நற்செய்தியாளரான தூய யோவான் விழா!
யோவானின் சீடர்களில் ஒருவரும் திருச்சபையின் வரலாற்று ஆசிரியருமான யூசிபுஸ் யோவானைக் குறித்துச் சொல்கின்ற ஒரு செய்தி.
திருச்சபை வேகமாக வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் யோவான், ஒவ்வொரு பகுதியாகச் சென்று, அங்கு ஆயர்களை நியமிப்பதும் அவர்களுக்கு உற்சாக மூட்டுவதுமாக இருந்தார். ஓரிடத்திற்குச் சென்ற யோவான், அங்கே ஏற்கனவே இருந்த ஆயரிடம் ஓர் இளைஞனை ஒப்படைத்து, அவனைப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். அந்த ஆயரும் யோவான் தனக்குச் சொன்னதுபோன்று தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த இளைஞனை நல்ல விதமாய் பராமரித்து வந்தார்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவன், தவறான நண்பர்களோடு சேர்ந்து தன்னுடைய வாழ்வைச் சீரழிக்கத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் வழிபறிக் கொள்ளையர்களுக்குத் தலைவனாகி, வழிப்பறி செய்வதில் கைதேர்ந்தவனானான்.
சில ஆண்டுகள் கழித்து, யோவான் அந்த ஆயரிடம் திரும்பி வந்து, அவரிடத்தில் தான் ஒப்படைத்த இளைஞன் எப்படி இருக்கிறான் என்று கேட்டார். அதற்கு அந்த ஆயர், “அவனைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்?. இப்போது அவன் கொள்ளைக் கூட்டத்திற்கே தலைவனாக இருந்துகொண்டு, எல்லாரிடத்திலும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றான்” என்றார். இதைக் கேட்டு யோவான் மிகவும் கலக்கமுற்றார். அவர் அந்த ஆயரிடம், “இப்போது அவன் எங்கிருக்கிறான்?” என்று கேட்க, ஆயர், “அவன் ஊருக்கு வெளியே இருக்கக்கூடிய மலையில் தங்கியிருக்கிறான்” என்று சொன்னதும், யோவான் அவனைத் தேடி மலைக்குச் சென்றார்.
மலையில் நீண்டநேரம் தேடியபின், ஓரிடத்தில் அவனைக் கண்டுகொண்டார். அவன் அவரைக் கண்டதும் ஓட்டம் பிடிக்கத் தொடங்கினான். யோவானுக்கு அப்போது வயது ஏறியிருந்தது. அவரால் ஓடமுடியாத சூழல், அப்படியிருந்தும் அவர், “என் மகனே! என்னைவிட்டு ஏன் ஓடுகிறாய், நீ எப்படியிருந்தாலும் பரவாயில்லை. உன்னை நான் மன்னித்து ஏற்றுக்கொள்கிறேன்” என்று கத்திக்கொண்டே ஓடினார். இதனால் அவன் தன்னுடைய தவற்றை உணர்ந்து, அவரிடத்தில் திரும்பி வந்து, யோவானைக் கட்டி அணைத்துக்கொண்டான். யோவானோ அவனை அதிகமான அன்போடு கட்டி அனைத்துக்கொண்டு, அவனைத் தன் அன்பு மகனாய் ஏற்றுக்கொண்டார்.
ஆண்டவர் இயேசு எப்படி வழிதவறிப் போன ஆடுகளைத் தேடி அலைந்தாரோ, அதுபோன்று அவரைக் கண்ணாரக் கண்டு, அவரைத் தொட்டு உணர்ந்த அவருடைய அன்புச் சீடரான யோவானும் வழிதவறிப் போன ஆடுகளைத் தேடி அலைந்தார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
இன்று நாம் நற்செய்தியாளரான தூய யோவானின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். திருத்தூதர்கள் குழுவில் யோவானுக்கு என்று ஒரு தனியிடம் உண்டு. மேலும் யோவான் பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரராக இருக்கின்றார். யோவான்தான் இயேசுவின் அன்புச் சீடராக விளங்கினார். யோவானுக்குத் தான் பல்வேறு மறை உண்மைகள் வெளிபடுத்தப்பட்டன. குறிப்பாக வார்த்தையான இறைன் எப்படி மனுவுருவானார், இந்த உலகின் முடிவு எப்போது? போன்றவை எல்லாம் அவருக்குத்தான் வெளிப்படுத்தப்பட்டது. யோவானிடத்தில்தான் இயேசு தன்னுடைய அன்புத் தாயை ஒப்படைத்தார். யோவான்தான் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை முதன்முறையாக நம்பினார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திருதூதர்களிலே யோவான்தான் அதிகமான ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வந்தார்.
இப்படி பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரராக விளங்கிய யோவான், தன்னுடைய வாழ்வின் கடைசிக் காலத்தை எபேசு நகரில் செலவழித்தார். அங்கு தன்னுடைய சீடர்களிடத்தில், ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும் என்று போதித்து வந்தார். இன்னும் சொல்லப்போனால், நற்செய்தியாளர்களில் யோவானைப் போன்று அன்பைக் குறித்து யாரும் பேசியதில்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு அவர் அன்பைக் குறித்து அதிகதிகமாகப் பேசினார். அதற்குச் சான்றாக இருப்பதுதான் அவர் எழுதிய நற்செய்தி நூலும் திருமடல்களும்.
அன்பின் அப்போஸ்தலரான தூய யோவானின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர் நமக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான். ஒருவர் மற்றவரை அன்புசெய்து வாழவேண்டும் என்பதாகும். நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்து வாழ்கின்றபோது இந்த உலகத்தில் சண்டைச் சச்சரவுகளுக்கோ, வன்முறைக்கோ வாய்ப்பே இல்லை.
ஆகவே, தூய யோவானின் விழாவைக் கொண்டாடும், அவர் நமக்குப் போதிக்கின்ற போதனையின் படி ஒருவர் மற்றவரை நிறைகுறைகளோடு அன்புசெய்வோம். அதன்வழியாக இயேசுவின் அன்பிற்குச் சாட்சிகளாக விளங்குவோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்
Source: New feed