என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி, “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.
பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.
ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?”
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மையசிந்தனை .
( இயேசுவின் சீடர்! )
மறையுரை .
ஆண்ட்ரூ கார்னகியைக் குறித்து எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?… ஸ்காட்லாந்திலிருந்து அமெரிக்காவிற்குச் சென்று, சின்னச் சின்ன வேலைகளைச் செய்து, பிறகு உலகின் மிகப்பெரிய எஃகு தொழிற்சாலை உரிமையாளராக உயர்ந்தவர்தான் ஆண்ட்ரூ கார்னகி. ஒருசமயம் அவரிடம் ஒருவர் கேட்டார், “இவ்வளவு பெரிய உயரத்தை எட்டும் முன், பலதரப்பட்ட சூழ்நிலைகளை, அவமானமான அனுபவங்களை சந்தித்து வந்திருப்பீர்கள்… அதையெல்லாம் எப்படி சமாளித்தீர்கள்?”.
ஆண்ட்ரூ கார்னகி அவரிடம் மிகவும் பொறுமையாகப் பதில் சொன்னார். “தங்கச் சுரங்கத்தில் இறங்கும்போது புழுதியும் மணலும் அழுக்கும் அப்பிக் கொள்கின்றன… அவற்றைக் கடந்து போனால்தான் தங்கம் கிடைக்கிறது. புழுதிக்குப் பயந்தால் தங்கம் எடுக்க முடியாது… சிரமங்களுக்குப் பயந்தால் சிகரம் தொட முடியாது”.
எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள் இவை. எப்படி சிரமங்களுக்குப் பயப்படும் யாரும் சிகரம் தொடமுடியாதோ, அதுபோன்று சிலுவைக்குப் பயப்படும் யாரும் இயேசுவின் சீடராக முடியாது. இயேசுவின் பொருட்டு வாழ்வில் வரும் சிலுவைகளைச் சுமக்கும் ஒருவரால் மட்டுமே இயேசுவின் சீடராக இருக்க முடியும். நற்செய்தியில் இயேசு கிறிஸ்து, தன்னுடைய பாடுகளைக் குறித்தும் தன்னைப் பின்பற்றி வருகின்றவர் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் குறித்துப் பேசுகின்றார். நாம் இவ்விரண்டையும் குறித்து சிந்தித்துப் பார்த்து, இயேசுவின் உண்மையான சீடராக இருப்பதற்கு முயற்சி செய்வோம்.
1) தன் பாடுகளைக் குறித்து முன்னறிவித்த இயேசு.
நற்செய்தியில் இயேசு கிறிஸ்து, தன்னுடைய பாடுகளைக் குறித்து முன்னறிவிக்கின்றார். இங்கு மட்டுமல்லாது, பல இடங்களிலும் இயேசு தன்னுடைய பாடுகளைக் குறித்து முன்னறிவிக்கின்றார்.
திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்து “இவரே கடவுளின் ஆட்டுக்குட்டி” (யோவா 1:29) என்று சொன்னதுபோக, எருசலேம் திருக்கோவிலின் அழிவைக் குறித்துப் பேசுகின்றபோதும் (யோவா 2:15) பாலைவனத்தில் வெண்கலப் பாம்பு உயர்த்தப்பட்டதைக் குறித்துப் பேசுகின்றபோதும் (யோவா 3: 14) யோனாவைக் குறித்துப் பேசுகின்றபோதும் (மத் 12: 38-40) இயேசு தன்னுடைய பாடுகளைக் குறித்து மிக வெளிப்படையாகவே பேசுகின்றார். இதன்மூலமாக இயேசு தான் யார் என்பதை சீடர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே இருந்தார். அப்படியிருந்தும் சீடர்களால் இயேசு சொன்னதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு முக்கியமான காரணம், சீடர்களுடைய மந்தமான நிலைதான் (யோவா 16:12).
தன்னுடைய பாடுகளைக் குறித்துப் பேசிவிட்டு, இயேசு தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்தும் பேசுகின்றார். நாம் அதைக் குறித்து இப்போது பார்ப்போம்.
2) தன்னலம் துறக்கவேண்டும்.
தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்துப் பேசும் இயேசு, அவர்கள் தன்னலத்தைத் துறந்தவர்களாக இருக்கவேண்டும் என்கின்றார. இயேசு செய்யும் இறையாட்சிப் பணி, எல்லாருமானது. அப்படிப்பட்ட பணியில் ஒருவர் தனக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடாது என்பதால், “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலத்தைத் துறக்கவேண்டும்” என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். உண்மையில் சுயத்தை அல்லது தன்னலத்தைத் துறக்கின்ற ஒருவரால் மட்டுமே இயேசுவின் சீடராக முடியும். அப்படித் துறக்காதவர் ஒருபோதும் இயேசுவின் சீடராக இருக்க முடியாது.
3) தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்பற்றவேண்டும்.
இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்ற ஒருவர் அடுத்ததாகச் செய்யவேண்டியது, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்பற்றவேண்டும். ‘குரு எவ்வழியோ, அவ்வழியே சீடர்களும்’ என்பதுபோல, இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்றவர் அல்லது அவருடைய சீடராக இருக்க விரும்புகின்றவர், அவரைப் போன்று சிலுவை நாள்தோறும் தூக்கிக்கொண்டு அவரைப் பின்பற்றவேண்டும். இன்றைக்குச் சிலுவையை சுமந்துவிட்டு நாளைக்குப் தூரக் கடாசிவிடலாம் என்பதில்லை. நாள்தோறும் சிலுவைத் தூக்கிக்கொண்டு, வேறு யாரையும் அல்ல, இயேசுவைப் பின்பற்றிச் செல்ல வேண்டும்.
இந்த மாணவர்களுக்கும் சீடர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். மாணவர்கள் என்பவர்கள் ஆசிரியர் சொல்வதை அப்படியே கேட்கக்கூடியவர்கள். ஆனால், சீடர்களோ ஒருபடி மேலே சென்று, ஆசிரியர் சொல்வதைக் கேட்பதோடு மட்டுமல்லாமல், அதைக் கடைப்பிடித்து வாழவேண்டும். இங்கு இயேசு விரும்புவது, தன்னைப் பின்பற்றி வருகின்றவர்கள் சீட்ரகளாக இருக்கவேண்டும் என்றுதானே ஒழிய, மாணவர்களாக அல்ல.
எனவே, இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்றவர் அவரைப் போன்று எல்லாவிதமான சிலுவைகளையும் தாங்கிக் கொள்ளவேண்டும், தேவைப்பட்டால் உயிரையும் தரவேண்டும். அதுதான் இயேசுவின் சீடருக்கு அழகு. அப்படிப்பட்டவர் தன் உயிரை இழந்தாலும், அதை நிலைவாழ்வுக்குக் காத்துக் கொள்வார்.
சிந்தனை.
‘சிலுவைகளே சிகரத்தில் ஏற்றிவைக்கும் ஏணிப்படிகள்’. இந்த உண்மையை உணர்ந்து, வாழ்வில் வரும் சிலுவைகளைத் தாங்கிக்கொண்டு இயேசுவின் வழியில் நடந்து, அவரது உண்மைச் சீடர்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed