நான் என் ஆடுகளுக்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 27-30
அக்காலத்தில் இயேசு கூறியது: “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்.
அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள மாட்டார்.
அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர்.
அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
பாஸ்கா – 4ஆம் வாரம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு
மறையுரைச் சிந்தனை: பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு
நமக்காகத் தன்னுயிர் தரும் நல்லாயன் இயேசு
நம்முடைய தேசப்பிதா காந்தியடிகள் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. ஒருமுறை அவருக்கு தேயிலைத் தோட்டத்தில் வேலைபார்க்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆங்கிலேயர்கள் போதிய ஊதியம் தராமல் வஞ்சித்து வருகிறார்கள் என்றதொரு செய்தி வந்தது.
இதைக் கேள்விப்பட்டதும் அவர் மிகவும் வருந்தினார். எனவே தேயிலைத்தோட்ட முதலாளிகளைச் சந்தித்து, இதுகுறித்துப் பேசுவதாக முடிவு செய்தார். காந்தியடிகள் தங்களைப் பார்த்து பேசவருகிறார் என்பதைக் கேள்விப்பட்ட தேயிலைத்தோட்ட முதலாளிகளில் ஒருவர், “அவர் மட்டும் என்னிடம் கிடைத்தால், அவரைத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவேன்” என்று சூளுரைத்தார்.
காந்தியடிகள் அந்த தேயிலைத்தோட்ட முதலாளி சொன்னதைக் கேள்வியுற்று, ஒருநாள் இரவில், அவருடைய வீட்டிற்குத் தனியாளாய்ச் சென்றார். “நீங்கள் என்னைக் கண்டால், துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவேன் என்று சொன்னீர்களாமே, இதோ! நான் உங்களுக்கு முன்பாக வந்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னைச் சுடலாம்” என்றார். இவ்வளவு துணிச்சல்மிக்க ஒரு மனிதரை இதுவரைப் பார்த்திராத அந்த முதலாளி, காந்தியின் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய தேயிலைத் தோட்டத்தில் வேலைபார்க்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு நீதியான கூலி தருவதாகவும் வாக்களித்தார். தன்னுடைய நாட்டு மக்களுக்காக உயிரையும் துச்சமாக நினைத்து செயல்பட்ட காந்தியடிகள் உண்மையிலே ஒரு மிகச்சிறந்த தலைவர் – ஆயர் – தான்.
பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று திருச்சபையால் நல்லாயன் ஞாயிராகக் கொண்டாடப்படுகிறது. இன்றையநாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள், “இயேசு எப்படி ஒரு நல்ல ஆயனாக இருக்கிறார்” என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது.
தொடக்க காலத்தில் யூத சமூகம் ஒரு நாடோடிச் சமூகமாகவே இருந்தது. அத்தகைய தருணங்களில் அவர்கள் ஆடுமேய்பதையே தங்களுடைய பிரதானத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். மேலும் தங்களை ஆளக்கூடிய தலைவர்களை/ கடவுளை ஆயராகவும், தங்களை அவருடைய மந்தையாகவும் பார்த்தார்கள் (திபா 23). மீட்பின் வரலாற்றில் வரக்கூடிய மோசே முதல் தாவீது அரசர் வரை ஆடுமேயத்தவர்கள்தான் என்பது நாம் அனைவருமே அறிந்த ஓர் உண்மை. ஆண்டவர் இயேசு அத்தகைய பின்னணியிருந்து வருவதால் இறைமகனாகிய தன்னை ஓர் ஆயனாகச் சித்தரிக்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு “நல்லாயனாகிய நான் ஆடுகளை முழுமையாக அறிந்திருக்கிறேன் என்றும், அவற்றுக்கு நிலைவாழ்வைக் கொடுக்கிறேன்” என்றும் கூறுகிறார். அதேபோன்று திருவெளிப்பாட்டு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், ஆட்டுக்குட்டியாகிய இயேசு நீரோடைக்கு அழைத்துச் செல்வார் என்றும், கண்ணீரைத் துடைப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வார்த்தைகளைக் கூர்ந்து நோக்கும்போது ஓர் ஆயன் என்று சொன்னால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாக எடுத்துக்கூறுகிறது.
இன்று நம்மை ஆளக்கூடிய தலைவர்கள் நம்மை முழுமையாக அறிந்துவைத்திருக்கிறார்களா?; நமது தேவைகளை எல்லாம் நிவர்த்தி செய்கிறார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் ஆண்டவரும், நல்ல ஆயனுமாகிய இயேசு நம்மை முழுமையாக அறிந்துவைத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.
திருப்பாடல் 139:2 ல் வாசிப்பதுபோல இறைவன் நாம் அமர்வதையும், எழுவதையும், நமது எண்ணங்களையும் அறிந்து வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் தாயின் வயிற்றில் நாம் உருவாகுமுன்னே நம்மை அறிந்துவைத்திருக்கிறார். (எரேமியா 1:5). ஆகவே நல்லாயனாகிய இயேசு ஆடுகளாகிய நம்மை முழுமையாக அறிந்துவைத்திருக்கிறார் என்பது இதன்மூலம் நாம் கண்டுகொள்ளக்கூடிய உண்மையாக இருக்கிறது.
அடுத்ததாக நல்லாயனாகிய இயேசு நம்மை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல் நமக்கு நிலைவாழ்வினையும் தருபவராக இருக்கின்றார். யோவான் நற்செய்தி 10:10 ல் வாசிக்கின்றோம், “ஆடுகள் வாழ்வுபெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு இந்த மண்ணுலகிற்கு வந்தேன்” என்று ஆண்டவர் இயேசு கூறுவதாக படிக்கின்றோம். இன்று நம்மை ஆளும் தலைவர்கள் நமக்கு அமைதியான, நிம்மதியான வாழ்வினை வழங்குகிறார்களோ? இல்லையோ நல்லாயனாகிய இயேசு நமக்கு நிலையான வாழ்வினை வழங்குகின்றார்.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும் பிறருக்கு வாழ்வை வழங்கும் வள்ளலாக இருக்கவேண்டும் என்பது இறைவார்த்தை நமக்குத் தரும் அழைப்பாக இருக்கின்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக திருக்கழுக்குன்றத்தைத் சேர்ந்த திரு.அசோகன் மற்றும் திருமதி. புஷ்பாஞ்சலி ஆகியோருடைய மகன் ஹிதேந்திரன், தன்னுடைய நண்பர்களைப் பார்ப்பதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படவே, அவன் நிலைகுலைந்து போனான்.
இதை அறிந்த அவனுடைய பெற்றோர்கள் கதறி அழுதார்கள். அவனைப் பிழைக்க வைப்பதற்காக என்னவெல்லாமோ செய்துபார்த்தார்கள். ஆனால் இறுதியில் அப்பல்லோ மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற ஹிதேந்திரனின் பெற்றோர்கள் அவன் ஏற்கனவே இறந்துபோய்விட்டான் என்றும், அவனுடைய மூளை மட்டும் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கிறது என்றும் அறிவுறுத்தப்பட்டார்கள்.
அப்போது அந்த பெற்றோர்கள் (இருவரும் மருத்துவர்கள்) ஒரு முடிவை எடுத்தார்கள். அது இன்றுவரைக்கும் யாருமே எடுத்திராத ஒரு முடிவு. அம்முடிவு என்னவென்றால் தன்னுடைய மகனின் உடல் உறுப்பை தானமாகக் கொடுக்க அவர்கள் முன்வந்தார்கள்.
இன்றைக்கு ஹிதேந்திரன் உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல மனிதர்களில் அவன் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறான். இந்த ஹிதேந்திரனைப் போன்றுதான் நல்லாயனாகிய இயேசுவும் நாம் அனைவரும் நிலைவாழ்வு பெறுவதற்காக தன்னுடைய உயிரையே தருகின்றார்.
இந்த வேளையில், நல்லாயனாகிய இயேசுவுக்கு உகந்த மக்களாக/மந்தையாக எப்படி இருக்கவேண்டும் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்கு ஆடுகளாகிய நாம் ஆயனின் குரலுக்குச் செவிமடுக்கவேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கின்றோம், “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிகொடுக்கின்றன” என்று. ஆம், ஆடுகள் ஆயனின் குரலுக்குச் செவிமடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றப்பட்டு அமைதியான வாழ்வு வாழமுடியும். ஒருவேளை ஆடுகள் தங்களுடைய மனம்போன போக்கில் வாழ்ந்தால் இறுதியில் அழிவுதான் மிஞ்சும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பவுலும், பர்னபாவும் இறைவனின் வார்த்தையை அந்தியோக்கு நகருக்குச் சென்று, அங்கே உள்ள தொழுகைக்கூடத்தில் கற்பித்தபோது, அங்கே இருந்த யூதமதம் தழுவியவரும், யூதரல்லாதவரும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள் என்று வாசிக்கின்றோம். ஆகவே ஆயனின் மந்தையாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் ஆயனின் குரலுக்குச் செவிகொடுத்து, அவரைப் பின்தொடரவேண்டும் என்பதே இங்கே சுட்டிக்காட்டப்படும் செய்தியாக இருக்கிறது.
இப்படி நாம் ஆயனின் குரலுக்குச் செவிமடுத்து, அவரைப் பின்தொடர்ந்தோம் என்றால் முதல் வாசகத்தில் கேட்பதுபோன்று கடவுள் நம்முடைய கண்ணீரை எல்லாம் துடைத்துவிடுவார். மேலும் இணைச்சட்ட நூல் 4:40 ல் வாசிக்கின்றோம், “நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும், கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்” என்று.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஆயனின் குரல் கேட்டு, அவரைப் பின்தொடர்ந்து வாழும் மக்களாவோம். பல நேரங்களில் நாம் நம்முடைய மனம்போன போக்கில் வாழலாம். அப்படி வாழும்போது இறைவன் அளிக்கும் கொடைகளை, ஆசிரை நம்மால் நிச்சயமாகப் பெறமுடியாது. எனவே நாம் இறைவனின் குரல் கேட்டு, அவர் வழியில் நடக்கும் மக்களாவோம்.
ஒரு ஊரில் ஒரு பணக்காரத் தந்தை இருந்தார். அவருக்கு ஒரு புதல்வன் இருந்தான். அவன் ஊதாரித்தனமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தான். தந்தை அவனுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லியும் அவன் கேட்காமல், தன்னுடைய மனம்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருந்தான். இதனால் அவர் பெரிதும் மனம் வருந்தினார்.
ஒருநாள் தந்தை மரணப்படுக்கையில் வீழ்ந்தார். அப்போது அவர் தன்னுடைய மகனை தன்னருகே அழைத்து, “இப்போதாவது நீ என்னுடைய அறிவுரையைக் கேள்” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.
“இதுநாள்வரை நான் சேர்த்துவைத்த செல்வத்தை எல்லாம் நம்முடைய நிலத்தில் புதைத்து வைத்திருக்கிறேன். உனக்கு வேண்டுமானால் நீ போய் நிலத்தைத் தோண்டி, அதனை எடுத்துக்கொள்” என்று அவனிடம் சொன்னார். உடனே அவன் ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு, நிலத்தைத் தோண்டத் தொடங்கினான்.
Source: New feed