிலும் வெளிப்படுகின்றது. அதை இன்று நாம் வாசிக்கக்கேட்ட இரண்டு வாசகங்களிலும் காண்கின்றோம்.
முதல் வாசகம், ஆண்டவராகிய கடவுள் மலையில், மக்களினங்கள் அனைவருக்கும் பெரிய விருந்தொன்று ஏற்பாடு செய்வார் என்றும், எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார் என்றும் வாசிக்கின்றோம். இந்த இறைவாக்கு நற்செய்தியில் நிறைவேறுவதை நாம் வாசிக்கின்றோம். இன்றைய நற்செய்திப் பகுதிக்கு முந்தைய பகுதியில் இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருப்பார். அது யூதர்கள் வாழ்ந்த பகுதி. ஆனால், இன்றைய நற்செய்தியில் இயேசு உணவளிப்பது பிறவினத்தார் பகுதி. இதன்மூலம், தன்னை மூன்று நாள்கள் பின்தொடர்ந்து வந்த மக்களுக்கு உணவளித்து, இயேசு அவர்களின் பசியைப் போக்கியது மட்டுமல்லாமல், அவர்களிடம் இருந்த நோயாளர்களை நலமாக்கி, அவர்களிடம் கண்ணீரைத் துடைக்கின்றார்.
ஆண்டவராகிய இயேசு எல்லாம் வல்லவர். அவரால் நான்காயிரம் பேருக்கு உணவளித்திருக்க முடியும். அதே நேரத்தில் மக்கள் நடுவில் இருந்த ஏழு அப்பங்களும் சில மீன்களும், அவர் அப்பங்களைப் பலுகச் செய்யக் காரணமாக இருக்கின்றன. அப்படியெனில், நம்மிடம் இருப்பதைக் கடவுளிடம் கொடுக்க முன்வரும்போது, சக மனிதரின் கண்ணீரும் பசியும் மறையும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் நம்மிடமிருப்பதைப் பிறருக்குக் கொடுத்து, அவர்களின் கண்ணீரையும் பசியையும் போக்கத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
கொடுப்பதால் எதுவும் குறைந்து விடுவதில்லை.
ஒவ்வொருவரும் நண்பர், சகோதரர் என்ற உணர்வுடன் நாம் வாழ்ந்தால், நம்மிடம் பஞ்சம் பசி எதுவுமே இராது.
கடவுளின் கைகளில் நாம் நம்மை ஒப்புக்கொடுத்தால், அவர் நம்மை சிறந்த முறையில் பயன்படுத்துவார். இயேசுவில் கையில் கொடுக்கப்பட்ட அப்பத்தையும் மீனையும் போல.
இறைவாக்கு:
‘வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்’ (உரோ 12: 13) என்று புனித பவுல் கூறுவார். எனவே, நாம் நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed