என் இல்லம் இறைவேண்டலில் வீடு, நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கினீர்கள்”
திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் (Leo XIII) திரு அவையை நன்முறையில் வழிநடத்திக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், குறிப்பிட்ட இடத்திலுள்ள ஒரு துறவுமடத்தின் சிற்றாலயமானது கவனிப்பாறற்றும் பராமரிப்பு இன்றியும் பாழடைந்தும் காணப்படுகின்றது என்று எழுதப்பட்டிருந்தது. துறவுமடத்திற்கு உள்ளே இருக்கின்ற சிற்றாலயத்தை யாராவது கவனிக்காமல் வைத்திருப்பார்களா?, இது ஏதோ பொய்யாகப் புனையப்பட்ட கடிதமாக இருக்கும் என்றுதான் முதலில் அவர் நினைத்தார். பின்னர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய், குறிப்பிட்ட அந்த சிற்றாலயம் எப்படித்தான் இருக்கின்றது என்று பார்த்துவிட்டு வருவோம் என்று அந்த துறவுமடத்தை நோக்கி இரவோடு இரவாகப் புறப்பட்டுச் சென்றார்.
துறவுமடத்தை அடைந்ததும் யாருக்கும் தெரியாமல் சிற்றாலயத்திற்குச் சென்றார். சிற்றாலயத்தைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அவருக்கு வந்த அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவாறே சிற்றலாயமானது எங்கு பார்த்தாலும் ஒரே தூசியும் நூலாம்படையுமாக இருந்தது. ஆலயத்தின் சுவர்கள் ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்பட்டன. இதைப் பார்த்த திருத்தந்தைக்கு கண்ணீர் தாரைதாரையாக வந்தது. அந்தக் கண்ணீரோடு, அங்கிருந்த இருக்கையில் (Pew) முழந்தாள் படியிட்டு வேண்டினார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த திருத்தந்தை துறவுமடத்தில் இருந்த துறவிகளைச் சந்தித்தார். திருத்தந்தையின் திடீர் வருகை அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர் அவர்களைப் பார்த்து, “சிற்றாலயத்தை எதற்கு இப்படி பராமரிக்காமல் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்களோ சரியான பதில் சொல்லவில்லை. மாறாக, ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பற்றிக் குறை கூறத் தொடங்கினார்கள். .
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, சிறுதுநேரம் கழித்து, அவர்களிடமிருந்து விடைபெற்றார். அப்போது துறவுமடத்தின் தலைவர் திருத்தந்தையைப் பார்த்து, “திருத்தந்தை அவர்களே! நீங்கள் உரோமையிலிருந்து எங்களுடைய துறவுமடத்திற்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் வந்ததன் நினைவாக, ஏதாவது ஒன்றை எங்களுக்குத் தந்துவிட்டுப் போங்கள்” என்றார். “வந்ததன் நினைவாக ஏதாவது தரவேண்டுமா… நீங்கள் சிற்றாலயத்தின் உள்ளே போங்கள். அங்கே ஓர் இருக்கையில் ஒரு வசனம் எழுதப்பட்டிருக்கும் அதுதான் நான் உங்களுக்குத் தரும் நினைவுப் பரிசாகவும்” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு, அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
திருத்தந்தை வெளியே சென்றதும், துறவிகள் யாவரும் சிற்றாலயத்தை நோக்கி விரைந்து சென்று, ஒவ்வொரு இருக்கையாகப் பார்த்தார்கள். ஓர் இருக்கையில், “உம் இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னைப் பற்றி எரித்துவிட்டது” (திபா 69:9) என்ற வசனமானது பொறிக்கப்பட்டிருந்தது. அதற்குக் கீழே திருந்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. இதைப் படித்துப் பார்த்துவிட்டு, அங்கிருந்த துறவிகள் யாவரும் ‘நாம் சிற்றாலயத்தை சரியாகப் பாராமரிக்கவில்லை’ என்பதைச் சுட்டிக்காட்டத்தான் அவர் இவ்வாறு எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று பேசத் தொடங்கினார்கள். இதற்குப் பின்பு அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சிற்றாலயத்தை தூய்மைபடுத்தி, அதில் வழிபாடு சரியாக நடக்குமாறு பார்த்துக் கொண்டார்கள்.
ஆலயம் என்பது ஆண்டவன் உறைகின்ற இடம். அதனை தூய்மையாக வைத்திருப்பதும் அதற்குண்டான மரியாதை செலுத்துவதும் நமக்குண்டான தலையாய கடமையாகும்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்று, அங்கு வாணிபம் செய்பவர்களை விரட்டி அடிக்கின்றார். எருசலேம் திருக்கோவிலானது எல்லா மக்களும் வழிபடக் கூடிய ஓரிடம். அதில் புறவினத்து மக்கள் வழிபடுகின்ற பகுதியில் வாணிபம் நடந்ததால், இயேசு அங்கு வாணிபம் செய்தவர்களை விரட்டியடிக்கின்றார்; என் இல்லம் இறைவேண்டலின் வீடு, நீங்கள் அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்” என்று கடுமையாகச் சாடுகின்றார்.
‘கள்வர் குகை’ என்பது கள்வர்கள் தாங்கள் வழிப்பறி செய்ததை மறைத்துக் கொள்வதற்கும் ஆபத்திலிருந்து தப்பிப்பதற்குமான ஓர் இடம். மக்களுக்கு முன்பாக தங்களை நேர்மையாளர்களைப் போன்று காட்டிக்கொண்டு, உள்ளுக்குள் பொய்யும் புரட்டுமாக இருந்த பரிசேயர்கள், எருசலேம் ஆலயத்தை தங்களுடைய தவறுகளை எல்லாம் மறைத்துக்கொள்வதற்கான ஓர் இடமாகப் பார்த்ததால்தான் இயேசு அதனைக் கள்வர்கள் குகையாக மாற்றிவிட்டீர்கள் என்று சாடுகின்றார்.
ஆலயம் ஆண்டவருடைய பிரசன்னம் தங்கியிருக்கக்கூடிய இடம், புனிதமான இடம், எல்லா மக்களுக்கு வழிபாடு செய்யக்கூடிய இடம். இதனைப் பாழ்படுத்துவதும் ‘இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்’ அதனால் இவர்கள் இங்கே வழிபடக்கூடாது’ என்று சொல்வதும் இறைவனுக்கு ஏற்றதாக இராது. அப்படி நாம் நடக்கின்ற பட்சத்தில் இறைவனின் சீற்றம் நம்மை விட்டு அகலாது என்பது மாறாத உண்மை.
ஆகவே, ஆலயத்தில் ஆண்டவர் உறைந்திருக்கின்றார் என்ற உண்மையை உணர்ந்து, அதற்குண்டான மதிப்பினைத் தருவோம். ஆலயத்தில் வேறுபாடு காட்டாது, அனைவரும் ஆண்டவரின் மக்கள் என்ற மனநிலையோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்
Source: New feed