ஒரு காலத்தில் குயோன் (Guyon) என்றொரு இளம்பெண் இருந்தாள். அவளுக்கு கடவுள்மேல் அளவுகடந்த அன்பும் பக்தியும் இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல குயோனுக்கு தான் மிகவும் அன்புசெய்யும், வணங்கும் கடவுளைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் கடவுளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆனால், எங்கெல்லாமோ தேடியும் அவளால் கடவுளைக் கண்டுகொள்ள முடியவில்லை.
இதற்கிடையில் குயோனுக்குத் திருமணம் நடைபெற்றது. அவளை மணந்துகொண்ட ஆடவனோ கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாதவன். அது மட்டுமல்லாமல், கடவுளே கதியெனக் கிடந்த குயோனை அவன் அப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று கடுமையாகக் கண்டித்து வந்தான். இது குயோனுக்கு கடவுள்மீது இன்னும் அதிகமான ஈடுபாட்டைக் கொடுத்தது. இதனால் அவள் முன்பை விட அதிகமாகக் கடவுளைத் தேடத் தொடங்கினாள்.
ஒருநாள் அவளுடைய ஊருக்கு தூர தேசத்திலிருந்து துறவி ஒருவர் வந்தார். அவரைச் சந்தித்த குயோன் தன்னுடைய விரும்பத்தை அவரிடத்தில் எடுத்துச் சொன்னாள். அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அந்தத் துறவி சொன்னார், “இத்தனை நாளும் நீ கடவுளை வெளியேதான் தேடிக்கொண்டிருக்கின்றாயா?.. இனிமுதல் அவரை உன் உள்ளத்தில் தேடு, அவரை நிச்சயம் கண்டுகொள்வாய்” என்றார். துறவி சொன்ன வார்த்தைகள் குயோனுக்கு வித்தியாசமாக இருந்தாலும், அவள் கடவுளைத் தன் உள்ளத்தில் தேடத் தொடங்கி, கடைசியில் கண்டுகொள்ளவும் செய்தார்.
இன்றைக்குப் பலர் கடவுளை எங்கெல்லாமோ தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கடவுளைத் தங்களுடைய உள்ளத்தில் தேடத் தொடங்கினால், நிச்சயம் கண்டுகொள்வார்கள் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைகுரியது.
யோவானின் சீடர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்தல்
நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவான் தனது இரண்டு சீடர்களோடு (யோவான், அந்திரேயா) நின்றுகொண்டிருக்கும்போது, இயேசு அப்பக்கமாக வருகின்றார். உடனே யோவான் தன் இரண்டு சீடர்களிடம், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று இயேசுவைச் சுட்டிக்காட்டுகின்றார். இதைத் தொடர்ந்து, யோவானின் இரண்டு சீடர்களும் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றார்கள்.
இதுவரைக்கும் தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்கள், இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கிறார்களே என்று யோவான் வருந்தவில்லை, மாறாக அவர் அதில் மகிழ்ச்சி அடைகின்றார். திருமுழுக்கு யோவான் மெசியாவின் வருகைக்காகத்தான் ஆயத்தம் செய்யவந்தார். இயேசு வந்ததும், அவர் வளரவேண்டும், நான் குறையவேண்டும் (யோவான் 3:30) என்ற மனநிலையோடு தனது சீடர்களை இயேசுவிடத்தில் அனுப்பிவைக்கின்றார்.
சீடர்களின் பார்வையைக் கூர்மைப்படுத்திய இயேசு
யோவான் தன் சீடர்களிடம் இயேசுவைச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவர்கள், இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றார்கள். யோவானின் சீடர்கள் தன்னைப் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்த இயேசு அவர்களிடம், “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்கின்றார். யோவான் நற்செய்தியில் இயேசு பேசிய முதல் வாக்கியம் இதுதான். இதன்மூலமாக இயேசு, யோவானின் சீடர்களுடைய இலக்கை இன்னும் கூர்மைப்படுத்துகின்றார். ஏனென்றால் யோவானின் சீடர்களான யோவானும் அந்திரேயாவும், இயேசுவை மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் ஓர் அரசியல் மெசியாவாகவப் பார்த்திருக்கக்கூடும். ஒருவேளை அவர்கள் அப்படிப்பட்ட எண்ணத்தோடு தன்னிடத்தில் வந்திருந்தால், அதற்கான ஆள் நானில்லை, நீங்கள் தீவிரவாதக் கும்பலுடன் (Zealot) போய் சேர்ந்துகொள்ளுங்கள் என்று சொல்லுகின்ற நிலையில் இயேசுவின் கேள்வி இருக்கின்றது.
இன்றைக்கு பலர் இயேசுவை அற்புதம் நிகழ்த்துபவராகவும் இன்னபிற எண்ணத்தோடும் பார்த்து, அதன்பேரில் அவரைத் தேடிவருவதையும் நாம் இதோடு இணைத்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
ஆனால் யோவானின் சீடர்களோ, இயேசு கேட்ட கேள்விக்கான பதிலைச் சொல்லாமல், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்கின்றார்கள். இயேசுவும் அவர்கள் உண்மையான தேடலோடுதான் தன்னிடத்தில் வந்திருக்கிறார்கள் என்று அறிந்து, “வந்து பாருங்கள்” என்கின்றார். அவர்களும் வந்து இயேசுவோடு தங்குகிறார்கள். இறையனுபவம் பெற்றுக்கொள்கிறார்கள்.
இங்கே ஒரு செய்தியை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். யோவானின் சீடர்களுடைய தேடல் உண்மையானதாக இருந்தது. அதனால் அவர்களுக்கு இறையனுபவம் கிடைத்தது. இதைப்போன்று இறைவனை நோக்கிய நம்முடைய தேடலும் உண்மையுள்ளதாக இருக்கவேண்டும். இதைவிடுத்து, நம்முடைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொள்வதாக இருந்தால், எப்படி இஸ்ரேயல் மக்கள் இயேசுவிடத்தில் வந்தால் தங்களுக்கு வயிறார உணவு கிடைக்கும் என்ற மனநிலையோடு வந்தார்களோ, அதுபோன்று இருந்தால் நமக்கு உண்மையான இறையனுபவம் கிடையாது.
சிந்தனை
“உம்மைச் சரணடையும்வரை என் ஆன்மா அமைதிகொள்ளாது” என்பார் தூய அகுஸ்தினார். ஆம், நம்முடைய தேடல், நமது வாழ்வு இறைவனை நோக்கியதாக இருக்கவேண்டும். அதுமட்டுமல்லாமல், அத்தகைய தேடல் உண்மையானதாக இருக்கவேண்டும்.
ஆகவே, உண்மையான மனநிலையோடு இயேசுவைத் தேடிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed