உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32
அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர்.
பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.
அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, `அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்’ என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.
சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
அவர் அறிவு தெளிந்தவராய், `என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக் கொண்டார்.
உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.
தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், `அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.
தந்தை தம் பணியாளரை நோக்கி, `முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார்.
அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, `இதெல்லாம் என்ன?’ என்று வினவினார்.
அதற்கு ஊழியர் அவரிடம், `உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார்.
அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார்.
உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.
அதற்கு அவர் தந்தையிடம், `பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.
அதற்குத் தந்தை, `மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
மறையுரைச் சிந்தனை – தவக்காலம் நான்காம் ஞாயிறு
அளவற்ற அன்புகொண்ட ஆண்டவரோடு ஒப்புரவாகுவோம்.
ஒரு கோடீஸ்வரத் தந்தை இருந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன். தன்னுடைய மகன் எது கேட்டாலும் அதை உடனுக்குடன் வாங்கித் தருவார், ஒருபோதும் எதையும் அவர் இல்லை என்று சொல்லியதில்லை. அந்தளவுக்கு தந்தை அவனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தார்.
ஒருநாள் அவர் தன்னுடைய மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரிடம் சென்று, “என்னுடைய மகன் எப்படிப் படிக்கிறான்?” என்று கேட்ட, ஆசிரியரோ, “உங்கள் மகன் குறைந்த மதிப்பெண்களே எடுக்கிறான்; பணம் இருக்கிற திமிரில் யாரையும் மதிப்பதில்லை. ஊதாரித்தனமாக இருக்கிறான்” என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். இதைக்கேட்ட தந்தை மனம் ஒடிந்துபோனார். தன்னுடைய மகனை எப்படியாவது நல்வழிப்படுத்தவேண்டும் என்று நினைத்தார்.
மகனுக்குப் பிறந்தநாள் வந்தது. அன்று அவன் தந்தையிடம் வந்து, விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக தரவேண்டும் என்று கேட்டுவிட்டு தன் நண்பர்களோடு ஊர் சுற்றப் போய்விட்டான். இரவு நீண்டநேரம் கழித்துத்தான் அவன் வீட்டுக்கு வந்தான். அந்நேரம் வரைக்கும் தந்தை அவனுக்காகக் காத்திருந்தார். அவர் அவனிடம் பரிசுப் பொருளைக் கொடுத்துவிட்டு, “அன்பு மகனே! இதில் நீ கேட்ட பரிசுப் பொருளும், கூடவே ஒரு புத்தகமும் இருக்கிறது. இந்தப் புத்தகம்தான் என் வாழ்வில் மிகப்பெரிய உந்து சந்தியாக இருந்தது. நீயும் ஊதாரித்தனமாக இல்லாமல் கடமை உணர்வோடு வேலை பார்க்க இது உனக்கு உதவியாக இருக்கும்” என்றார். இதைக்கேட்ட மகனால் தந்தையின் பேச்சை பொறுக்க முடியவில்லை. தந்தை தன்னைக் குத்திக்காட்டி பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டு, அவர் கொடுத்த பரிசுப்பொருளை தூர வீசி எறிந்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறினான்.
வருடங்கள் பல உருண்டோடின. ஆனால் தந்தையோடு மட்டும் அவன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன்னுடைய வைராக்கியத்தோடு கூடிய கடின உழைப்பால் அவன் மிகப்பெரிய தொழிலதிபராக மாறி, தன்னுடைய நிறுவனத்தில் பொறுப்புடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒருநாள் அவனுக்கு தந்தை இறந்த செய்தி வந்தது. அவனும் இறுதியாக தன்னுடைய தந்தையைப் பார்க்கச் சென்றான். அங்கே தந்தையின் உடல் இருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பொட்டலம் இருந்தது. அது முன்பொருநாள் அவனுடைய தந்தை அவனுக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தது. அந்தப் பொட்டலத்தை அவன் பிரித்துப் பார்த்தான். அதில் அவன் கேட்ட விலை உயர்ந்த பைக்கின் சாவி இருந்தது. அப்போதுதான் அவன் உணர்ந்தான். தந்தை தன்னை எந்தளவுக்கு அன்பு செய்திருக்கிறார் என்று. காலம் முழுவதும் இப்படித் தந்தையின் உண்மையான அன்பை உணராமல் இருந்துவிட்டோமே என்று மனம் வருந்தி அழுதான்.
