
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்”
பஞ்சாப் மாநிலத்தில் நற்செய்திப் பணியைச் செய்துவந்த சாது சுந்தர் சிங் சொல்லகூடிய கதை இது. பண்ணையார் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏராளமான நிலபுலன்களும் நூற்றுக்கணக்கில் ஆடுகளும் இருந்தன. எல்லாவற்றையும் தன்னுடைய பணியாளர்களைக் கொண்டே மேலாண்மை செய்து வந்தார்.
இதற்கிடையில் அவருடைய ஆடுகளை மேய்த்துவந்த மேய்ப்பர்கள், ஒவ்வொருநாளும் ஓரிரு ஆடுகளை வழியில் தொலைத்துக் கொண்டே வந்தனர். இது பண்ணையாருக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. ஏனென்றால், அவர் அந்த ஆடுகளை மிகவும் அன்பு செய்தார். “தொலைந்து போன ஆடுகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வரமுடியுமா?” என்று அவர் அவர்களைக் கேட்டுப் பார்த்தார். அதற்கு அவர்களோ, “இருட்டிய பிறகு ஆடுகளைத் தேடிப்போனால், கொடிய விலங்குகள் எங்களைத் தாக்கி, நாங்கள் உயிரிழக்கக் கூடும்” என்று அவர்கள் போக மறுத்தார்கள். இதற்கு என்ன செய்யலாம் என்று அவர் மிகத் தீவிரமாக யோசித்தார்.
தொலைந்து போன ஆடுகளை, தேடிக் கண்டுபிடித்து வரச் சொன்னால் இவர்கள் போக மறுக்கிறார்கள். ஆடுகளுக்கும் நம்மை அடையாளம் தெரியாது. அதனால் ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு ஆடுகளுக்குள் நாம் நடந்துபோனால் என்ன? என்று யோசித்தார். அது அவருக்கு சரியெனப் படவே, மறுநாளிலிருந்து கூலிக்கு மேய்க்கும் மேய்ப்பர்களுக்குப் பதிலாக, அவரே ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு ஓர் ஆட்டைப் போன்று அவர்களை வழிநடத்திச் சென்றார். ஆடுகளுக்கு எந்தவொரு சந்தேகமும் வரவில்லை. அவையோ அவரை அப்படியே பின்தொடர்ந்தன. அவர் ஆடுகளை நல்ல மேய்ச்சல் நிலங்களுக்குக் கொண்டுசென்று அவற்றை மேயவிட்டார். மாலையில் அவற்றைப் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தார். இதனால் எந்தவொரு ஆடும் வழிதவறியோ, தொலைந்தோ போகவில்லை.
இந்தக் கதையைச் சொல்லிவிட்டு சாது சுந்தர் சிங் சொல்வார் “எப்படி தொலைந்து போன ஆடுகளை மீட்பதற்காக அந்தப் பண்ணையார் ஆடுகளைப் போன்று மாறினாரோ, அது போன்று ஆண்டவர் இயேசுவும் மனிதர்களாகிய நம்மை மீட்பதர்காக மனித உரு எடுத்து நம்மைத் தேடிவந்தார்”.
நற்செய்தி வாசகத்தில் செக்கரியா, ஆண்டவராகிய கடவுள் மக்களைத் தேடிவந்து மீட்டதற்காக அவரைப் போற்றிப் புகழ்கின்றார். செக்கரியாவோ ஆண்டவருடைய தூதர் அவரிடத்தில் சொன்ன செய்தியை நம்ப மறுத்ததால், பேச முடியாமல் பத்து மாதங்கள் கிடக்கின்றார். இப்படிப்பட்ட சூழலில், அவருடைய மனைவியான எலிசபெத் கருவுற்று ஓர் ஆண்மகனை/ யோவனை பெற்றெடுத்ததும் அவர் முன்புபோல் பேசுவதற்கான வல்லமையைப் பெறுகின்றார். அப்போதுதான் அவர் ஆண்டவரைப் போற்றிப் புகழ்த் தொடங்குகின்றார்.
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எல்லையற்ற விதமாக அன்பு செய்தார். எகிப்தில் அடிமைகளாக இருந்தவர்களை விடுவித்துக் கொண்டு வந்து, பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்தில் குடியமர்த்தினார். அவர்களை வழிநடத்துவதற்காக அவர்களிடத்தில் நீதித்தலைவர்களையும் அரசர்களையும் அனுப்பிவைத்தார். இவற்றையெல்லாம் செய்தபின்பும் கூட, அவர்கள் அவரது அன்பைப் புறக்கணித்து வேற்று தெய்வத்தை வழிபட்டபோதும் அதனால் அவர்கள் நாடு கடத்தப்பட்டபோதும் அவர்களைத் தேடிமீட்பவராக இருந்தார். இவற்றுக்கெல்லாம் உச்சமாக தன்னுடைய ஒரே மகனை அனுப்பி அவர்களை தேடி மீட்பவராக இருந்தார். இதனை நினைவுகூர்ந்துதான் செக்கரியா, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்” என்று புகழ்ந்து பாடுகின்றார்.
செக்கரியாவின் புகழ்ச்சிப் பாடலில் மேலும் ஒருசில செய்திகள் உள்ளடங்கி இருக்கின்றன. அதில் ஒன்று, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தார் என்பதாகும். அவர் ஆபிரகாமிடத்தில் மெசியாவைப் பற்றி ஆணையிட்டார், அவர் ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல், அதனை நிறைவேற்றவும் செய்தார்.
நிறைவாக, செக்கரியா ஆண்டவராகிய கடவுள் தன் மகனின் வருகைக்காக, மக்களைத் தயார் செய்யும் பொறுப்பினை யோவானிடம் கொடுத்ததற்காக இறைவனைப் போற்றிப் புகழ்கின்றார். செக்கரியா, தன்னுடைய மகனுடைய பணியென்ன, அவன் எதற்காக தங்களுடைய வயது முதிர்ந்த காலத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்டான் என்பதை நன்றாகவே அறிந்திருந்தார். அதற்காகவும் அவர் ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார்.
இவ்வாறு செக்கரியா, ஆண்டவரின் திட்டத்தை உணர்ந்தவராய், அவரை நெஞ்சாரப் போற்றிப் புகழ்கின்றார். நம்முடைய வாழ்வில் நாம் இறைவனின் திட்டத்தையும் அவர் நம்மைத் தேடி வருவதையும் உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். அது நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான பணி.
Source: New feed