தற்போது தமிழகத்தின் கடைகோடியிலுள்ள கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள தூய சவேரியார் பேராலயம் புனிதராலேயே நிறுவப்பட்டது என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்கூறுகிறது. அது தொடர்பான ஒரு நிகழ்வு. அந்த ஆலயம் கட்ட தூய சவேரியார் அப்போதைய திருவிதாங்கூர் மன்னரிடம் இடம் கேட்டபோது அவர், “அதெல்லாம் முடியாது” என்று மறுத்துவிட்டார். தூய சவேரியார் மீண்டுமாக அவரிடம், “எனக்கு ஓர் ஆட்டுத் தோல் அளவுக்கு இடம்கொடுத்தால் போதும், நான் அதில் ஆலயம் கட்டிக்கொள்கிறேன்” என்று சொல்லி ஓர் ஆட்டுத்தோலைக் காட்டினார். அதைப் பார்த்த மன்னர், இந்த ஆட்டுத்தோல் எவ்வளவு இடம் பிடித்துவிடப் போகிறது என்று எண்ணி, அதற்கு சரி என சம்மதம் தெரிவித்தார்.
அதன்பிறகு தூய சவேரியார் தன்னுடைய கையில் வைத்திருந்த ஆட்டுத்தோலை கீழே விரித்தார். அந்த ஆட்டுத்தோலானது ஏற்கனவே இருந்த அளவைவிட விரிந்துகொண்டே சென்றது. இதைப்பார்த்து திருவிதாங்கூர் மனனர் தூய சவேரியார் சாதாரண மனிதர் அல்ல, அவர் இறைவனுடைய அடியார் என்பதை உணர்ந்து ஆலயம் கட்ட போதுமான இடம் தந்தார். இதன் நிகழ்வுக்குப் பிறகு மன்னர் தூய சவேரியாரின் நண்பரானார். அதோடு மட்டுமல்லாமல் அந்த காலத்தில் கிறிஸ்தவர்களாக மதம்மாற இருந்த தடையும் நீக்கனார்.
தூய சவேரியார் எப்படி இறைவனின் கையில் வல்லமையுள்ள புனிதராக விளங்கினார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது. ஆம், இன்று திருச்சபையானது இந்திய நாட்டின் திருத்தூதரும், மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலருமான தூய பிரான்சிஸ்கு சவேரியாரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைக்கு நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம் என்று சொன்னால் அது தூய சவேரியால் ஆற்றிய பணியினால்தான் என்று சொன்னால் அது மிகையாது.
இந்த நல்ல நாளிலே தூய சவரியாரின் வாழ்வும், பணியும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன எனச் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
தூய சவேரியார் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த ஒரு பிரபுக்கள் குடும்பத்தில், யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
சவேரியார் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, உயர்கல்வி கற்க விரும்பினார்; 1525 ஆம் ஆண்டு, உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்; அங்கே மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530 ஆம் ஆண்டு மெய்யியல் முதுகலைப்பட்டம் பெற்றார். அதே பல்கலைக் கழகத்தில்தான், “நான் ஒரு சிறந்த பேராசிரியராக வர வேண்டும்’ என்ற ஆசை கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் 39 வயது நிரம்பிய “இனிகோ’ என்ற “லொயோலா’ என்பவரை சந்திக்க சவேரியாருக்கு வாய்ப்பு கிடைத்தது. இனிகோ, குருவாவதற்காக அங்கு படித்துக்கொண்டிருந்தார். அவர், சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்வார். அதாவது “பிரான்சிஸ், ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவனுக்கு என்ன பயன்?” என்பதே அந்த வாசகம். இந்த வார்த்தைகள் சவேரியாரின் மனதில் ஆழமாகப்பட்டது.
ஒரு நாள் சவேரியார், “தனது பணம், புகழ், பட்டம், ஆசை, ஆடம்பரம், உலக இன்பம் அனைத்தையும் துறக்க வேண்டும்; தானும் ஒரு குருவாக வேண்டும்; இறை மகன் இயேசுவின் பணியை- அவரது அன்பு, பாசம், பெருமை, இரக்கம், விட்டுக் கொடுக்கும் மனம் இவற்றை உலகமெங்கும் அறிவிக்க வேண்டும்’ என்ற அணையாத தாகத்தைப் பெற்றார்; உடனே இயேசு சபையில் சேர்ந்தார். 1537 ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் நாள், குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
அதன் பிறகு இயேசுவை பற்றியும், அவரது அன்புப் பணியைப் பற்றியும் அறிவிப்பதற்காக 1541 ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலிருந்து சவேரியார் புறப்பட்டார்; 1542ஆம் ஆண்டு, மே மாதம் 6-ம் நாள் கோவா வந்து சேர்ந்தார். அங்கே சிறிய மணியை கையில் எடுத்து அடித்துக்கொண்டே கோவாவின் தெருக்களில் சென்று அனைத்துச் சிறுவர், சிறுமியர்களையும் அழைத்தார்; அவர்களுக்கு மறைக் கல்வி போதித்தார்; திருமறை நூலை விளக்கினார். நோயாளிகளைச் சந்தித்தார்; சிறையில் கைதிகளை பார்த்து ஆறுதல் கூறினார்.
பிறகு கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார் சவேரியார். குறிப்பாக கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார்.
Source: New feed