இயேசுவின் இரண்டாம் வருகையும் இறுதித் தீர்ப்பும்
முன்பொரு காலத்தில் பரோக்கா என்றொரு யூத இரபி இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். அதனால் மக்களுக்கு மத்தியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.
ஒருநாள் அவர் கடைத்தெருவிற்குச் சென்றபோது, அங்கே ஓர் ஓரத்தில் இறைவாக்கினர் எலியா இருப்பதைக் கண்டார். அவரைக் கண்டதும் பரோக்காவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. உடனே அவர் இறைவாக்கினர் எலியாவிடம் சென்று அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு பேசத் தொடங்கினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோதே இறைவாக்கினர் எலியாவிடம், “ஐயா! இங்கே இருக்கின்றவர்களில் இறுதித் தீர்ப்பின்போது யாராரெல்லாம் விண்ணகம் செல்ல தகுதியுள்ளவர்கள்?” என்று கேட்டார்.
அப்போது அவர் ஒரு மனிதரைச் சுட்டிக் காட்டினார். அவரிடம் சென்ற பரோக்கா, “ஐயா! நீங்கள் இப்போது என்ன வேலை செய்துகொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், “நான் சிறை அதிகாரியாக பணி செய்துகொண்டிருக்கின்றேன். என்னுடைய பணியே சிறையில் இருக்கின்ற ஆண் கைதிகளையும் பெண் கைதிகளையும் நல்ல முறையில் கவனித்து, அவர்களிடையே எந்தவிதமான அசம்பாவித நிகழ்வும் நடக்காதவாறு கவனித்துக் கொள்வதுதான்” என்றார். “நன்று” என்று சொல்லிவிட்டு அவர் அவரிடமிருந்து இறைவாக்கினர் எலியாவிடம் வந்தார்.
பின்னர் அவர் இறைவாக்கினர் எலியாவிடம், “இந்தக் கூட்டத்தில் இருக்கின்ற வேறு யாராது விண்ணகம் செல்லத் தகுதியுடையவர்களாக இருக்கின்றார்களா?” என்று கேட்டார். அதற்கு அவர், “அதோ ஓரமாக நின்றுகொண்டு, சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்களே, அவர்கள் இருவரும் விண்ணகம் செல்ல தகுதியுள்ளவர்களாக இருக்கின்றார்கள்” என்றார். உடனே பரோக்கா அவர்கள் இருவரிடமும் சென்று, “நண்பர்களே! நீங்கள் இருவரும் என்ன வேலை செய்கின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் இருவரும், “எங்களுடைய வேலையே மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதுதான். நாங்கள இருவரும் யாராரெல்லாம் சோகமாக இருக்கின்றாகளோ அவர்களிடம் கலகலப்பாகப் பேசி சந்தோசப்படுத்துவோம், எங்கெல்லாம் சண்டைச் சச்சரவுகள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று அமைதியை ஏற்படுத்துவோம்” என்றார்கள்.
“அருமை, தொடர்ந்து அப்படியே செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு பரோக்கா அவர்கள் இருவரிடமிருந்தும் விடைபெற்று, இறைவாக்கினர் எலியா இறைவாக்கினரிடம் வந்து, “விண்ணகம் செல்வதற்கு யாராருக்கெல்லாம் தகுதி இருக்கின்றது என்பதை இப்போது உணர்ந்துகொண்டேன். தான் இருக்கும் இடத்தில் மற்றவர்களுக்குப் பிரயோஜனமாக வாழக்கூடிய யாவருமே விண்ணகம் தகுதி படைத்தவர்கள்” என்று சொல்லி அவர் இறைவாக்கினர் எலியாவிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
இறுதித் தீர்ப்பின்போது யாராருக்கெல்லாம் விண்ணகம் செல்வதற்குத் தகுதி இருக்கின்றது என்கின்ற உண்மையை மேலே சொல்லப்பட்ட நிகழ்வு நமக்கு அருமையாக எடுத்துரைக்கின்றது.
பொதுக்காலத்தின் முப்பத்தி மூன்றாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றியும், அதைத் தொடர்ந்து நடக்கூடிய இறுதித் தீர்ப்பையும் பற்றி எடுத்துக் கூறுகின்றது. நாம் அவற்றைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, அந்நாட்களில் -இறுதி நாட்களில்-என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசும்போது அவர் “அந்நாட்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிகள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்” என்கின்றார் இயேசு.
இங்கே இயேசு கூறுவதாக மாற்கு நற்செய்தியாளர் கூறுகின்ற வார்த்தைகள் அவர் தனது நற்செய்தியின் மற்ற பகுதிகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளிலிருந்து வித்தியாசப்படுவதை நாம் அறிந்துகொள்ளலாம். இதனை இன்னும் ஆழமாக அறிந்துகொள்ளவேண்டும் என்றால், யூதர்கள் காலத்தை எவ்வாறு கணக்கிட்டார்கள் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.
பொதுவாக யூதர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். ஒன்று இப்போது இருக்கின்ற நிகழ்காலம். இன்னொன்று ஆண்டவர் வெளிப்படுகின்ற பொற்காலம். நிகழ்காலத்தை அவர்கள் வேதனை நிறைந்ததாகவும் பொற்காலத்தை மகிழ்ச்சி நிறைந்ததாகும் பார்த்தார்கள். ஆனால், இந்த இரண்டு காலங்களுக்கும் இடையே ஆண்டவரின் நாளானது இருக்கும். அந்த நாளில் தீமைகள் அழிக்கப்பட்டு, நன்மையானது நிலைநாட்டப்படும் என்று நம்பினார்கள். இந்த ஆண்டவரின் நாளுக்கு முன்புதான் மேலே நாம் வாசித்த போர்களும், கலகங்களும், இயற்கைப் பேரிடர்களும் நடக்கும் என்று நம்பினார்கள்.
