
பொதுக்காலம் மூன்றாம் வாரம் திங்கட்கிழமை
I எபிரேயர் 9: 15, 24-28
II மாற்கு 3: 22-30
குறைகூறுபவர்களாக இல்லாமல், பாராட்டுபவர்களாக…
பாராட்டுங்கள்
நகரில் இருந்த பெரிய பல்பொருள் அங்காடி (Super Market) அது. அந்தப் பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவையை வழங்கினார். இருந்தும், ‘பொருள்களின் விலை அதிகமாக உள்ளது’, பணியாளர்கள் வழங்கும் சேவை சரியில்லை’, ‘வண்டியை நிறுத்துவதற்குப் போதுமான இடமில்லை’ என்று புகார்களுக்கு மேல் புகார்கள் வந்துகொண்டிருந்தன. இதனால் அவர் மிகவும் சோர்வுற்றார்.
ஒருநாள் அவரிடம் மிகவும் பகட்டாக உடையணிந்த பெண்மணி ஒருவர் வந்தார். ‘இவரும் ஏதா புகாரளிக்கத்தான் போகிறார்’ என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கையில், வந்த பெண்மணி, “உங்களுடைய பல்பொருள் அங்காடியில் வழங்கப்படும் சேவை மிகவும் தரமாகவும், பொருள்கள் மிகக்குறைந்த விலையிலும் இருக்கின்றன. இச்சேவை மேலும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்” என்று பாராட்டிவிட்டுச் சென்றார். இது, புகார்களையே கேட்டுப் பழகிப்போன பல்பொருள் அங்காடியின் உரிமையாளருக்கு சேவையை நல்லமுறையில் வழங்க உத்வேகத்தைத் தந்தது.
ஆம், குறைகளை அல்ல, நிறைகளைப் பார்க்கப் பழகினோம் எனில், நமது வாழ்க்கை மட்டுமல்ல, எல்லாருடைய மகிழ்ச்சியாக இருக்கும். ஆண்டவர் இயேசு தூய ஆவியாரின் வல்லமையால் தீய ஆவியை ஓட்டினார். அதற்காக மறைநூல் அறிஞர்கள் அவரைப் பாராட்டியிருக்கலாம்; ஆனால், அவர்கள் அவரைப் பாராட்டாமல்,அவரைப் பற்றித தவறாகப் பேசுவதை நற்செய்தியில் வாசிக்கின்றோம்.
திருவிவிலியப் பன்னணி
கடவுள், நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்து, அவரோடு இருந்ததால், அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும், அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டு சென்றார் (திப 10: 38). இதனால் மக்கள் நடுவில் இயேசுவுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டானது. இது பிடிக்காத மறைநூல் அறிஞர்கள் இயேசுவைப் பெயல்செபூல் பிடித்திருக்கின்றது என்று விமர்சிக்கின்றார். மறைநூல் அறிஞர்கள் உண்மையில் நல்லவர்கள் என்றால், தூய ஆவியாரின் வல்லமையால் இயேசு செய்த வல்ல செயல்களைப் பாராட்டி இருக்கவேண்டும் அல்லது இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று, இயேசு (ஆடுகள் வாழ்வுபெறும் பொட்டுத்) தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுக்க வந்தவர் என்று உணர்ந்திருக்க வேண்டும்.; ஆனால், அவர்கள் இவை எதுவும் உணராமல், அவரை விமர்சிப்பதுதான் வியப்பாக இருக்கின்றது. நாம் மறைநூல் அறிஞர்களைப் போல் மற்றவர்களைக் குறைகூறுபவர்களாக இல்லாமல், இயேசுவைப் போன்று (மத் 8: 10) நல்லதைப் பாராட்டக்கூடியார்களாக இருப்போம்.
சிந்தனைக்கு:
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
இயேசு நூற்றுவத்தலைவனின் நம்பிக்கையை கண்டு வியந்து அவரைப் பாராட்டினார். நாம் நல்லதைக் கண்டு, பாராட்டுகின்றோமா?
இயேசுவுக்கு எல்லாவற்றின்மீதும் அதிகாரம் உண்டு என்பதை நம்புகிறோமா? (மத் 28: 18).
ஆன்றோர் வாக்கு:
‘விமர்சனங்களை நான் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில், அதுவே என்னை மிகவும் உறுதியாக்குகிறது’ என்பார் லேப்ரோன் ஜேம்ஸ். எனவே, நாம் வளர்ச்சிக்குரிய விமர்சனங்களைத் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொண்டு, இறைவனுகுகந்த வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed