தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்”
ஈரான் தேசத்தில் கேசப்ரட் என்ற நதியின் மீது, ‘டஸ் நகரத்துப் பாலம்’ எழுப்பப்பட்டுள்ளது. இதைக் கட்டியவர் ஒரு கவிஞர். என்னது கவிஞர் கட்டினாரா என வியப்பாக இருக்கிறதா? ஆனால், அதுதான் உண்மை. அந்த கவிஞர் பெயர், ‘பிர்தவுஸி.’ 60 ஆயிரம் பாடல்களைக் கொண்டு, ‘ஷாநாமா’ என்ற காவியத்தை இயற்றியவர்.
கி.பி.932 லிருந்து 1020 வரை வாழ்ந்தவர் கவிஞர் பிர்தவுஸி. ஈரானின் ஹோமர் என்று புகழப்படுபவர். இக்கவிஞரை ஆதரித்த மன்னர் சுல்தான் முகமது கஸின், பிர்தவுஸி பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொற்காசு அளிக்கும்படி தன் கஜானா அதிகாரிக்கு ஆணையிட்டார். இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, தன்னுடைய ஊருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகல் பாராமல், கடினமாக உழைத்து ‘ஷாநாமா’ என்ற மகத்தான படைப்பை எழுதி முடித்தார் பிர்தவுஸி. இதை எழுதி முடிக்க அவருக்கு 35 ஆண்டுகளாயிற்று. சுல்தானின் ஆணைப்படி, அவர் இயற்றிய 60 ஆயிரம் பாடல்களைக் கொண்ட காவியத்துக்கு அன்பளிப்பாக 60 ஆயிரம் வெள்ளிக்காசுகளைச் சுமந்து வந்து நின்றது ஒரு யானை. ஆனால், வாக்களித்ததோ பொற்காசுகள். தரப்பட்டதோ வெள்ளிக்காசுகள்.
கோபம் கொண்ட பிர்தவுஸி, 60 ஆயிரம் வெள்ளிக்காசுகளை 3 பங்காக்கினார். ஒரு பங்கை, அதைக் கொண்டு வந்த யானைப் பாகனுக்கு இனாமாக வழங்கினார். இரண்டாவதை தன் ஒரு குளியலுக்கான கூலியாக வழங்கினார். மூன்றாவதை ஒரு கோப்பை பீர் பானத்துக்கு விலையாகக் கொடுத்தார்.
(20 ஆயிரம் வெள்ளிக்காசுகளின் இன்றைய மதிப்பு என்ன தெரியுமா? 2 மில்லியன் டாலர்கள்! சரித்திரத்திலேயே மிக, மிக, விலையுயர்ந்த பீர் பானம் பிர்தவுஸி பருகியதாகத் தானிருக்கும்).
பிறகு, தன் தவறை உணர்ந்து மனம் வருந்திய சுல்தான், பொற்காசுகளை ஒட்டகங்களின் மீது ஏற்றி அனுப்பி வைத்தார். ஆனால், காலங்கடந்த மனமாற்றமாகி விட்டது அது. சுல்தான் அனுப்பிய ஒட்டக வரிசை மகாகவி பிர்தவுஸியின் சவ ஊர்வலத்தைத்தான் சந்தித்தது. ஆம், பிர்தவுஸி இரவு பகல் பாராமல் உடலை வருத்தி எழுதிய ‘ஷாநாமா’ என்ற அமர காவியத்திற்கான பரிசிலை அவர் பெறவில்லை. அவருடைய மனைவிதான் அதைப் பெற்றுக்கொண்டார். அதைப், பெற்றுக்கொண்ட அவரின் மனைவி, நகர அதிகாரிகளிடம் அதைச் சேர்ப்பித்து அதைக் கொண்டு கேப்ரட் நதியின் மீது ஒரு பாலம் கட்டும்படி கேட்டுக் கொண்டாள். அவ்வாறு எழுப்பட்டதுதான் டஸ் நகரத்துப் பாலம் பாலம்.
இன்றைக்கு பிர்தவுஸி வாழ்ந்த டஸ் நகரம் மறைந்து போனாலும் அவர் பாடிய ‘ஷாநாமா’ என்ற அமர காவியமும் அதனால் எழுந்த பலமும் இன்றும், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும்கூட நிலைத்திருக்கிறது.
தன் ஊர் மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்த பிர்தவுஸி என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, மானிட மகனுடைய வருகையைப் பற்றியும் அவருடைய வருகையின்போது என்னென்னலாம் நடக்கும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசுகின்றபோது சொல்கின்ற வார்த்தைகள்தான் ‘தன் உயிரைக் காத்துக் கொள்ள வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்” என்பதாகும். மானிட மகனுடைய வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் (மத் 25:13, லூக் 12:40,46) என்று சொல்லும் இயேசு, அத்தகைய வருகையின்போது யாராரெல்லாம் ஆயத்தமாக இருப்பதையும் தன்னுடைய விழுமியங்களின்படி நடப்பதையும் பிறருக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்வதையும் அவர் காண்பாரோ, அவர்கள் விண்ணகத்தை தமக்கு உரித்தாக்கிக் கொள்வார்கள் என்கின்றார்.
மண்ணகத்தில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, பிறர் நலம் சார்ந்ததாகவும் கிறிஸ்துவின் விழுமியங்களின் படி நடப்பதாகவும் இருக்கின்றதா? அல்லது சுயநலச் சேற்றில் சிக்குண்டு கிடைக்கின்றதா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஐய்யன் திருவள்ளுவர் சொல்வார், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்று. ஆம், எவர் ஒருவர் தன்னுடைய மண்ணக வாழ்வாகவும் பிறர்நலம் சார்ந்ததாகவும் அமைத்துக்கொள்கின்றாரோ அவருக்கே விண்ணகத்தில் இடம் உண்டு.
ஆகவே, நம்முடைய வாழ்வை இறைவனுக்கு உகந்ததாகவும் பிறர் நலம் சார்ந்ததாகும் பிறருக்காக நம்மை அர்ப்பணிப்பதாகவும் அமைத்துக் கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed