தலை நிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீட்பு நெருங்கி வந்துவிட்டது”
நண்பர்கள் இருவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டார்கள். அதில் ஒரு நண்பர் மிகவும் சோகமாகவும் இன்னொரு நண்பர் மகிழ்ச்சியாகவும் இருந்தார்.
மகிழ்ச்சியாக இருந்த நண்பர் மிகவும் சோகமாக இருந்த நண்பரிடம், “நண்பா! ஏன் இவ்வளவு சோகமாக இருக்கின்றாய்?, உனக்கு ஏதாவது பிரச்சனையாக? என்ன பிரச்சனையானாலும் பரவாயில்லை, அதை என்னிடத்தில் சொல், நான் அதனை நிவர்த்தி செய்ய என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என்றார். மிகவும் சோகமாக இருந்த நண்பரோ, “அது ஒன்றுமில்லை. கடந்த மாதம் என்னுடைய தாத்தா இறந்து போய்விட்டார். அவர் இறக்கும்போது எனக்காக இருபது லட்சம் ரூபாய் சொத்து சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கின்றார்” என்றார். “உன்னுடைய தாத்தா இறந்த செய்தி வருத்தத்திற்கு உரியதாக இருந்தாலும், அவர் உனக்காக இருபது லட்ச ரூபாய் சொத்து சேர்த்து வைத்திருக்கின்றார் அல்லவா, அதை நினைத்து நீ மகிழ்ச்சியாய் இருக்கலாமே” என்றார் அவருடைய நண்பர்.
“பிரச்சனை அதுவல்ல நண்பா, இரண்டு வாரங்களுக்கு முன்பாக என்னுடைய மாமா விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார், அவர் இறக்கின்றபோது என் பெயரில் ஐம்பது இலட்ச ரூபாய் சொத்து சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கின்றார்” என்றார் சோகமாக இருந்த நண்பர். “உன்னுடைய மாமாவின் இறப்பு வருத்தத்தைத் தருவதாக இருந்தாலும், உன் பெயரில் ஐம்பது லட்ச ரூபாய் சொத்து சேர்த்து வைத்திருக்கின்றார் அல்லவா, அதை நினைத்துக்கூட நீ மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லவா, ஏன் இவ்வளவு சோகமாக இருக்கின்றாய்?” என்று கேட்டார் மகிழ்ச்சியாக இருந்த நண்பர்.
“நண்பா பிரச்சனை அதுகூட இல்லை, சென்ற வாரம் என்னுடைய அப்பா நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி இறந்துபோய்விட்டார். அவர் இறக்கின்றபோது என் பெயரில் ஒருகோடி ரூபாய் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கின்றார்” என்றார் அவர். “உன் அப்பாவின் இறப்பு மிகப் பெரிய வருத்தத்தைத் தந்தாலும் அவர் உன் பெயரில் ஒரு கோடி ரூபாய் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கின்றார் அல்லவா, அதை நினைத்து நீ எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்றார் அவருடைய நண்பர்.
“என் நண்பா! இப்போது பிரச்சனை அதுவல்ல, இந்த வாரம் என் பெயரில் சொத்து எழுதி வைத்துவிட்டு இறக்க யாருமே இல்லை. அதை நினைத்துத்தான் நான் கவலையாய் இருக்கின்றேன்” என்றார் சோகமாக இருந்த நண்பர். இதைக் கேட்ட அவருடைய நண்பர், “என்ன மனுஷன் இவன், சந்தோசமாக இருக்க எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றபோது, இறப்பதற்கு யாருமே இல்லை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றானே” என்று தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் சோகமான நண்பனைப் போன்றுதான் நம்மில் பலர் மகிழ்ச்சியாக இருக்க எவ்வளவோ காரியங்கள் இருக்கின்றபோது, இன்னும் பணமில்லையே, பொருளில்லையே, வசதியில்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கின்றது. நற்செய்தி வாசகத்தில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்துத்தான் என்னவோ இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாரும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்கின்றார்.
இன்று நாம் திருவருகைக் காலத்தைத் தொடங்கியிருக்கின்றோம். இந்த திருவருகைக் காலத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் யாவும் மெசியாவின் வருகையைக் குறித்தும் அவருடைய வருகைக்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றன. அதனால் நாம் அதைக் குறித்து ‘தலைநிமிர்ந்து நில்லுங்கள், ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வந்துவிட்டது என்ற தலைப்பில் சிந்தித்துப் பார்ப்போம்.
இன்று நாம் படிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, “அந்நாட்களில் நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்…” என்று ஆண்டவராகிய கடவுள் கூறுவதாகக் கூறுகின்றார். இஸ்ரேயல் மக்கள் பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டு, வேற்று நாட்டில் அடிமைகளாய் நம்பிக்கை இழந்து நின்றார்கள். அப்படிப்பட்ட தருணத்தில்தான் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியா வழியாக ‘யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும்” என்னும் நம்பிக்கைச் செய்தியைத் தருகின்றார்.
இறைவாக்கினர் எரேமியா வழியாக ஆண்டவராகிய கடவுள் உரைத்த வாக்கு இயேசு கிறிஸ்துவில் நிறைவு பெறுகின்றது. ஆம், தாவீதின் குலத்திலிருந்து தோன்றிய நீதியின் தளிராகிய இயேசுவால் உலகில் நீதியும் நேர்மையும் நிலைநாட்டப் பட்டது, அது மட்டுமல்லாமல் யூதாவோடு இவ்வுலகமும் விடுதலை பெற்றது, அவருடைய பாதுகாப்பைப் பெற்றது. ஆகையால், நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கக்கூடிய மெசியாவின் வருகையினால் இவ்வுலகில் நீதியும் நேர்மையும் நிலைநாட்டப்படும் என்பது உறுதி.
இப்படி நீதியையும் நேர்மையையும் இவ்வுலகில் நிலைநாட்டி, மக்களுக்கு விடுதலையும் பாதுகாப்பையும் தரக்கூடிய மெசியாவின் வருகைக்காக நாம் என்ன செய்யவேண்டும் என்பதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துச் சொல்கின்றது.
Source: New feed