இத்திங்களன்று, உலக அளவில் சிறப்பிக்கப்பட்ட மனித உரிமைகள் நாளை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
“இறைவனின் சாயலால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும், தனக்கேயுரிய மதிப்பீடுகளை தன்னுள் கொண்டு, மீறமுடியாத மனித உரிமைகளை உள்ளடக்கியவர்” என இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டரில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இதே நாளன்று, தன் காலை மறையுரையின் தொடர்ச்சியாக, திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டரில், “கிறிஸ்து பிறப்பு விழாவை விசுவாசத்துடன் தயாரிப்பதற்கு உதவும் அருளைத் தர வேண்டும் என, திருவருகைக் காலத்தின் இரண்டாவது வாரத்தில் கேட்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டிசம்பர் 9, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “நம் வாழ்வில் நிறைக்கவேண்டிய காலியிடங்கள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளும் காலம் திருவருகைக் காலம், மேலும், நம் வீண்பெருமைகளின் கடினமான ஓரங்களை மிருதுவாக்கி, இயேசுவுக்கு இடம் உருவாக்கும் காலம், இத்திருவருகைக் காலம்” என எழுதியுள்ளார்.
இதற்கிடையே, இந்தியாவின் கடப்பா மறைமாவட்டத்தின் ஆயர் பிரசாத் கலேலா அவர்கள், பணி ஓய்வு பெறுவதற்கு அளித்த விண்ணப்பத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.
2008ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடப்பாவின் ஆயராக பணியாற்றி வந்துள்ள 56 வயது நிரம்பிய ஆயர் பிரசாத் அவர்கள் பணிஓய்வு பெறுவதையடுத்து, கடப்பா மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக, குண்டூரின் முன்னாள் ஆயர் காலி பாலி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், C9 எனப்படும் கர்தினால்களின் ஆலோசனை அவையின் 27வது கூட்டம், வத்திக்கானில் இத்திங்கள் முதல் புதன் முடிய இடம்பெற்று வருகிறது.
Source: New feed