இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகின்றது!”
பட்டணத்தில் குருத்துவத்திற்குப் படித்து வந்த மிகவும் துடிப்பான சகோதரர் ஒருவர், விடுமுறைக்கு தன்னுடைய வீட்டிற்கு வந்திருந்தார். அவரைத் தற்செயலாக கடைத்தெருவில் பார்த்த பங்குத்தந்தை அவரது நலம், படிப்பு எல்லாவற்றையும் கேட்டு விசாரித்துவிட்டு, வரும் ஞாயிறன்று பங்குக்கோவிலில் மறையுரை ஆற்றலாமா? என்று கேட்டார். தொடக்கத்தில் தயங்கிய சகோதரர், பங்குத்தந்தை கேட்கிறாரே என்பதற்காக உடனே சம்மதம் தெரிவித்தார்.
குறிப்பட்ட நாளும் வந்தது. தகுந்த தயாரிப்போடு வந்திருந்த சகோதரர், நற்செய்தி வாசகம் முடிந்ததும் மக்களுக்கு முன்பாக வந்து, மறையுரை ஆற்றத் தொடங்கினார். அன்றைய நாளில் நற்செய்தி வாசகமானது, ‘மெசியாவின் வருகை’ தொடர்பாக இருந்தது. எனவே அதைக் குறித்து அவர் மிகவும் உணர்ச்சி பொங்க போதிக்கத் தொடங்கினார். அவருடைய போதனைக் கேட்டு மக்களெல்லாம் ஆச்சரியப்பட்டார்கள். ‘இன்னாருடைய மகனா? எப்படியெல்லாம் பேசுகிறார்?’ என்று வியந்து நின்றார்கள்.
‘மெசியா வரப்போகிறார், வெகு விரைவாக வரப்போகப் போகிறார். அவருடைய வருகை மிக அண்மையில் உள்ளது. ஆகவே, மக்கள் யாவரும் அவருடைய வருகைக்குத் தயாராக இருக்கவேண்டும்’ என்று போதித்துக்கொண்டிருந்தவருக்கு, திடிரென்று அவர் சொல்ல வந்தது மறந்துபோனது. இதனால் அவர் ‘மெசியா வரப்போகிறார், அவர் வெகு விரைவாக வரப்போகிறார்’ என்ற வார்த்தைகளையே திரும்பத் திரும்ப சொல்லத் தொடங்கினார். ஒருகட்டத்தில் அவருக்கு தலைசுற்றவே, முன்னால் அமர்ந்திருந்த பாட்டியின் மீது அவர் விழுந்துவிட்டார். இதனால் சுற்றிலும் இருந்தவர்கள் பதறிப்போய், அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து, அவரை மயக்கம் தெளிய வைத்தனர்.
மயக்கம் தெளிந்த அவர், முன்னால் இருந்த பாட்டியிடம் “தெரியாமல் விழுந்துவிட்டேன் பாட்டி, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார். அதற்கு பாட்டி, “மெசியா வெகு விரைவில் வரப்போகிறார் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். அதைக் கேட்டாவது நான் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கலாம். கவனக்குறைவாக இருந்துவிட்டேன். தவறு என்மீதுதான்” என்றார்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும் மெசியாவின் வருகை மிக அண்மையில் உள்ளது என்ற உண்மையை மிக அழுத்தமாக எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தி வாசகத்தில், பரிசேயர்கள் இயேசுவிடம், “இறையாட்சி எப்போது வரும்?” என்று கேட்கிறார்கள். இயேசுவோ அவர்களிடம், “இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ அங்கே! எனச் சொல்லமுடியாது. ஏனெனில் இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்கின்றார்.
இயேசு பரிசேயர்களுக்கு அளித்த பதில், நமக்கு ஒருசில செய்திகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. அதில் முதலாவது, இறையாட்சி என்பது புறக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய ஒன்று அல்ல, அது நம்முடைய அகக் கண்களால் பார்க்கப்படவேண்டியது. இறையாட்சி நம்முடைய கண்களுக்குப் புலப்படும் முறையில் வரும் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அப்படியல்ல, இறையாட்சி நம்முடைய கண்களுக்குப் புலப்படாத முறையில் வரும். ஆகவே, அதனை நாம் நம்முடைய அகக்கண் கொண்டுதான் பார்க்கவேண்டும்.
இயேசு பரிசேயர்களுக்கு அளித்த பதிலிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய இரண்டாவது செய்தி, இறையாட்சி எங்கோ அல்ல, இங்கே நம்மத்தியில் செயல்படுகின்றது என்பதாகும். பலரும் இந்த உண்மையை உணராமலே இருக்கிறார்கள். இறையாட்சி என்றால், விண்ணகத்தில்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், அது நம்மத்தியில் இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்கின்றது, நாம் இறையாட்சியின் வல்லமையை உணராமல் இருக்கின்றோம் என்றுதான் தோன்றுகின்றது.
இயேசு பரிசேயர்களுக்கு அளித்த பதிலிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய மூன்றாவது செய்தி, இறையாட்சி இந்த மண்ணில் மலர, நாம்தான் அதற்குக் கருவியாக இருந்து செயல்படவேண்டும் என்பதாகும். இந்த உலகத்தில் தன்னுடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் கொண்டுசெல்வதற்கு இயேசு எப்படி திருத்தூதர்களையும் சீடர்கள், இறையடியார்களையும் தேர்ந்தெடுத்தாரோ, அதுபோன்று இறையாட்சி இந்த மண்ணில் மலர்வதற்கு நம்மைக் கருவியாகத் தேர்ந்தேடுத்திருகின்றார். ஆகையால், நாம்தான் அவருடைய கருவியாக இருந்து செயல்படவேண்டும். இதில், ‘அவரோடு ஒத்துழைக்க மாட்டேன்’ என்று சொல்லி ஓடிப்போன இறைவாக்கினர் யோனாவைப் போன்று நாம் நம்முடைய வழியில் செல்வது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.
உண்மை, அன்பு நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மன்னிப்பு போன்று விழுங்கியங்களை அடிப்படையாக கொண்டு கட்டியெழுப்பப்படும் இறையாட்சி இந்த மலர நாம் இறைவனின் கையில் ஒரு கருவியாக இருந்து செயல்படுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed