இரண்டாவது உலக வறியோர் நாள், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கில், ஏறத்தாழ 1,500 வறியோருடன் அமர்ந்து உணவருந்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை நிறைவு செய்தபின், உள்ளூர் நேரம் 12.20 மணிக்கு, புனித ஆறாம் பவுல் அரங்கில் நுழைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு, மதிய உணவை ஏற்பாடு செய்தோருக்கும், பரிமாறுவோருக்கும் நன்றியுரைத்ததோடு, அங்கு குழுமியிருந்த அனைத்து வறியோரையும் வரவேற்பதாகவும் கூறினார்.
1,500 வறியோர் குழுமியிருக்க, 70 தன்னார்வப் பணியாளர்கள், இத்தாலிய உணவு வகையான இலசாஞ்ஞா, கோழிக்கறி, உருளைக் கிழங்கு கூட்டு, திராமிசு என்ற இனிப்பு ஆகியவற்றை அவர்களுக்கு பரிமாறினர்.
மதிய உணவை வறியோருடன் உண்டபின் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி, அங்கிருந்த குழந்தைகளையும், வறியோரையும் வாழ்த்திய திருத்தந்தை, இவ்வுணவை தயாரித்த சமையல்காரர்களுடன் புகைப்படம் ஒன்றும் எடுத்துக் கொண்டார்.
அவ்விருந்தில் கலந்துகொண்ட வறியோர் ஒவ்வொருவருக்கும், ஒரு கிலோ பாஸ்தா பொட்டலம் ஒன்றையும் பரிசாக வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏறத்தாழ, ஒருமணி 25 நிமிடங்கள், வறியோருடன் செலவிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம், 1 மணி 45 நிமிடங்களுக்கு, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் சென்றார்.
Source: New feed