திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு
ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்யும் மக்களாய் வாழ்வோம்
ஒரு நாள் சாயங்கால வேளை. வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார். வாகனங்கள் அவ்வழியாகச் செல்லும்போது அந்த பெண்மணி கைகாட்டி நிறுத்தப் பார்த்தார், ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை. உடனே அந்த நபர் அருகில் சென்று, “என்ன பிரச்சனை?” என்று அந்த பெண்மணியிடம் கேட்டார். “கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது” என்று அந்த பெண்மணி கூறினார்.
“என் பெயர் தயாளன். நீங்கள் காரில் உட்காருங்கள், நான் டயர் மாத்தி கொடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவர் டயரை கழட்ட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாற்றினார். அந்த பெண்மணி, “உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர் “நான் பக்கத்தில் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன், அதில் இருந்து வரும் பணமே எனக்கு போதும். நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம். நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே. நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால், வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை நினைத்து பாருங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்றார்.
அந்த பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்றார். வழியில் தலைவலி எடுப்பதுபோல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது, உள்ளே இருந்து ஒரு பெண் வந்து, “என்ன வேண்டும் அம்மா?” என்று கேட்டார். வயதான பெண்மணி டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை பார்த்தார், அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை அவரிடம் பேசி தெரிந்து கொண்டார்.
“குடிக்க டீ கொண்டு வாம்மா” என்றார் அவர். சிறுது நேரத்திற்கு முன்பாக தயாளன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது. அந்த அம்மா டீ குடித்துவிட்டு 5000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு சென்றுவிட்டார். டீ கடையில் வேலை செய்த பெண் காபி டம்பளரை கழுவி வைத்துவிட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை எடுத்துக்கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார், அதற்குள் கார் கிளம்பி சென்று விட்டது. கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்துவிட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டுச் சென்ற பணத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார். பிரசவ செலவுக்கு என்ன செய்ய போகிறோம் என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவர் தயாளனுக்கு இந்த பணத்தை காட்ட வேண்டும் என்று ஆவலோடு அவர் அருகில் சென்றார்..
ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு நாம் செய்கின்ற உதவிக்கு இறைவன் நிச்சயம் கைம்மாறு தருவார் என்னும் உண்மையை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது.
திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் மக்களாக வாழ்வோம் என்னும் சிந்தனையை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. எனவே, நாம் அதை குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் மரியா தன்னுடைய உறவினராகிய எலிசபெத்தை சந்திக்கச் செல்கின்ற நிகழ்வினைக் குறித்துப் படிக்கின்றோம். மரியா எலிசபெத்தை சந்திக்கச் சென்றார் என்று சொல்வதை விடவும், அவருக்கு அவருடைய பேறுகால வேளையில் உதவச் சென்றார் என்று சொல்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது. எலிசபெத் தன்னுடைய முதிர்ந்த வயதில் கருத்தரித்திருகின்ற செய்தியை வானதூதர் வழியாகக் கேள்விப்படும் மரியா, தான் இருக்கும் இடத்திற்கும் எலிசபெத்து இருக்கும் இடமான அயின்கரிமிற்கும் நீண்ட தூரம் இருக்கும், மலைப்பாங்கான பகுதி என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. தக்க நேரத்தில் அவருக்கு உதவி செய்யவேண்டும், அவருக்கு உறுதுணையாக என்பதுதான் மரியாவின் எண்ணமாக இருந்தது. எனவேதான் அவர் எலிசபெத்துக்கு உதவி செய்வதற்கு விரைந்து செல்கின்றார்.
மரியாவிடம் இருந்த ‘தேவையில் இருக்கின்றவர்களுக்கு உதவி செய்யும்’ மனநிலை நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நம் கண்முன்னால் ஒருவர் அடிபட்டுக் கிடந்தால் கூட, ‘நமக்கு ஏன் வம்பு?’ என்று கண்டும் காணமால் போகக்கூடிய நிலைதான் இன்றைக்கு இருக்கின்றது; இத்தகைய நிலை மாறவேண்டும். மரியாவைப் போன்று தேவையில் இருக்கின்ற மக்களுக்கு உதவி செய்யகூடிய நல்ல மனிதர்களாக நாம் வாழ்வதற்கு முயற்சி எடுக்கவேண்டும். அதுதான் நம்முடைய வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுப்பதாக இருக்கின்றது. மட்டுமல்லாமல் தேவையில் இருப்பவர்களுக்கு, ஏழைகளுக்கு நாம் செய்கின்ற உதவி நம்முடைய உள்ளத்திற்கு அமைதியைத் தருவதாகவும் இருக்கின்றது.
ஒரு சமயம் கார்ல் மென்னிஞர் (Karl Menningnar) என்ற புகழ்பெற்ற மருத்துவரிடம் ஒருவர், “எனக்கு அடிக்கடி மனச்சோர்வு ஏற்படுகின்றது. அப்போதெல்லாம் நான் செய்வது?” என்று கேட்டார். அதற்கு அவர், “உங்களுக்கு எப்போதெல்லாம் மனச்சோர்வு ஏற்படுகின்றதோ அப்போது நீங்கள் கடைக்குச் சென்று, கொஞ்சம் அரிசி, பருப்பு, காய்கறிகள், துணிமணிகள் வாங்கிகொண்டு உங்கள் பகுதியில் இருக்கின்ற ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்துப் பாருங்கள். அப்போது உங்கள் மனச் சோர்வு எல்லாம் நீங்குவதை உணர்வீர்கள்” என்றார். கார்ல் மென்னிஞர் சொன்னது போன்று அவர் செய்ய அவருடைய மனச்சோர்வு, கவலைகள் எல்லாம் காணாமலே போய்விட்டன.
