இயேசுவின் அரசு அன்பின் அரசு
மாவீரன் அலெக்ஸ்சாண்டர் எல்லா நாடுகளின் மீதும் படையெடுத்து, வெற்றி கொண்டபிறகு, இறுதியாக இந்தியாவின்மீது படையெடுத்து வெற்றிக்கொள்ள தன்னுடைய படைவீரர்களோடு இந்தியாவை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தான்.
வரும்வழியில் அவன் ஒரு ஞானியைச் சந்தித்தான். அந்த ஞானி உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லாமல் நிர்வாணமாய் தவக்கோலத்தில் இருந்தார். அவரைக் கண்டு அவர்மீது பரிதாபப்பட்ட மாவீரன் அலெக்ஸ்சாண்டர் அவரை எழுப்பி, “ஐயா உங்களைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கின்றது. உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். நான் அதைத் தருகின்றேன். ஏனென்றால், நான்தான் இந்த உலகமனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மாவீரன் அலெக்சாண்டர்” என்று ஒரு விதமான ஆணவத்தோடு பேசினான்.
அவனுக்குப் அறிவுரை புகட்ட நினைத்த ஞானி அவனிடம். “உலகனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசன் நீ என்று சொல்கிறாய். உன்னிடத்தில் ஒரு ஒருசில கேள்விகளைக் கேட்கின்றேன். அவற்றிக்கு நீ சரியான பதில்களைத் தந்தால் நீ சொல்வதை ஒத்துக்கொள்கின்றேன்” என்றார். அவனும் அதற்குச் சரியென்று சொல்ல, ஞானி அவனிடத்தில், “உதாரணத்திற்கு நீ பாலைவனத்தில் மிகுந்த தாகத்தோடு வருகின்றாய் என்று வைத்துக்கொள்வோம். உனக்கெதிரே நான் ஒரு குவளையில் தண்ணீரோடு வருகின்றேன். அப்போது நீ என்னிடம் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்கின்றாய், நானோ ‘தண்ணீர் தந்தால் அதற்கு நீ என்ன தருவாய்?’ என்று கேட்கின்றேன். அப்போது நீ என்ன பதிலளிப்பாய்” என்று கேட்டார்.
மாவீரன் அலெக்ஸ்சாண்டரோ சிறுது நேரம் யோசித்துவிட்டு, “பாலைவனம்.., தாகம் வேறு அதிகமாக இருக்கின்றது.., தண்ணீர் அருந்தாவிட்டால் உயிரை இழக்கக்கூடிய சூழ்நிலை.., அப்படிப்பட்ட தருணத்தில் நான், “என்னுடைய அரசாங்கத்தில் பாதியைத் தருவேன் என்று பதிலளிப்பேன்” என்றான். உடனே ஞானி அவனிடம், “பாதி அரசாங்கத்திற்கு எல்லாம் ஒரு குவளைத் தண்ணீரை தரமுடியாது என்று சொல்லிவிடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீ என்ன பதிலளிப்பாய் என்று கேட்டார். அவனோ, “உயிரைக் காக்கக்கூடிய ஒரு குவளைத் தண்ணீருக்கு பாதி அரசாங்கம் போதவில்லை என்றால், அரசாங்கம் முழுவதையும் எடுத்துக்கொள்ளும் என்று பதிலளிப்பேன்” என்றார்.
அவன் இவ்வாறு பதிலளித்த பின்பு ஞானி அவனிடத்தில் பொறுமையாகச் சொன்னார், “அப்படியானால் உன்னுடைய அரசாங்கத்தின் மதிப்பு ஒரு குவளைத் தண்ணீர்தானா?, இதற்காக ஏன் இவ்வளவு அரும்பாடுபட்டு எல்லா நாடுகளின்மீதும் போர்தொடுத்துக் கொண்டிருக்கின்றாய்?, இதற்காக ஏன் ஏராளமான உயிர்களைக் கொன்றுபோட்டுக் கொண்டிருக்கின்றாய்?”. ஞானி கேட்ட கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அது மட்டுமல்லாமல், அவன் இந்தியாவின் மீது படையெடுத்துச் செல்லும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தன்னுடைய சொந்த நாடு திரும்பினான்.
மதிப்பே இல்லாத அரசாங்கத்திற்காக, ஆட்சிக்காக எத்தனையோ அரசர்கள் (?) ஏராளமான உயிர்களைக் கொன்றுபோட்டத்தை நினைத்துப் பார்க்கும்போது உண்மையில் மிகவும் வேதனையாக இருக்கின்றது. இத்தகைய சூழலில்தான் நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடுகின்றோம். மக்கள் ஆட்சித்தத்துவம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இயேசுவை நாம் அரசராக ஏற்றுக்கொள்வது சரிதானா?, மற்ற பூவுலகின் மற்ற அரசர்களிலிருந்து எப்படி வித்தியாசப்பட்டு இருக்கின்றார் என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பேரறிஞர் பெர்னாட்ஷா அரசாங்கம் தொடர்பாகக் கூறுகின்ற போது, “மக்கள் நலனை மையப்படுத்திச் செயல்படுவதே அரசாங்கம்” என்பார். ஆம், அரசாங்கம் என்றால் மக்களை மையப்படுத்தியதாக இருக்கவேண்டும். அப்படி இல்லாமல், ஆளும் வர்க்கத்தை மட்டும் மையப்படுத்தி இருந்தால் அது ஒரு உண்மையாக அரசாங்கமாக இருக்காது. இன்றைக்கு மாநில அளவிலும் தேசிய அளவிலும் ஏன் உலக அளவிலும்கூட நடக்கின்ற அரசாங்கங்கள் எல்லாம் மக்களுக்கான அரசாங்கமாக இல்லை என்பதுதான் வேதனை கலந்த உண்மை. இத்தகைய பின்னணியில் இயேசுவின் அரசாங்கம் எத்தகையது என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து விசாரணைக்காக பிலாத்துவின் முன்பாக நிறுத்தி வைக்கப்படுகின்றார். அப்போது அவன் இயேசுவிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்கும்போது இயேசு அவனிடம், “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்கின்றார். ஆம், இயேசுவின் ஆட்சி இவ்வுலக ஆட்சி அல்ல, ஏனென்றால் இவ்வுலக ஆட்சியில் தலைவர்கள் மக்கள்மீது அதிகாரம் செலுத்தி அவர்களை அடக்கி ஆட்கின்றார்களே ஒழிய, மக்கள்மீது அன்பு கொள்கின்றவகளாக, அக்கறை கொள்ளாதவர்களாக இல்லை. ஆனால் ஆண்டவர் இயேசு அப்படி இல்லை. அவர் எல்லாரையும், ஏன் தன்னை வெறுத்தோரையும் அன்பு செய்பவராக இருந்தார், அவர்களுக்காகத் தன்னுடைய உயிரையும் தருபவராக இருந்தார்.
திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் மேற்ச்சொன்ன வார்த்தைகளை எண்பிப்பதாய் இருக்கின்றது,. அங்கு நாம் வாசிக்கின்றோம், “கிறிஸ்துவே… மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்பு கூர்ந்தார்; தமது சாவு வழியாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுத்தார்”. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் அடக்கி ஆண்டு, அவர்களைக் கொடுமைப்படுத்தும் தலைவர்கள், அரசர்களுக்கு மத்தியில், மக்களை உண்மையாகவே அன்பு செய்து, அவர்களுக்காக தன்னுடைய உயிரையும் தந்தததால் இயேசுவை உண்மையான அரசர் என்றும், அவருடைய அரசாங்கம் இவ்வுலக அரசாங்கம் போன்றது கிடையாது என நாம் உறுதியாகச் சொல்லலாம்.
இயேசுவின் அரசு இவ்வுலக அரசு போன்றது கிடையாது என்பதற்கு இரண்டாவது காரணமாக அதன் அழிவுறாத, என்றும் நிலைத்திருக்கும் தன்மையைச் சொல்லலாம். இந்த உலகத்தில் எத்தனையோ அரசுகள் தோன்றி இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டன. உலகமெங்கும் பரவி இருந்தது உரோமை அரசாங்கம். ஆனால் அது இன்றைக்கு இருந்த இடம் தெரியவில்லை. மிகவும் பழமை வாய்ந்த அரசாங்கம் பாபிலோனிய அரசாங்கம், அதுவும் இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டது. இப்படி வரலாற்றில் தோன்றிய எத்தகைய அரசாங்கங்கள் ஒருகுறிப்பிட்ட காலம் வரைக்கும் செம்மையாய் இருந்தன. அதன்பிறகு அவை மண்ணோடு மண்ணாய் போய்விட்டன. ஆனால், இயேசுவின் அரசு, அவருடைய அரசாங்கம் அப்படி இல்லை. அதற்கு முடிவு என்பதே இல்லை.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம், “வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுள்ளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது” என்று. ஆம், இயேசுவின் அரசாங்கம் ஒரு குறிப்பட்ட காலத்தில் தோன்றி, குறிப்பட்ட காலத்திற்கு மறையக்கூடிய அரசாங்கம் கிடையாது. அவருடைய அரசாங்கம் என்றுமுள்ள அரசாங்கம், அவருடைய ஆட்சிக்கு முடிவு என்பதே கிடையாது. அதனால்தான் இயேசு இவ்வுலக அரசு போன்றது கிடையாது என்று சொல்கின்றோம்.
இப்படிப்பட்ட அழியாத, என்றுமுள்ள அரசாங்கத்தின் குடிமக்களாக வாழவேண்டும் என்றால், அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பிலாத்துவிடம், “அரசன் என்று நீர் சொல்கின்றீர். உண்மைய எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்” என்று சொல்லிவிட்டு, “உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி கொடுப்பர்” என்பார். அப்படியானால், உண்மையின் வழியின் நடக்கின்ற அனைவருமே இயேசுவின் என்றுமுள்ள அரசின் குடிமக்களாகத் திகழ்வார்கள் என்பது உறுதியாகின்றது. நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்மையின் வழியில், உண்மையின் வடிவான ஆண்டவர் இயேசுவின் நடக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் உண்மைக்குப் புறம்பாக வாழ்ந்துகொண்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கின்ற ஒரு செயலாக இருக்கின்றது. ஆகவே, இயேசுவின் மறுவுலக அரசில் நாம் பங்குபெற, அவருடைய உண்மைக் குடிமக்களாக வாழ நாம் உண்மையின் வழி நடப்போம்.
அடுத்ததாக, இயேசுவின் மறுவுலக அரசில் பங்குபெற நாம் செய்யவேண்டியது அவரைப் போன்று அனைவரையும் அன்பு செய்வதாகும். இயேசு எல்லாரையும் அன்பு செய்து, அவர்களுக்காகத் தம்முடைய உயிரையும் தந்தார் என்று இன்றைய வாசகத்தில் ஏற்கனவே சிந்தித்தோம். அவருடைய வழியில் நடக்கும் நாமும் அவரைப் போன்று அனைவரும் அன்பு செய்வதுதான் அவருடைய ஆட்சியில் பங்கு பெற தகுதியாக இருக்கும்.
இன்றைக்கு மக்கள் ஒருவர் மற்றவரை அவர்கள் வைத்திருக்கும் பணத்திற்காகவும், அவர்கள் வகிக்கின்ற பதவிக்காகவும் அன்பு செய்கின்றார்கள். இதனால் உண்மையான அன்பு என்பது கானல்நீராகப் போய்விட்டது. ஆனால், இயேசுவின் ஆட்சிக்குரிய மக்களாகிய நாம் ஒருவர் மற்றவரிடம் உண்மையான அன்பினைக் காட்டவேண்டும். அப்போதுதான் அவருடைய ஆட்சியில் கலந்துகொண்டு, அவர் தருகின்ற அருளைப் பெறமுடியும்.
ஓர் ஊரில் மனைவியை இழந்த பணக்காரர் ஒருவர் வேறு மணம் செய்துகொள்ளாமல், தன்னுடைய மகனே உலகம் என்று வாழ்ந்து வந்தார். அந்தப் பணக்காரர் வீட்டில் ஓர் ஏழைப் பணிப்பெண் வேலை பார்த்துவந்தார். அவள் தன்னுடைய வேலைகளை பொறுப்புடனும் வாஞ்சையுடனும் செய்துவந்தார். அது மட்டுமல்லாமல் அவர் அந்த பணக்காரரின் மகன்மீது மிகுந்த அன்பு காட்டிவந்தார். இது அந்த பணக்காரருக்கு மிகவும் பிடித்துப் போனது.
Source: New feed