நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.”
மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————–
மறையுரைச் சிந்தனை
நீங்கள் கேட்கும்முன்பே உங்கள் தேவைகளை உங்கள் விண்ணகத்தந்தை அறிந்து வைத்திருக்கிறார்
வியாபாரி ஒருவர் பெரிய கடை ஒன்றை நடத்தி வந்தார். ஆனால் அவருக்குத் தொழிலில் நட்டத்திற்கு மேல் நட்டம். கடன் வாங்கியும் வியாபாரம் நடத்தி வந்தார். அப்போதும் அவரைப் பிடித்திருந்த தரித்திரம் அவரை விட்டுப் போகவில்லை. இதனால் அவருக்குப் பின்னால் எப்போதும் கடன்காரர்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.
ஒருகட்டத்தில் நிம்மதியை இழந்த அந்த வியாபாரி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திற்கு வந்தார். அதனால் தன்னுடைய வீட்டின் கதவுகளை எல்லாம் அடைத்துக்கொண்டு, தான் வாங்கியிருந்த விஷக் குப்பியை எடுத்துக் வாயில் வைக்கத் தொடங்கினார்.
அப்போது அவருடைய வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ‘இந்த நேரத்தில் யார் கதவைத் தட்டுகிறார்கள்?’ என்று ஒரு நிமிடம் விஷம் குடிக்கும் எண்ணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, கதவைத் திறந்து வெளியே வந்தார். அங்கே அஞ்சல்காரர் கையில் தபாலை வைத்துக்கொண்டு காத்திருந்தார். அதை அவரிடமிருந்து பெற்று திறந்து பார்த்த வியாபாரிக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ஏனென்றால் அவர் ஒரு வாரத்திற்கு முன்பாக வாங்கியிருந்த லாட்டரிக்கு ஒரு கோடி ரூபாய் பணம் பரிசாக விழுந்திருந்தது. அப்போதுதான் அவர் உணர்ந்துகொண்டார் கடவுள் தன்னைக் கைவிட்டுவிடவில்லை என்று.
அந்த அஞ்சல்காரர் சிறிது நேரம் காலதாமதமாக வந்திருந்தாலும் வியாபாரியின் கதை அவ்வளவுதான். ஆனாலும்கூட கடவுள் அவருக்குத் தகுந்த நேரத்தில் உதவி செய்திருக்கிறார் என்கிறபோதுதான் கடவுள் நம் ஒவ்வொருவரின் தேவையையும் அறிந்து வைத்திருக்கிறார் என்பதையும், தக்க நேரத்தில் நமக்கு உதவிடுவார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நீங்கள் கேட்கும் முன்பே உங்கள் தேவைகளை உங்களுடைய விண்ணகத்தந்தை அறிந்து வைத்திருக்கிறார்” என்று. ஆம், மேலே சொல்லப்பட்ட கதையில் கடவுள் வியாபாரியின் தேவையை அறிந்து வைத்திருந்ததால்தான் அவருக்குத் தக்க நேரத்தில் உதவிட முடிந்தது. அதுபோன்று நம்முடைய தேவைகளையும் கடவுள் அறிந்துவைத்திருக்கிறார் என்பது ஆழமான உண்மை.
நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து நாம் எப்படி ஜெபிக்கவேண்டும் என்பதை நமக்குக் கற்றுத் தருகிறார். அதற்கு முன்னதாக ஜெபம் என்பது எப்படி இருக்கக்கூடாது என்பதையும் கற்றுத் தருகிறார். மக்கள் பார்க்கவேண்டும் என்றோ அல்லது மிகுதியான வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போவது உண்மையான ஜெபமாக இருக்காது என்பதை மிக ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். மேலும் ஒரு ஜெபம் என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதையும் மிக அழகாக எடுத்துரைக்கிறார்.
இயேசு நமக்குக் கற்றுத் தந்திருக்கும் “கர்த்தர் கற்பித்த ஜெபத்தில்” இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முதலாவது பகுதி கடவுளைப் போற்றுவதாகவும், இரண்டாவது பகுதி நமது தேவைகளை எடுத்துரைப்பதாகவும் இருக்கின்றது. நமது தேவைகளை எடுத்துச் சொல்லியே கடவுளைச் சோர்வடையச் செய்துவிட்ட நமக்கு இயேசு கற்றுத் தந்திருக்கும் ஜெபம் சற்று வித்தியாசமானதாக இருக்கின்றது. ஏனென்றால் இயேசு கற்பித்த ஜெபத்தில் இறைவனைப் புகழ்தல்தான் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்துத்தான் நமது வேண்டுதல்களை, விண்ணப்பங்களை எடுத்துச் சொல்லுதல் எல்லாம்.
இச்செபத்தில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் இயேசு கிறிஸ்து கடவுளை தந்தையே! என்று அழைக்கிறார். அதாவது ஒரு தந்தையிடம் மகன்/மகள் எப்படியெல்லாம் உறவாடுகிறாரோ அதுபோன்று நாமும் உறவாடி, உரையாடி ஜெபிக்கவேண்டும் என்பதை இயேசு நமக்குக் கற்றுத் தருகிறார்.
ஆகவே நமது தேவைகளை எல்லாம் அறிந்து வைத்திருக்கின்ற தந்தை கடவுளிடம் ஒரு தந்தையிடம் உறவாடுவதுபோன்று நாம் உறவாடுவோம். பிள்ளைகளுக்கு எந்த நேரத்தில் என்ன தேவை என்பதை அறிந்து வைத்திருக்கும் கடவுள் நமக்கு எல்லா ஆசிரும் அளித்து, முடிவில்லா வாழ்வைத் தருவார்.
Source: New feed