இதைத்தான் ஆண்டவர் இயேசு மானிட மகனின் இரண்டாம் வருகையைக் குறித்தும் தொடர்ந்து வருகின்ற இறுதித்தீர்ப்பைக் குறித்துப் பேசுகின்றபோது பேசுகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு வேண்டுமானால் புதிதாக, அச்சம் தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால், யூதர்களைப் பொறுத்தளவில் அவை மிகவும் பழக்கப்பட்ட வார்த்தைகள் தான்.
இங்கே நாம் தியானித்த வார்த்தைகளும், இதனை அடியொட்டி வரக்கூடிய இன்றைய முதல்வாசகமும் நமக்கு ஒருசில செய்திகளைத் தருகின்றன. அவை என்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
மானிடமகனது இரண்டாம் வருகை நிச்சயம் நிகழும். இதுதான் இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் முதன்மையான செய்தியாக இருக்கின்றது. எப்படி அத்திமரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து தளிர்ப்பது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டதற்கான அறிகுறியாக இருக்கின்றதோ அதுபோன்று உலகில் நிகழ்வும் போர்களும் வன்முறைகளும், குழப்பங்களும், இயற்கைப் பேரிடர்களும் மானிட மகனது வருகைக்கான முன் அறிகுறி இருக்கின்றது. இயேசு மானிட மகன் எப்போது வருவார் எந்தைக் குறித்து திட்டவட்டமாகத் தெரிவிக்காவிட்டாலும்கூட, அவருடைய இரண்டாம் வருகை நிச்சயம் நிகழ்வும் என்று உறுதிபடச் சொல்கின்றார்.
மானிடமகனது வருகையைத் தொடர்ந்து இறுதித் தீர்ப்பானது நடைபெறும். இது இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கும் இரண்டாவது செய்தியாக இருக்கின்றது. நற்செய்தியில் இயேசு, “மானிட மகன் வானதூதரை அனுப்பி, மண்ணுலகில் ஒருகோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசையிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்” என்று கூறுகின்ற வார்த்தைகள் இறுதித் தீர்ப்பினைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன. இறைவனின் அரசில் நுழைவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு அழகாக எடுத்துக் கூறுகின்றது.
முதல் வாசகத்தில், “ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும் பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்” என்று வாசிக்கின்றோம். அப்படியானால் பிறரை நல்வழிக்குக் கொண்டுவருவோர்தான் இறைவனின் அரசில் நுழைவதற்கு தேர்தெடுக்கப்படுகின்றார்கள் என்பது உண்மையாகின்றது. பிறரை நல்வழிப்படுத்துவோர் நிச்சயம் நல்வழியில் நடந்திருப்பார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ஆகையால், மானிடமகன் அளிக்கின்ற இறுதித் தீர்ப்புக்கு நாம் நம்மையே தகுதியுள்ளவர்களாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்றால், நாம் நல்வழியில் நடந்து, மற்றவரையும் நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும்.
எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும். இது இன்றைய இறைவார்த்தை எடுத்துரைக்கும் மூன்றாவது முக்கியமான செய்தியாக இருக்கின்றது. மானிட மகனது வருகையைக் குறித்துப் பேசுகின்றபோது இயேசு, “அந்த நாளையும் வேளையையும் பற்றி தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது” என்பார். அப்படியானால் மானிட மகன் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்காக நாம் விழிப்பாய், ஆயத்தமாய் இருக்கவேண்டும் என்பதுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.
மானிட மகனது வருகைக்கு நாம் ஆயத்தமாக இருக்கின்றோமா என்பது நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. பல நேரங்கில் நாம் போதுமான நேரம் இருக்கின்றபோது அதனைப் பயனில்லாமல் கழித்துவிட்டு, கடைசி நேரத்தில் அவசரப்பட்டு எதையுமே சரியாகச் செய்யாமல் தத்தளிக்கின்றோம். கிறிஸ்தவ வாழ்விற்கு அத்தகைய மெத்தனப் போக்கு கூடவே கூடாது. கிறிஸ்துவின் வழியில் நடக்கும் நாம் எப்போதும் எதற்கும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.
முன்பொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த ஒரு ஊரில் எண்ணையால் எரியும் கலங்கரை விளக்கு ஒன்று இருந்து. அந்தக் கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன. காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது, விளக்கு அணையாமல் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே. தொடக்கத்தில் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.
ஒரு கடுங்குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார். “தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக்கூட எண்ணை இல்லை. நீ கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன்” என்று கெஞ்சினார். மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான். அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன்.
“அண்ணே! நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்று வெகு இளக்கமாகப் பேசினான். காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்தனுப்பினான். மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. “ராசா. வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்” என்றாள். அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்.
வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டுவரும் வண்டி வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. காப்பாளன் வழக்கம்போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். அப்போதுதான் பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசிவரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது. இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டுவிட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள். வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இதனால் இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.
கலங்கரை விளக்குக் காப்பாளன் ஆபத்து உதவுகிறேன் பேர்வழி என நினைத்துக்கொண்டு தன்னுடைய பொறுப்பில் கண்ணும் கருத்துமாய் இல்லாமல், விழிப்பில்லாமல் இருந்தமையால் மிகப் பெரிய அழிவு ஏற்பட காரணமானான். மானிட மகனது வருகையின்போது விழிப்பில்லாமல், ஆயத்தமில்லாமல் இருந்தால் இதுபோன்ற அழிவைத்தான் நாம் சந்திக்க நேரிடும்.
ஆகவே, மானிட மகனது வருகைக்கு நம்மையே தயாரிக்கும் பொருட்டு எப்போதும் விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருப்போம். இறைவன் வரும்வரை அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed