கடந்த சில வாரங்களாக, தன் புதன் மறைக்கல்வி உரைகளில் பத்துக் கட்டளைகள் குறித்த சிந்தனைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு’ என்ற இறைக்கட்டளை குறித்தே இவ்வாரமும் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அன்பு சகோதரர் சகோதரிகளே, பத்துக் கட்டளைகள் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் மூன்றாவது கட்டளை குறித்து சிந்தித்து வருகிறோம். ”இறைவனின் நாளைத் தூயதாகக் கடைப்பிடித்தல்’ என்பதே இக்கட்டளை. இணைச்சட்ட நூலில் உள்ள கலந்துரையாடல்களை நாம் உற்றுநோக்கும்போது, ‘சாபத்’ என்ற நாளில் ஓய்வெடுக்குமாறு விடப்பட்டுள்ள கட்டளை, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றதோடு தொடர்புடையது என அறிய வருகிறோம். அடிமைகளுக்கு ஓய்வென்பதில்லை என்பது நமக்குத் தெரியும். இந்த நவீன காலத்திலும் எண்ணற்ற நம் சகோதரர் சகோதரிகள், பல்வேறு அடிமைத்தனங்களாலும், அநீதிகளாலும், உள்மன உளைச்சல்களாலும் துன்புற்று வருகின்றனர். அவர்கள் விடுதலைக்காகவும் ஓய்வுக்காகவும் ஏங்குகின்றனர். இருப்பினும், மறைசாட்சிகளின் எடுத்துக்காட்டுகள் நமக்கு காண்பிப்பதுபோல், இருள் சூழ்ந்த சிறைகளில்கூட உள்மன விடுதலையையும், ஓய்வையும் அனுபவிக்க முடியும். உண்மை சுதந்திரம் என்பது, தேர்ந்தெடுக்கப்படுதல் என்பதைவிட மேலானது. இது சுயநலம், பாவம், அன்பின்மை எனும் கட்டுகளிலிருந்து விடுதலை பெறுவதாகும். இத்தகைய அடிமைத்தனங்களில் ஒருநாளும் ஓய்வு கிடைப்பதில்லை. கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நாம், இந்த மூன்றாவது கட்டளையாகிய, ‘ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு’ என்பதை இயேசுவின் வருகையின் ஒளியில் வாசித்து, அதனைப் பின்பற்றுகிறோம். சிலுவைப் பலியின் வழியாக, பாவத்தின் அடிமைத்தளைகளில் இருந்து நம்மை மீட்ட இயேசு, அவரின் உண்மை, இரக்கம், மற்றும், முடிவற்ற அன்பிலிருந்து பிறந்த விடுதலையில், நாம் ஓய்வெடுக்க நமக்கு உதவுகிறார்.
இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
மறைக்கல்வியுரை : சுயநலம், பாவம், மற்றும் அன்பின்மையிலிருந்து விடுதலை
September 13, 2018
One Min Read