போர் என்ற தீமையை அழிப்பதும், முதல், மற்றும், இரண்டாம் உலகப் போர்களின் சாம்பலிலிருந்து வளர்ந்துள்ள மரத்தின் கனியாகிய அமைதியைப் பாதுகாப்பதும், ஐக்கிய நாடுகள் அவையின் முக்கியப் பணி என்று திருப்பீட உயர் அதிகாரி, ஒரு பன்னாட்டு இசை நிகழ்வில் வழங்கிய உரையில் கூறினார்.
முதல் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் முதல் நூறாம் ஆண்டு, நவம்பர் 11, கடந்த ஞாயிறன்று, கடைபிடிக்கப்பட்டதையடுத்து, நவம்பர் 12, இத்திங்களன்று, நியூ யார்க் நகரில், திருப்பீடமும், மால்டாவின் இறையாண்மை ஆணை என்ற அமைப்பும், இன்னும் சில திருஅவை அமைப்புக்களும் இணைந்து, ஓர் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.நா.அவை உறுப்பினர்களையும், ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளையும் வரவேற்றுப் பேசிய பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், முதல் உலகப் போரும் அதன் விளைவாக உருவான பல்வேறு சமுதாயக் கொடுமைகளும், பல கோடி மக்களின் உயிர்களை பலி வாங்கியுள்ளதெனக் குறிப்பிட்டார்.
முதல் உலகப்போரின் நூறாம் ஆண்டு நினைவை, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில், போர் கலாச்சாரம் முற்றிலும் நீக்கப்படவேண்டும் என்று விடுத்த விண்ணப்பத்தை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
இசை மேதை மொசார்ட் அவர்கள் உருவாக்கிய Requiem in D Minor என்ற இசையின் வழியே, முதல் உலகப்போரில் இறந்தோருக்கு நாம் மரியாதை செலுத்துவதோடு, இசை, நம் உலகில் அமைதிக் கலாச்சாரத்தை உருவாக்கும் என்பதையும் நினைவுறுத்துகிறோம் என்று பேராயர் அவுசா அவர்கள் எடுத்துரைத்தார்.
மனதிற்கு இதமளிக்கும் இசை, உலகின் பல பகுதிகளிலும் பரவி, இன்றும், போரின் கொடுமைகளை அனுபவித்துவரும் கோடான கோடி மக்களுக்கு, அமைதியைக் கொணரட்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் விண்ணப்பித்தார்.
Source: New feed