இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று”
இன்றைய தேதியில், ஆயிரக்கணக்கானோருக்கு தன்னம்பிக்கையையும் வாழ்விற்கான வழிகாட்டலையும் வழங்கிக்கொண்டிருக்கக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர் லார்ரி. இவர் ஒரு காலத்தில் பயங்கரமான வழிப்பறிக் கொள்ளையர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?.
ஒருசமயம் இவர் ஒரு கொள்ளை வழக்கில் ஈடுபட்டார் என்பதற்காக நீதிமன்றம் இவருக்கு பதினைந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. பதினைந்து ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம், இவ்வளவு ஆண்டுகள் சிறையில் ‘சும்மா நேரத்தைப் போக்குவதா?’ என்று அவர் தீவிரமாக யோசித்தார். இந்த சமயத்தில் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அவருக்கு விவிலியத்தையும் ஜேம்ஸ் ஆலன் எழுதிய ‘As a Man thinketh’ என்ற புத்தகத்தையும் இன்னொரு ஒருசில புத்தகங்களையும் படிக்கக் கொடுத்தார்கள்.
இவற்றையெல்லாம் படித்துப் பார்த்த அவர் தன்னுடைய தவற்றுக்காக பெரிதும் வருந்தினார். இத்தனை ஆண்டுகளும் தான் வாழ்ந்தது ஒரு வாழ்க்கையே அல்ல என்பதை உணர்ந்த அவர், புதிய மனிதாய் மாறி, புதியதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினார். இது மட்டுமல்லாமல், சிறையில் இருந்த பலரும் மனமாறி புதியதொரு வாழ்க்கை வாழக் காரணமாக இருந்தார். இதனால் சிறையில் இருந்த அதிகாரிகள் இவருடைய நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்துவிட்டு இவரை தண்டனைக் காலம் முடிவதற்கும் முன்பாகவே இவரை சிறையிலிருந்து விடுவித்தனர். இதற்குப் பின்பு இவர் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு இன்றைக்கு உலகம் போற்றும் மிகச் சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளராக விளங்கி வருகின்றார்.
பயங்கரக் கொள்ளைக்காராக இருந்து, உலகப் போற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாறியிருக்கின்ற லார்ரியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றன.
நற்செய்தி வாசகத்தில் சக்கேயுவினுடைய மனமாற்றத்தைக் குறித்துப் படிக்கின்றோம். சக்கேயு என்றால் ‘நேர்மையாளர்’ என்பது பொருள். ஆனால் அவரோ தன்னுடைய பெயருக்கு ஏற்ப வாழாமல், பாவ வழியிலே வாழ்ந்துவருகின்றார். தான் வாழ்ந்து வரும் இந்த வாழ்க்கை இறைவனுக்கு உகந்ததல்ல என்பதை நன்கு உணர்ந்த சக்கேயு, அதிலிருந்து வெளிவர நினைக்கின்றார். இந்த சமயத்தில்தான் அவர், பாவிகளையும் ஆதரவற்றோரையும் அன்போடு ஏற்றுக்கொள்கின்ற இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கேள்விப்படுகின்றார். எனவே அவரை எப்படியாவது பார்த்து, தன்னுடைய வாழ்விற்கான வழியை, நிம்மதியைக் கண்டுகொள்ளலாம் என்று நினைக்கின்றார்.
இயேசுவை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று விரும்பிய சக்கேயுவுக்கு இயேசுவைப் பார்ப்பது ஒன்றும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் அவர் மிகவும் குள்ளமாக இருந்தார். அதே நேரத்தில் இயேசுவைச் சுற்றி மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் இயேசுவை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில், இயேசுவுக்கு முன்பாக ஓடி ஒரு காட்டு அத்திமரத்தில் ஏறிக்கொள்கின்றார். செல்வம் படைத்தவர்கள் அவ்வளவு எளிதாக தங்களுடைய நிலையிலிருந்து இறங்கி வருவது கிடையாது. ஆனால் சக்கேயு தான் ஒரு செல்வந்தன், வரிதண்டுபவர்களுக்குத் தலைவன் என்றெல்லாம் நினைக்காமல் தன்னுடைய ‘சுய கவுரவத்தை’ விட்டுவிட்டு, சிறுவனைப் போன்று காட்டு அத்திமரத்தில் ஏறிக்கொள்கின்றார். இவ்வாறு சக்கேயு, இயேசுவை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று மிக ஆர்வமாக இருக்கின்றார்.
இந்நிலையில், சக்கேயு தன்னைப் பார்ப்பதாற்கு மிகவும் துடிப்பாககவும் ஆர்வமாகவும் இருப்பதை அறிகின்ற இயேசு, அவரை மேலிருந்து கீழே இறங்கி வரச் சொல்கின்றார். அது மட்டுமல்லாமல், “இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்று சொல்கின்றார். ‘நான் இயேசுவைப் பார்க்கத்தானே வந்தேன், அவரோ என்னுடைய வீட்டில் தங்க வருவதாகச் சொல்கிறாரே’, ‘அடித்தது பம்பர் பரிசு’ என்பது போல், சக்கேயு, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்; எவர்மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்குமடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறன்” என்கின்றார்.
சக்கேயு இயேசுவிடத்த்தில் சொன்ன இந்த பாவப் பரிகாரங்கள், மோசேயின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டதை விடவும் மிக அதிகம் (லேவி 6:1-7; விப 22:1). சக்கேயு இப்படி முற்றிலும் மனந்திரும்பி, புதிய மனிதனாக மாறிவிட்டார் என்பதை உணர்ந்த இயேசு, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்கின்றார்.
இயேசு இந்த உலகத்தில் பாவிகளைத் தேடித்தான் வந்தார். ஆனால், பாவியான சக்கேயு இயேசுவைத் தேடிவந்ததனால், இயேசு அவரிடம் ‘இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று’ என்கின்றார். ஆகையால், பாவ வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் மனம் திரும்பி இயேசுவிடம் வருகின்றபோது, அங்கே மீட்பு உண்டாகிறது என்பதுதான் அர்த்தமாக இருக்கின்றது.
எனவே, ஆண்டவரின் அன்பை உணராமல், தீய வழியில் நடக்கும் நாம், அவருடைய அன்பை உணர்ந்தவர்களால் அவரை நாடிவருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed