இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்குள் நுழையமாட்டார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16
அக்காலத்தில் சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.
இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.
இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மையசிந்தனை .
குழந்தைகளும் இறையாட்சியும் .
மறையுரை .
அது ஒரு மழலையர் பள்ளி. அந்தப் பள்ளியில் அன்று நன்றி தெரிவிக்கின்ற நாள். முதல் வகுப்பு ஆசிரியை தன் மாணவர்களிடம் தங்கள் நன்றிக்குரிய மனிதரையோ, பொருளையோ படமோ வரையச் சொன்னார். பலரும் பல படங்களை வரைந்தார்கள். ஒரு சிறுவன் மட்டும் ஒரு கையின் படத்தை வரைந்தான். “அது யாருடைய கை” என்று ஆசிரியை கேட்டபோது, “டீச்சர்! உங்களுடைய கை” என்றான்.
உடனே ஆசிரியை, அந்தச் சிறுவனிடம், “மற்ற எல்லாரும் மனிதர்களுடைய படத்தை வரைந்திருக்கும்போது, நீ மட்டும் ஏன் கையை வரைந்து வைத்திருக்கிறாய்?” என்று கேட்டதற்குச் சிறுவன், “இந்தக் கைதான் என் பிஞ்சு விரல்களைப் பிடித்து எழுதக் கற்றுக்கொடுத்தது; இந்தக் கைதான் என் விரல் பிடித்து அழைத்துவந்தது; இந்தக் கைதான் என் கன்னத்தை வருடிக்கொடுத்தது; இந்தக் கைதான் என்னுடைய தலையைத் தடவிக் கொடுத்தது” என்று விளக்கம் அளித்தான்.
குழந்தைகள் வெள்ளை உள்ளத்தவர்; உள்ளதை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடிகள்; வித்தியாசமாக யோசிக்கக்கூடியவர்கள். இப்படிப்பட்டவருக்கே இறையாட்சிக்கு உரியது என்று இயேசு சொன்னதில் வியப்பேதும் இல்லை.
1) குழந்தைகளின் பெற்றோரை அதட்டிய சீடர்கள் .
நற்செய்தியில், ஒருசில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள்மீது இயேசு ஆசி வழங்கவேண்டும் என்று அவர்களை இயேசுவிடம் தூக்கிக்கொண்டும் கூட்டிக்கொண்டும் வருகின்றார்கள். யூத இரபிக்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்குவது வழக்கமாக நடைபெறுகின்ற ஒரு செயல். அந்தமுறையில்தான் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வருகின்றார்கள். ஆனால், இயேசுவோடு இருந்த அவருடைய சீடர்களோ, பெற்றோர்களை இயேசுவை அணுகவிடாதவாறு அதட்டுகிறார்கள்.
இயேசுவின் சீடர்கள், குழந்தைகளின் பெற்றோர்களை ஏன் அதட்டுகின்றார்கள் என்று சிந்தித்துப் பார்ப்பது தேவையான ஒரு காரியம். முதலாவது, இயேசுவின் சீடர்கள் அவருக்குப் பாதுகாப்புத் (!) தரவேண்டும் என்று நினைத்தார்கள். ஏனெனில், பலர் அவரிடம் வருவதும் போவதுமாய் இருந்ததால், இயேசு எப்போதும் பரபரப்பாகவே இருந்தார். இதைக் கருத்தில் கொண்டு சீடர்கள் அவருக்கு ஓய்வுதரவேண்டும், பாதுகாப்புத் தரவேண்டும் என்ற நோக்கில், தங்களுடைய குழந்தைகளுக்கு ஆசி வேண்டி வந்த குழந்தைகளின் பெற்றோர்களை அதட்டுகிறார்கள்.
இயேசுவின் சீடர்கள் இவ்வாறு நடந்துகொண்டதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. அது என்னவெனில், யூத சமூகத்தில் குழந்தைகள் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கப்படவில்லை. இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தபோது, மக்களின் எண்ணிக்கையை 4000, 5000 என்று கணக்கிட்டபோது குழந்தைகள், பெண்கள் நீங்கலாகத்தான் கணக்கிட்டார்கள். அப்படியென்றால், குழந்தைகள் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அதனால்தான் குழந்தைகள் எல்லாம் எதற்கு இயேசுவிடமிருந்து ஆசி பெறவேண்டும் என்று சீடர்கள், அக்குழந்தைகளின் பெற்றோரை அதட்டுகிறார்கள். இதைக் கண்டுதான் இயேசு தன் சீடர்கள்மீது கோபம் கொள்கின்றார்.
2) சிறுபிள்ளைகளை தன்னிடம் வரச் சொன்ன இயேசு .
சிறு பிள்ளைகளையும் குழந்தைகளையும் ஒரு பொருட்டாகவே கருதாத யூத சமூகத்திற்கு, அக்குழந்தைகளே இறையாட்சி உரியவர்கள் என்று இயேசு உரக்கச் சொல்கின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், யாரை இந்த சமூகம் ஒன்றுக்கும் உதவாதவர்கள், ஒரு பொருட்டாகக் கூட கருதப்படத் தகுதியற்றவர்கள் என்று நினைத்தோ, அவர்களையே இறையாட்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் இயேசு முன்மொழிகின்றார்.
3) குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றானவர்கள் .
இயேசு, ‘இறையாட்சி இத்தகையோருக்கே உரியது’ என்று சொல்லக்காரணம் அவர்களிடம் மாசுமருவற்ற தன்மையும் தாழ்ச்சியும் நம்பிக்கையும் இருப்பதால்தான். பெரியவர்களிடம், தான் என்ற ஆணவம், கோபம் இதுபோன்ற தீய குணங்கள் நிறைந்து இருக்கின்றன. குழந்தைகள் அப்படியில்லை, அவர்கள் வெள்ளை மனத்தவர்களாக இருக்கின்றார்கள். மேலும் அவர்கள், நான் பெரியவன், உயர்ந்தவன், எல்லாம் தெரியவன் என்று ஆணவத்தோடு இருப்பதோடு கிடையாது. பெரியவர்கள் (!) என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் அப்படி இருக்கின்றார்கள். ஆனால், குழந்தைகள் தாழ்ச்சிக்கு இலக்கணமாக இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை, மூத்தோர்களை நம்பியே வாழக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். இது கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கு இணையாக இருக்கின்றது. இப்படியெல்லாம் இருப்பதால்தான் இயேசு இறையாட்சி இத்தகையோருக்கே உரியது என்கின்றார்.
நாமும் குழந்தைளின் உள்ளத்தோடு வாழ்ந்தோமெனில் இறையாட்சியை உரித்தாக்கிக் கொள்வோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.
சிந்தனை .
‘தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்’ (மத் 5:8) என்பார் இயேசு. நாம் குழந்தைகளைப் போன்று தூய மனத்தவராய் வாழ்வோம். அதன்வழியாக இறையாட்சியை நமக்கு உரித்தாக்கிக் கொண்டு, இறையருளை நிறைவாய் பெறுவோம்.
Source: New feed