ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்”
மாணவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு சிறுகதை எழுதுவது கைகூடி வந்தது. அவனுடைய திறமையைப் பார்த்துவிட்டு, அவனுக்குக் கற்றுக்கொடுத்து வந்த ஆசிரியர்கூட, “தம்பி! எதிர்காலத்தில் நீ மிகச்சிறந்த எழுத்தாளராய் வருவாய். அதனால் தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு” என்று அவனை உற்சாகப்படுத்தினார்.
ஆசிரியர் சொன்ன இவ்வார்த்தை அவனுக்கு இன்னும் உற்சாகத்தைக் கொடுத்தது. அவன் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தான். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அவன் கல்லூரிக்குச் சென்றபோதும் எழுதிக்கொண்டே இருந்தான். இப்போது அவன் தான் எழுதிய சிறுகதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பத் தொடங்கினான். ஆனால் பத்திரிக்கைகளோ அவன் எழுதிய கதைகளை, “இவற்றையெல்லாம் எங்களால் பிரசுரிக்க முடியாது” என்று சொல்லி திருப்பி அனுப்பின. இவற்றைக் கண்டு அவன் மனந்தளராமல், தொடர்ந்து தான் எழுதிய கதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தான். அப்போதும் பத்திரிக்கைகள் அவன் எழுதிய சிறுகதைகளை திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தன.
இதனால் அவனுடைய நெருங்கிய நண்பர்கள், ‘பிரசுரமாகாத கதைகளை எழுதும் எழுத்தாளன்’ என்று அவனைக் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். அவர்களுக்குப் பயந்து அவன், தான் எழுதிய கதைகளை இரவில் போய் அஞ்சலகத்தில் ‘போஸ்ட்’ செய்துவிட்டது வந்தான். அப்போதும்கூட அதே நிலைதான் ஏற்பட்டது. அப்படிப்பட்ட சமயத்தில் ‘நாம் எழுதுவதைக் கைவிட்டு விடலாமா’ என்ற எண்ணம்கூட அவனுக்கு ஏற்பட்டது. இருந்தாலும் தன்னுடைய ஆசிரியருடைய வார்த்தைகளிலும் தன் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து தொடர்ந்து எழுதி, பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான்.
இப்படிப்பட்ட சமயத்தில் அவனுடைய ஒரு சிறுகதை ஒரு பத்திரிக்கையில் வந்தது. அதைப் பார்த்துவிட்டு அவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். தொடர்ந்து அவனுடைய ஒருசில சிறுகதைகள் ஒருசில பத்திரிக்கைகளில் வரத்தொடங்கின. ஆனால், அவன் எழுதிய சிறுகதைகளுக்கு ஒருபைசா கூட சன்மானமாகக் கிடைக்கவில்லை. தன்னுடைய சிறுகதைகளைத்தான் மக்கள் விரும்பி வாசிக்கத் தொடங்கிவிட்டார்களே, அதுவேபோதும் என்ற மனநிறைவில் தொடர்ந்து அவன் எழுதிக்கொண்டே இருந்தான். நாட்கள் செல்லச் செல்ல அவனுக்கென்று பெரிய வாசகர்கூட்டம் உருவானது. பின்னாளில் அவன் எழுதிய ஒவ்வொரு வார்த்தைக்கும் மூன்று பவுண்டுகள் சம்மானம் பெறும் வண்ணம் மிகவும் பிரபலம் ஆனான். அவன்(ர்)தான் இங்கிலாந்தில் பிறந்த உலகப் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸ்.
சார்லஸ் டிக்கன்ஸ், தன்னுடைய ஆசிரியர் சொன்ன வார்த்தைகளையும் தன்னையும் உறுதியாக நம்பி எழுதினார். அதனால் உலகப் புகழ் பெற்றார். நாமும் நம்மையும் நம்மைப் படைத்த இறைவனையும் நம்பி வாழ்கின்றபோது அதிசயங்களைச் செய்யலாம் என்பது உண்மை.
நற்செய்தி வாசகத்தில், மரியா தன்னுடைய உறவினரான எலிசபெத்தின் வீட்டிற்கு விரைந்து செல்கின்றார். அங்கே அவரை வாழ்த்துகிறார். அதற்கு பிறகு எலிசபெத்தும் மரியாவை வாழ்த்துகின்றார். அப்படி எலிசபெத் மரியாவை வாழ்த்துகின்றபோது, “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்று வாழ்த்துகின்றார். இந்த வார்த்தைகளை மட்டும் நாம் இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
வானதூதர் கபிரியில் மரியாவிடத்தில் வந்து, வாழ்த்துச் சொல்லிவிட்டு, இறைவனின் மீட்புத் திட்டத்தைச் சொல்கின்றபோது, ‘நானோ கன்னியாயிற்றே, இது எப்படி நடக்கும்?’ என்று மரியா கலங்கினாலும், ஆண்டவர் சொன்னவை நிச்சயம் நடக்கும் என்று உறுதியாக நம்புகிறார். அவர் நம்பியதோடு மட்டுமல்லாமல், நம்பியத்தை தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வாக்கின்றார்.
ஒருமுறை ஆண்டவர் இயேசு மக்கள் கூட்டத்திற்குப் போதித்துக் கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து ஒரு பெண் எழுந்து, “உம்மைக் கருத்தாங்கி, பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்பார். இயேசுவோ அவரிடம், “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் என்பார் (லூக் 11: 27- 28). இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளின் வழியாக மரியா இரண்டு விதங்களில் பேறுபெற்றவர் ஆகின்றார். ஒன்று, அவர் இயேசுவைப் பெற்றேடுத்தனால், இரண்டு. இறைவார்த்தையைக் கேட்டு, அதனை நம்பிக்கை வாழ்வாக்கியதால். இப்படிப்பட்ட சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் ஆனதால், மரியா பெண்களுக்குள் ஆசிபெற்றவர் ஆகின்றார்.
நாம் மரியாவைப் போன்று இறைவார்த்தை நம்பி, அதனை வாழ்வாக்க முயற்சிக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம். ஒருவேளை நாம் இறைவார்த்தையை நம்பி வாழ்வாக்காமல் இருந்தால், இனிமேலாவது அதை நம்பி வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed