
உண்மை, அமைதி மற்றும் நீதிக்காகத் தாகம் கொண்டுள்ள இன்றைய உலகிற்கு, பேரார்வத்தோடு கற்கப்படும் வரலாறு, நிறையக் கற்றுத்தர இயலும் மற்றும் கற்றுத் தருகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.
இத்தாலிய தேசிய திருஅவை வரலாற்று பேராசிரியர்கள் கழகம் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறத்தாழ அறுபது பிரதிநிதிகளை, வத்திக்கானின் அப்போஸ்தலிக்க மாளிகையில், சனவரி 12, இச்சனிக்கிழமை 12.30 மணியளவில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்களினால் ஏற்பட்ட தீமைகள் குறித்து சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இப்பூமியில் மனிதரின் பாதையை அழித்துள்ள ஏராளமான போர்கள் பற்றியும், அவைகளினால் இடம்பெற்றுள்ள தீய விளைவுகள் குறித்தும், ஞானம் மற்றும், துணிச்சலுடன் சிந்திப்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
திருஅவையின் அதிகாரப்பூர்வப் போதனைகளுக்கு, திருஅவை வரலாற்று பேராசிரியர்கள் ஆற்றி வருகின்ற சேவைக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, வரலாறு, எவ்வாறு வாழ்வின் ஆசிரியராக அமைந்துள்ளது என்பது பற்றிய தன் சிந்தனைகளையும் வழங்கினார். வரலாறு முன்னோக்கிச் செல்லும் பாதையை நமக்குக் காட்டுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இதனை மிகச் சில மாணவர்களே படிக்கின்றனர் என்றும் கூறினார்.
இத்தாலியத் திருஅவையின் முக்கியத்துவம்
இத்தாலியிலும், இத்தாலியத் திருஅவையிலும், கடந்த காலம் பற்றிய வளமையான சான்றுகள் உள்ளன, இவற்றை மிகவும் ஆர்வமுடன் பாதுகாத்தால் மட்டும் போதாது, மாறாக, வருங்காலத்தை நோக்கி, இக்காலத்தில் வாழ்வதற்கும் உதவ வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை, கடந்த காலத்தை அருங்காட்சியமாக மாற்றாமல், அது பற்றி ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு, இத்தாலிய திருஅவை வரலாறு முக்கியமானதாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.
வரலாற்றின் மையத்தில் இறைவார்த்தை
கடவுளின் வார்த்தை, வரலாற்றின் மையமாகவும், அடிநாதமாகவும் உள்ளது எனவும், எழுத்தில் பிறக்காத இறைவார்த்தை, மனிதரின் ஆய்விலிருந்து நமக்கு வந்ததல்ல, மாறாக, அது கடவுளால் நமக்கு வழங்கப்பட்டது எனவும், இது வாழ்வு முழுவதும் மற்றும் வாழ்வில் வெளிப்படுகின்றது எனவும், உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவார்த்தையான இயேசு கிறிஸ்து, வரலாற்றில் செயல்படுகிறார் மற்றும் வரலாற்றுக்குள் அதை மாற்றுகிறார் என்றும், இவர், மனிதரின் வரலாற்றில் மீட்பைக் கொணர்ந்தார் என்றும், இயேசுவின் பிறப்பால் வரலாறின் காலவரிசை அமைக்கப்பட்டது என்றும், இவரின் மீட்பளிக்கும் செயலை முழுமையாக ஏற்பது, வரலாற்று ஆசிரியரை அல்லது வல்லுனரை, உண்மைக்கு மிகவும் மதிப்புள்ளவர்களாக்கும் என்றும் திருத்தந்தை கூறினார்.
Source: New feed