ஆகவே, நாம் மரியாவைப் போன்று தேவையில் இருக்கின்றவர்களுக்கு உதவுகின்றபோது, நாம் செய்யக்கூடிய அந்த அன்பான உதவிகள் நமது வாழ்விற்கு அர்த்தத்தைத் தருவதோடு மட்டுமல்லாம், அது நம்முடைய உள்ளத்திற்கு அமைதியையும் நிம்மதியையும் தரும் என்பது உறுதி. மரியா இப்படி தேவையில் இருக்கின்ற மக்களுக்கெல்லாம் உதவி செய்கின்ற பெண்மணியாய் விளங்கியதால்தான் என்னவோ அவர் மகனும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் தேவையில் இருக்கின்ற மக்களுக்கு உதவுகின்றவராக, சென்ற இடங்களிலெல்லாம் நன்மை செய்பவராக விளங்குகின்றார் (திப 10:38).
மரியா எலிசபெத்தை சிந்தித்த இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்ற இரண்டாவது செய்தி ஒருவர் மற்றவரை அவரிடமிருக்கும் நல்ல பண்புகளுக்காக பாராட்டவேண்டும் – வாழ்த்தவேண்டும் என்பதாகும். மரியாவோ எலிசபெத்தை சந்தித்ததும், அவர் முதிர்ந்த வயதில் கருத்தரித்ததற்காக அவரை வாழ்த்துகின்றார். எலிசபெத்தோ மரியாவை, அவர் ஆண்டவரின் தாயாக மாறியதற்காக வாழ்த்துகின்றார் – பாராட்டுகின்றார். இதனால் அந்த இடமே மகிழ்ச்சி பொங்கி வழிகின்றது.
எப்போதுமே நாம் அடுத்தவரிடம் இருக்கும் குறைகளைத்தான் பேசித் திரிகின்றோமே ஒழிய, நல்லதை ஒருபோதும் பேசுவதில்லை, பாராட்டுவதில்லை, ஏன் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவதும் இல்லை. என்றைக்கு நாம் அடுத்தவரைப் பாராட்ட, வாழ்த்தக் கற்றுக்கொள்கின்றோமோ அன்றைக்கு நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும், மட்டுமல்லாமல், பாராட்டுகின்றபோது பாராட்டப்படுவோரின் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.
ஒரு சமயம் கேப்ரியல் ரோசஸ்டி என்னும் புகழ்பெற்ற ஓவியரை சந்திக்க முதியவர் ஒருவர் வந்தார். வந்தவர் தன் ஓவியங்கள் சிலவற்றைக் அவரிடம் காட்டினார். மிகவும் சுமாராக இருந்தன. ரோசஸ்டி தயங்கித் தயங்கி தன் விமர்சனத்தைச் சொன்னார். அந்த முதியவர் முகம் வாடியது. .
சிறுது நேரம் கழித்து அவர் வேறு சில ஓவியங்களைக் காட்டினார். ஓர் இளம் ஓவியனின் கைவண்ணம் என்று தெரிந்தது. “அற்புதமான ஓவியங்கள். இந்த இளைஞனுக்கு நல்ல எதிர்காலம்” என்ற ரோசஸ்தி, “உங்கள் பேரன் வரைந்ததா?” என்று கேட்டார். அதற்கு முதியவர், “இந்த ஓவியங்களை என்னுடைய பேரன் வரையவில்லை, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் வரைந்தவை. உங்களைப் போல் ஒருவர் அன்றே என்னைப் பாராடியிருந்தால் இன்று நான் உங்களைப் போன்று வந்திருப்பேன்” என்று மிக வருத்தத்தோடு சொன்னார்.
ஒருவரை, அவரிடம் இருக்கும் திறமைக் கண்டு பாராட்டாமல் இருப்பதால் எத்தகைய இழப்புகள் ஏற்படுகின்ற என்பதை இந்த நிகழ்வு மிக வேதனையோடு பதிவு செய்கின்றது. ஆம், நமக்கு அடுத்தவரிடம் குறைகண்டு பிடிக்கத் தெரிந்திருக்கின்றதே தவிர வாழ்த்தவோ பாராட்டவோ தெரியவில்லை. ஆனால், மரியாவும் எலிசபெத்தும் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றார்கள். அவர்கள் இருவரும் ஓருவர் மற்றவருக்கு ஆண்டவர் செய்த அற்புதங்களை நினைத்து வாழ்த்துகின்றார்கள். அதனால் அந்த இடத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிகின்றது.
வால்ட்டர் என்னும் சிந்தனையாளர் சொல்வார், “பாராட்டுவது என்பது மிகச் சிறப்பான காரியம். அது பாராட்டப்படுவோரிடம் இருக்கின்ற நல்ல பண்புகளைகூட பாராட்டுவோருக்கு உரித்தாக்கிவிடும்” என்று. (Appreciation is a wonderful thing; it maeks what is excellent in others belong to us as well). இது உண்மையிலும் உண்மை.
ஆகவே, நாம் மரியாவைப் போன்று தேவையில் இருப்போருக்கு உதவிட விரைவோம், பிறரிடம் இருக்கும் நல்ல பண்புகளை, நல்லதைப் பாராட்டுவோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed