யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10
அக்காலத்தில் இயேசு கூறியது: “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும்.
ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.”
இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
மீண்டும் இயேசு கூறியது: “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு
——————————————
தூய பாத்திமா அன்னை (மே 13)
நிகழ்வு
தாய் வயலில் வேலை செய்துகொண்டிருந்தாள். அவள் குழந்தை பக்கத்தில் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது. வேலை மும்மரத்தில் தாய் சிறிதுநேரம் குழந்தையைக் கவனிக்கவில்லை. திடீரென ஞாபகம் வந்து பார்த்தபோது குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள். அடுத்து ஒரு அடி எடுத்து வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும். கூட இருந்தவர்கள் பதைபதைத்தார்கள். ஆனால் அந்தத் தாய் சிறிதுகூட யோசிக்காமல் கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று, குழந்தையைப் பார்த்து, ”பாப்பா, அம்மா வீட்டுக்குக் கிளம்பிவிட்டேன். நீ வருகிறாயா, இல்லையா?” என்று சப்தம் போட்டுச் சொன்னாள். அடுத்த நிமிடம் குழந்தை திரும்பி தாயைப் பார்த்து ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டது. தாயன்பு அந்த இக்கட்டானநேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது.
அன்னைக்குத் தெரியும் பிள்ளையை எப்படிக் காப்பது என்று. அது போன்று இன்று நாம் கொண்டாடும் பாத்திமா அன்னைக்கும் தெரியும் பிள்ளைகளாகிய நம்மைக் காப்பது என்று.
வரலாற்றுப் பின்னணி
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், மேலை நாடுகளில் மிகவும் பயமுறுத்தக்கூடியதாகவே இருந்தது. முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒருநாடு இன்னொரு நாட்டின்மீது போர் தொடுக்கும் அபாயம், எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத சூழல், இப்படிப்பட்ட அபாயச் சூழலில் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இத்தகைய பின்னணியில் பாத்திமா அன்னையின் காட்சியானது நடைபெற்றது.
1916 ஆம் ஆண்டு ஒருநாள் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள கோவா டா இரியா என்ற ஊருக்குப் பக்கத்தில் லூசியா, பிரான்சிஸ்கா, ஜெசிந்தா என்ற மூன்று சிறுமிகள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்பாகத் தோன்றிய ஒரு வானதூதர் அவர்களிடம், “நான் விண்ணகத்திலிருந்து வந்திருக்கிறேன், நீங்கள் உலக அமைதிக்காக மன்றாடுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த ஆண்டு அதாவது 1917 ஆம் ஆண்டு மே 13 ஆம் நாள், முன்பு தோன்றிய அதே வானதூதர் கையில் நற்கருணையை ஏந்தி வந்து, அந்த மூன்று சிறுமிகளுக்குத் தோன்றி, “நற்கருணை ஆண்டவரே! உம்மை நான் விசுவசிக்கிறேன். உம்மை நான் நம்புகிறேன், உம்மை நான் ஆராதிக்கிறேன், உம்மை நான் நேசிக்கிறேன். உம்மை விசுவசிக்காத, உம்மை நம்பாத, உம்மை ஆராதிக்காத, உம்மை நேசிக்காத மக்களுக்காக மன்னிப்புக் கேட்கிறேன்” என்ற ஜெபத்தை அவர்கள் சொல்லச் சொல்லி அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
அவர் விடைபெற்றுச் சென்ற சில மணி நேரத்தில் வானத்திலிருந்து வெண்மேகம் ஒன்று இறங்கி வந்து லூசியா, பிரான்சிஸ்கா, ஜெசிந்தா என்ற அந்த மூன்று சிறுமிகள் இருந்த இடத்திற்கு முன்பாக இருந்த மரத்தில் தங்கியது. அதிலிருந்து பெண்மணி ஒருத்தி தோன்றினாள். அவள் அச்சிறுமிகளிடம், “ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி இங்கு வந்து நீங்கள் கூடவேண்டும். ஒவ்வொருநாளும் தவறாது ஜெபமாலை சொல்லவேண்டும். ரஷ்யா நாட்டு மக்கள் மனமாற ஜெபிக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்து போனார். இக்காட்சியைக் கண்ட அந்த மூன்று சிறுமிகளுக்கு மலைத்துப் போய் நின்றார்கள். அவர்கள் இக்காட்சியை தங்கள் ஊரில் இருந்தவர்களிடம் சொன்னபோது யாருமே நம்பவில்லை. ஏதோ உளறுகிறார்கள் என்று சொல்லி அவர்களை ஏளனமாகப் பார்த்தார்கள்.
காட்சியில் வந்த பெண்மணி சொன்னதுபோன்று அவர்கள் மூவரும் ஒவ்வொருநாளும் ஜெபமாலை சொல்லி, மக்களுடைய மனமாற்றத்திற்காக ஜெபித்தார்கள். ஜூலை 13 தேதி வந்தபோது அவர்கள் மூவரும் கோவா டா இரியா என்ற அந்த இடத்திற்குச் சென்றார்கள். சொன்னதுபோன்றே அந்தப் பெண்மணி அங்கு வந்தார். அவர் அவர்களிடம், நகரத்தின் வேதனை மிகுந்த காட்சியை காட்டினார். பின்னர் அவர், “ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும், நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும், அனைத்து ஆனமாக்கங்களையும் விண்ணகப் பாதைக்கு அழைத்துச் செல்லும். உமது சிறப்பான உதவி யாருக்குத் தேவையோ, அவர்களுக்கு உதவியருளும்” என்ற ஜெபத்தை சொல்லச் சொல்லி ஜெபிக்கச் சொன்னார்கள். அவர்களும் அவ்வாறே ஜெபித்தார்கள். பின்னர் அவர் அங்கிருந்து மறைந்துபோக சிறுமிகள் மூவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள்.
இந்த முறை அவர்கள் தாங்கள் கண்ட காட்சியை மக்களிடத்தில் சொன்னபோதும் மக்கள் நம்பவில்லை. அவர்கள் அவர்களை ஏளனமாகவே பார்க்கப்பட்டார்கள். தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதனால் அவர்கள் ஆகஸ்டு மாதம் 13 அங்கு செல்ல முடியவில்லை. 15 ஆம் தேதிதான் அங்கு சென்றார்கள். ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அவர்கள் அங்கு சென்றபோது, அப்பெண்மணி அவர்களுக்குச் தோன்றி, “மக்கள் தங்களுடைய தீய நாட்டங்களிலிருந்து விடுபடவேண்டும். இல்லையென்றால் இன்னொரு போர் மூளும்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன்பிறகு சிறுமிகள் தாங்கள் கண்ட காட்சியையும், அதில் சொல்லப்பட்ட செய்தியையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். இப்போது மக்கள் படிப்படியாக அதை நம்பத் தொடங்கினார்கள்.
1917 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் கோவா டா இரியா என்ற இடத்தில் ஏறக்குறைய எண்பதாயிரம் பேர் கூடியிருந்தார்கள். அப்போது ஒளிவன்ணமாய் அப்பெண்மணி காட்சி தந்து, “நானே ஜெபமாலை அன்னை. நீங்கள் அனைவரும் இரஷ்யாவை எனது மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்கவேண்டும்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். மரியாள் தோன்றிய சமயத்தில் நல்ல மழை பெய்தது. ஆனால் மூன்று சிறுமிகள் இருந்த அந்த இடம் மட்டும் நனையாமல் இருந்தது. மரியாள் அச்சிறுமிகளுக்கு வேறு பல காட்சிகளைத் தந்தார். அந்தக் காட்சிகளில், “பிரான்சிஸ்காவும் ஜெசிந்தாவும் விரைவிலே விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகும், லூசியா மட்டும் மண்ணகத்தில் உயிர்வாழப் போவதாகும் சொன்னார். மரியா சொன்னது போன்றே லூசியா தவிர மற்ற இரண்டு சிறுமிகளும் இறந்து விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். மரியா காட்சியில் சொன்னதுப் போன்று மக்கள் மனமாறாமல் தீயவழியில் சென்றதால் இரண்டாம் உலகப் போர் வந்தது..
அதன்பிறகு 1952 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி இரஷ்யா மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது, 1984 ஆம் ஆண்டு உலக நாடுகள் மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. இப்போது இரஷ்யா இறைவழியைக் கண்டுகொண்ட நாடாக விளங்குகின்றது.
பாத்திமா காட்சிகள் உணர்த்தும் உண்மை
தூய பாத்திமா அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், அன்னை தன்னுடைய காட்சிகளின் வழியாக நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஜெபமாலை சொல்லவேண்டும்
அன்னை தன்னுடைய காட்சியில் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லக்கூடிய செய்தி ஒவ்வொருநாளும் ஜெபமாலை சொல்லவேண்டும் என்பதாகும். ஜெபமாலை சொல்வதன்வழியாக நாம் மீட்பின் வரலாற்றை தியானித்துப் பார்க்கின்றோம். அதன்வழியாக நாம் அன்னையின் பாதுகாப்பையும் அன்பையும் உணர்கிறோம். ஆகவே, நாம் சொல்ல சொல்லக்கூடிய ஜெபமாலை சாதாரண ஒன்று அல்ல, அது வல்லமை நிறைந்தது என்ற உண்மையை உணர்ந்து வாழவேண்டும்.
Source: New feed