
பொதுக் காலத்தின் இருபத்து ஒன்பதாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I எபேசியர் 2: 12-22
II லூக்கா 12: 35-38
“இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள்”
ஆயத்தமில்லாத அரசன்:
நன்றாய் இருந்த அரசன் ஒருவன், ஒருநாள் காலையில் படுக்கையில் இறந்து கிடந்ததைக் கண்டு எல்லாரும் அதிர்ந்து போனார்கள். செய்தி சிறிது நேரத்தில் எங்கும் காட்டுத் தீ போல் பரவியது.
அதற்குள் அரண்மனையில் இருந்தவர்களிடம், ‘அரசர் விண்ணகம் சென்றிருப்பாரா? பாதாளம் சென்றிருப்பாரா?’ என்றொரு பேச்சு வந்தது. பலரும், அரசர் விண்ணகம்தான் சென்றிருப்பார் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, “அரசர் விண்ணகம் செல்வதற்கு வாய்ப்பே இல்லை” என்று அரசரின் செயலர் அடித்துச் சொன்னார்.
“எதை வைத்து நீர் இப்படிச் சொல்கிறீர்?” என்று மற்றவர்கள் கேட்டபோது, அரசரின் செயலர் அவர்களிடம், “அரசரோடு கூடவே இருந்தவன் என்ற முறையில் நான் சொல்கிறேன். அவர் எந்த இடத்திற்குச் சென்றாலும், அந்த இடத்திற்கு எல்லாவற்றையும் முன்கூட்டியே தயாரித்துவிடுவார். ஆனால், விண்ணகத்தைப் பற்றி அவர் இதுவரை என்னிடம் எதுவும் பேசியதில்லை; அதற்காக அவர் எதையும் தயாரித்ததில்லை. அதனால் அவர் விண்ணகம் செல்வதற்கு வாய்ப்பே இல்லை. பாதாளம்தான் சென்றிருக்கவேண்டும்” என்றார்.
புனித பவுல் சொல்வது போல், “நமக்கு விண்ணகமே தாய் நாடு” (பிலி 3:20). அங்கே செல்வதற்கு நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும். அதையே இந்த நிகழ்வும், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. நாம் எப்படி நம்முடைய வாழ்வில் விழிப்பாய், ஆயத்தமாய் இருப்பது? என்பது குறித்துச் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“உங்கள் இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள்” – இப்படித்தான் இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகின்றது. இடையை வரிந்து கட்டிக்கொள்தல் என்பது ஆயத்தமாய் இருப்பதன் அடையாளமாகும் (விப 12:11; 1பேது 1:13). இந்த உண்மையை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இயேசு பயன்படுத்தும் உவமைதான் ‘விழிப்பாய் இருக்கும் பணியாளர்கள் உவமை.
திருமண விருந்துக்குச் சென்ற தலைவர் இரவில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவர் வருகின்ற வேளையில் பணியாளர்கள் விழிப்பாய் இருந்தால் பேறுபெற்றவர்கள், அவர்களுக்கு அவர் பணிவிடை செய்வார் என்கிறார் இயேசு. தலைவரே பணியாளர்களுக்குப் பணிவிடை செய்வது என்பது மிகப்பெரிய பேறு. அத்தகைய பேற்றினைப் பெற ஒருவர் விழிப்பாய் இருப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று.
இன்றைய முதல் வாசகம், நாம் ஏன் விழிப்பாய், ஆயத்தமாய் இருக்கவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகின்றது. “எனவே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்” என்று பவுல் கூறுவதன் மூலமாக, கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்த நாம், அதற்கேற்ற வகையில் விழிப்பாய் இருக்கவேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றார் அவர். ஆகவே, நாம் கடவுளின் ஆட்சியை உரித்தாக்க, விழிப்பாய் ஆயத்தமாய் இருப்போம்.
சிந்தனைக்கு:
கடவுளின் மக்கள் அவருக்கேற்றாற்போல் இருப்பதே முறையானது.
விழிப்பாய் இருத்தல் என்பது நமது அன்றாடக் கடமையை மட்டுமல்ல, ஆன்மிகக் கடமையையும் சரியாய்ச் செய்வது.
இறுதி நேரத் தயாரிப்பு எல்லா நேரத்திலும் கைகூடுவதில்லை.
இறைவாக்கு:
‘ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்’ (மத் 24:44) என்பார் இயேசு. எனவே, மானிட மகன் எப்போது வேண்டுமானாலும் வருவார் என்பதால், நாம் விழிப்பாய், ஆயத்தமாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed