இன்று திருஅவையானது பேதுருவின் தலைமைப்பீட விழாவை நினைவுகூர்ந்து கொண்டாடுகிறது.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பேதுருவிடம், உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்கிறார் (மத் 16:18,19). இவ்வாறு சொல்வதன் வழியாக இயேசு பேதுருவைத் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்துகிறார். அதனடிப்படையில் பேதுருவின் தலைப்பீட விழாவை நாம் கொண்டாடுகின்றோம்.
கி.பி. 354 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நாம் பேதுருவின் தலைமைத்துவத்தை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கிறோம். அதோடு குருத்துவத்தின் மேன்மைகளை உணர்ந்து பெருமைப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம்.
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பிறகு பேதுருதான் திருச்சபையின் தலைவராக இருந்து, அதனை கட்டிக்காத்தார் என்று சொன்னால் மிகையாகது. பெந்தேகோஸ்தே நாளில் பேதுருதான் யூதர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் முன்பாக எழுந்து நின்று இயேசுவைப் பற்றி உரையாற்றுகிறார். ஒரு சாதாரண, படிக்காத, பாரமராக இருந்த பேதுரு இப்படித் துணிவுடன் மக்களுக்கு முன்பாக பேசுகிறார் என்றால் அது கடவுளின் அருளால் அன்றி, வேறொன்றும் இல்லை.
மேலும் விவிலியத்தை நாம் ஆழமாகப் படிக்கும்போது பேதுரு ஆண்டவர் இயேசுவைப் போற்று செயல்பட்டார் என்ற உண்மையை நாம் உணர்த்துகொள்ளலாம். இயேசு கால் ஊனமுற்றவரைக் குணப்படுத்தியது போன்று, பேதுருவும் கால் ஊனமுற்றவரைக் குணப்படுத்துகிறார் (திப 3:6). இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டவர்கள் நலமடைந்தது போன்று, பேதுரு வீதிகளில் நடக்கின்றபோது, அவரது நிழல்பட்டவர்கள் குணமடைந்தார்கள் (திப 5:15). இயேசு இறந்தவர்களை உயிர்பித்ததுபோன்று பேதுருவும் தப்பித்தா என்ற பெண்ணை உயிர்ப்பிக்கின்றார். இவ்வாறு பேதுரு ஆண்டவர் இயேசுவின் பதிலாளாக, அவருடைய பிரதிநிதியாகச் செயல்படுகின்றார்.
பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கக்கேட்பது போன்று கடவுளின் மந்தையைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். கடவுளின் மந்தையைப் பேணிக் காப்பது நமது தலையாய கடமையும்கூட. ஆண்டவர் இயேசு உயிர்த்தபின்பு தன்னுடைய சீடர்களுக்கு மூன்றாம் முறையாக காட்சியளிக்கும்போது பேதுருவைப் பார்த்துச் சொல்வார், “என் ஆடுகளைப் பேணி வளர்” என்று. (யோவான் 21) ஆம், பேதுரு ஆண்டவர் இயேசு, தனக்குக் கொடுத்த அழைப்பின் பேரில் தொடக்கத் திருச்சபையை சிறப்பாகப் பேணி வளர்த்தார். திருச்சபை பல்வேறு துன்பங்களையும், இன்னல்களையும் சந்தித்தபோது பேதுரு உடனிருந்து அதனை பேணி வளர்த்தார்.
இன்றைய வாசகங்கள் தரும் இரண்டாவது பாடம். மந்தைக்கு, மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதே ஆகும். பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கின்றோம், “உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல், மந்தைக்கு முன்மாதிரியாக இருங்கள்” என்று.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும், குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் பிறருக்கு முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து காட்டவேண்டும்.
நம்முடைய இந்தியத் திருநாட்டின் முன்னால் பிரதம மந்திரியாக இருந்தவர் லால் பகதூர் சாஸ்திரி. தன்னுடைய நேர்மையான வாழ்வுக்கும், முன்மாதிரியான வாழ்வுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். ஒருநாள் அவருடைய மகன் அவரிடம் ஒரு கடிதத்தைக் கொண்டுவந்து, “அப்பா! எனக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகச் சம்பளத்துடன் வேலை கிடைத்திருக்கிறது” என்று சொன்னான்.
அதற்கு லால் பகதூர் சாஸ்திரி அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார், “கடிதத்தைப் பார்க்கும்போது இந்த வேலையானது உன்னுடைய திறமையின் அடிப்படையில் கொடுக்கப்படவில்லை, மாறாக உன்னுடைய தந்தை அதாவது நான் இந்தியப் பிரதமராக இருக்கிறேன் என்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. உண்மையைச் சொன்னால் இந்த வேலைக்கு நீ தகுதியற்றவன். ஆதலால் இந்த வேலையை நீ திருப்பிக் கொடுத்துவிடு, ஏனென்றால் இதைப் பார்க்கும் மக்கள், இவன் தன்னுடைய மகனுக்கு, தந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கியிருக்கிறான் என்று சொல்வார்கள். அந்த அவச் சொல் எனக்குத் தேவையில்லை” என்று சொல்லி தன்னுடைய மகனைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒருபோதும் நேர்மை தவறி நடக்கக்கூடாது என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. பேதுரு தன்னுடைய அழைப்புக்கு முன்பாக எப்படி இருந்தாலும், அழைப்புப் பின் முன்மாதிரியான ஒரு தலைவராக இருந்தார். தலைவர் என்பவர் சுயலமற்றவராக இருக்கவேண்டும் என்பார் பிளாட்டோ என்ற அறிஞர்.
ஆகவே, பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடும் நாம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நமது முன்மாதிரியான வாழ்வால் பேணிக் காப்போம். அதன் வழியாக இறையருள் பெறுவோம்.
Source: New feed