தவக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் “அளவுகடந்த அன்புகொண்டிருக்கும் கடவுளோடு ஒப்புரவாகுங்கள்” என்ற சிந்தனையை வழங்குகிறது. இரக்கமும், அன்பும் கொண்ட ஆண்டவரோடு ஒப்புரவாகவேண்டும் என்பதுதான் இன்றைய நாள் வாசகங்களின் சாராம்சமாக இருக்கிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் புகழ்பெற்ற உவமைகளில் ஒன்றான ஊதாரி மைந்தன் உவமையை வாசிக்கின்றோம். இவ்வுவமையை ‘ஊதாரிமைந்தன் உவமை’ என்று சொல்வதைவிடவும், ‘ஊதாரித்தந்தை உவமை’ என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இவ்வுவமை தந்தையின் – தந்தை கடவுளின் – அளவு கடந்த இரக்கத்தையும், அன்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இப்போது தந்தை தன் இளைய மகன் மீது அதாவது ஊதாரி மகன்மீது எந்தளவுக்கு இரக்கம் கொண்டிருந்தார் என்பதை சித்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக இளையமகன் தந்தையிடம் வந்து, சொத்தில் தனக்குள்ள பங்கை பிரித்துத்தருமாறு கேட்கும்போது அவர் அவனுக்கு (அவர்களுக்கு) சொத்தை பகிந்தளிக்கிறார் என்று வாசிக்கின்றோம். பொதுவாக ஒரு யூதத் தந்தையானார் சொத்தை அப்படி பகிர்ந்தளிக்க முடியாது. ஏனென்றால் இணைச்சட்ட நூல் 21:17 ல் சொல்லப்படுகிறது ‘தலைச்சன் பிள்ளைக்கு சொத்தில் இரண்டு பங்குதரவேண்டும்’ என்று. அப்படியானால் உவமையில் வரும் தந்தையானார் சொத்தில் மூத்தவனுக்கு இரண்டு பங்கும், இளையமகனுக்கு ஒருபங்கும் தந்திருக்கவேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் சொத்தை அவர்களுக்குப் சமமாகப் பகிர்ந்தளித்தார் என்றால் இது தன்னைவிட்டுப் பிரிந்துபோகும் இளையமகன் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இப்படிச் செய்கிறார். இது ஒருவிதத்தில் தந்தையின் இரக்கத்தையே காட்டுகிறது.
இரண்டாவதாக ஊதாரித்தனமாக வாழ்ந்த இளையமகன் தன்னுடைய தவறை உணர்ந்து தந்தையிடம் திரும்பிவரும்போது, அவன் தொலையில் வரும்போதே தந்தை பார்த்துவிட்டு ஓடோடிச்சென்று அவனைக் கட்டித்தழுவி முத்தமிடுகிறார். அப்படியானால் தந்தை தன்னுடைய மகன் எப்போது தன்னிடம் திரும்பி வருவான் என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்ததைக் காட்டுகிறது.
இந்த இடத்தில் நாம் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஓவியரான ரேம்பரன்ட் (Rembrandt) என்பவர் வரைந்த ‘ஊதாரி மைந்தன் ஓவியத்தை’ இணைத்துப் பார்த்து சிந்திப்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் Oil Painting என்ற வகையில் உருவாகி இருக்கும் அந்த ஓவியத்தில் தவறான வாழ்வு வாழ்ந்து, மனந்திரும்பி வரும் இளைய மகன் தன்னுடைய தந்தையின் பாதத்தில் விழுந்து மன்னிப்புக் கேட்கின்றான். அப்போது தந்தையானார் அவனை இருகரத்தால் மார்ப்போடு அணைத்துகொள்கிறார். அந்த இருகைகளில் வலக்கையானது தாயின் கைபோன்று இருக்கிறது. அதாவது மனம்மாறி வரும் பிள்ளையை கடவுள் ஒருதாயைப் போன்று தேற்றி அரவணைக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.
மூன்றாவதாக உவமையில் இளையமகன் தந்தையிடம் வந்து, தன்னுடைய தவறை அறிக்கையிட்ட உடன், தந்தையானவர் தன்னுடைய பணியாளர்களிடம், “முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனை உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றை அடியுங்கள். நாம் விருந்துண்டு மகிழ்வோம்” என்கிறார். இங்கே கையில் மோதிரம் அணிவது என்பது இளையமகனை தந்தையானவர் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொள்வதற்குச் சமமாக இருக்கிறது.
ஆக ஊதாரித்தனமாக வாழ்க்கை வாழ்ந்த இளையமகன் தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும்போது, அவனை அவனுடைய தந்தை மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டதுபோல, தந்தைக் கடவுளும் நாம் செய்யும் தவறுகளை மனதார மன்னித்து ஏற்றுக்கொள்வா
Source: New feed