
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை
வியாழக்கிழமை
I 1 யோவான் 2: 3-11
II லூக்கா 2: 22-35
“கட்டளையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு”
தந்தைக்குக் கீழ்ப்படிந்த மகன்:
மழைக் காலம் நெருங்கி வந்துகொண்டிருந்ததால் ஒரு தந்தை தன் மகனிடம், “நமது பண்ணை நிலத்தில் ஒருசில ஆண்டுகளாகவே நாம் பயிரிடாததால், அது புதர் மண்டிக் கிடக்கின்றது. அதனால் நீ அதிலுள்ள களைகளையெல்லாம் அப்புறப்படுத்தி, நிலத்தைப் பயிரிடுவதற்கு ஏற்றாற்போல் செய். நான் வந்து அதைப் பார்த்த பிறகு, அதில் பயிரிடலாம்” என்றார்.
மகனும் தன் தந்தையின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து பண்ணை நிலத்திற்குச் சென்றான். அங்கு நிலம் முழுவதும் களைகளாய் இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘இதை எப்படிப் பண்படுத்துவது?’ என்று அவனுக்கு ஒரே மலைப்பாய் இருந்தது. இருந்தாலும் அவன் நிலத்தில் இறங்கி வேலை செய்தான். களைகளையும் கற்களையும் நிலத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அதை நன்றாக உழுதான்.
எல்லா வேலைகளும் அவன் முடித்திருந்தபோது, அவனுடைய தந்தை அங்கு வந்தார். அவர் நிலம் பயிரிடுவதற்கு ஏற்றாற்போல் நல்லமுறையில் பண்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அவனை வாஞ்சையோடு கட்டியணைத்தார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மகன் தன் தந்தை சொன்னது போன்று நிலத்தைப் பண்படுத்தி, அவர்மீதான தனது அன்பை வெளிப்படுத்தினான். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போரிடம் அவரது அன்பு நிலைத்திருக்கும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யோவான் வாழ்ந்த காலத்தில் ஒருசிலர் கடவுளை அறிந்ததாகச் சொல்லிக் கொண்டனர். அத்தகையோர் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்க வில்லை என்பதுதான் அதில் உள்ள நகைமுரண். கடவுளை அறிந்திருப்போர் அவரது கட்டளையின்படி நடக்கவேண்டும். அப்போதுதான் அவரது அன்பு அவர்களில் நிலைத்திருக்கும். அப்படியில்லாத பட்சத்தில் அவர்கள் பொய்யர்களே என்கிறார் யோவான்.
இன்றைய நற்செய்தியில் குழந்தை இயேசு எருசலேம் திருக்கோயிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுவதைப் பற்றி வாசிக்கின்றோம். இந்த நிகழ்வில் இடம்பெறும் ஒருவர்தான் சிமியோன். இவர் ஆண்டவரை அறிந்தவராய், அதன் வெளிப்பாடாக அவரது கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார். அதனால்தான் அவர் குழந்தை இயேசுவைக் காணும் பேறு பெறுகின்றார்.
ஆகையால், நாம் ஆண்டவரே ஆண்டவரே எனச் சொல்வது பெரிதில்லை. மாறாக, நாம் ஆண்டவரின் கட்டளைப் படி நடக்க வேண்டும். அப்போதுதான் அவரது அன்பு நம்மில் குடிகொள்ளும்.
சிந்தனைக்கு:
ஆண்டவரில் ஒன்றித்திருப்பது அவசியம். அது அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவே முடியும்.
அறியாமை அழிவுக்கு வழி வகுக்கும்.
இயேசுவை ஆழமாய் அறிவிப்போம்; அறிவிப்போம்.
இறைவாக்கு:
‘என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்போர் என்மீது அன்பு கொண்டுள்ளார்’ (யோவா 14: 21) என்பார் இயேசு. எனவே, நாம் இயேசுவின் கட்டளையை ஏற்றுக் கடைப்பிடித்து, அவர்மீது உள்ள நமது அன்பை வெளிப்படுத்தி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed