உலகெங்கும், டிசம்பர் 3, இத்திங்களன்று, மாற்றுத்திறனாளர் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, மாற்றுத்திறனாளர்கள் அன்புகூரப்படவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
“எத்தனையோ மாற்றுத்திறனாளர்களும், துன்பத்தில் இருப்போரும், தாங்கள் அன்புகூரப்படுகிறோம் என்பதை உணரும்போது, வாழ்வை நோக்கி அவர்கள் உள்ளங்களை திறந்து வைக்கின்றனர்! ஒரு இதயத்திலிருந்து அன்பு வழிந்தோட உதவும் புன்னகைக்காக நாம் நன்றி சொல்வோம்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.
மேலும், சாந்தா மார்த்தா இல்லத்தில், திருப்பலியில் வழங்கிய மறையுரையின் தொடர்ச்சியாக, மற்றுமொரு டுவிட்டர் செய்தியை, இத்திங்களன்று, திருத்தந்தை வெளியிட்டார்.
“நமது நம்பிக்கையை புதுப்பித்து, புனிதப்படுத்தும் காலமாக திருவருகைக் காலம் அமைந்துள்ளது, அதன் வழியே, இக்காலம், மேலும் உண்மை நிறைந்த காலமாகத் திகழும்” என்ற சொற்களை, இத்திங்களன்று வெளியிட்ட இரண்டாம் செய்தியில் திருத்தந்தை பதிவு செய்தார்.
இதற்கிடையே, டிசம்பர் 2, துவங்கிய திருவருகைக் காலத்தையும், இதே நாளில் சிறப்பிக்கப்பட்ட அடிமை ஒழிப்பு உலக நாளையும் மையப்படுத்தி, இஞ்ஞாயிறன்று, இரு டுவிட்டர் செய்திகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.
“நம்மை சந்திக்கவரும் இறைவனை வரவேற்கும் காலம், திருவருகைக் காலம். எதிர்காலத்தை நோக்கித் திரும்பவும், நம்மை மீண்டும் சந்திக்கவரும் கிறிஸ்துவுக்காக நம்மையே தயாரிக்கவும் உகந்த காலம்” என்ற சொற்கள் இஞ்ஞாயிறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ஒரு டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.
“துன்புறுவோர் குறித்து அக்கறையற்ற நிலை என்ற திரைச்சீலையை அகற்றுவோம். அடிமைத்தனம் என்ற துயரமான உண்மை நிலையைக் குறித்து எவரும் இந்நாளில் தங்கள் பொறுப்புணர்வுகளைக் கை கழுவிவிட முடியாது” என்ற சொற்களை தன் மற்றொரு டுவிட்டர் செய்தியில் வெளியிட்டார், திருத்தந்தை
Source: New feed