திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வியுரையைக் கேட்டு ஆசீர் பெறுவதற்காக, சனவரி 09, இப்புதன் காலையில் வத்திக்கானிலுள்ள புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் அமர்ந்திருந்தனர். காலை 9.30 மணிக்கு அரங்கத்திற்கு வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூவொரு கடவுளிடம் செபித்து, இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். முதலில், லூக்கா நற்செய்தி பிரிவு 11லிருந்து, “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும், ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! (லூக்.11,9-13) என்ற இயேசுவின் திருச்சொற்கள் பல மொழிகளில் வாசிக்கப்பட்டன. அதன்பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லி, தனது மறைக்கல்வியை முதலில் இத்தாலியத்தில் ஆரம்பித்தார். திருத்தந்தையின் மறைக்கல்வியுரை, ஆங்கிலத்தில் சுருக்கமாக இவ்வாறு வழங்கப்பட்டது.
அன்புச் சகோதரர், சகோதரிகளே, வானகத்தந்தையை நோக்கி நம் ஆண்டவர் செபிக்க கற்றுக்கொடுத்த செபம் பற்றிய நம் மறைக்கல்வியுரையில், மிகவும் உறுதியுடன் செபிக்க வேண்டியதன் அவசியம் குறித்த, இயேசுவின் போதனை பற்றி இன்று பார்ப்போம். கிறிஸ்துவின் வாழ்வு முழுவதும் செபத்தில் ஆழ்ந்திருந்தது என, நற்செய்திகளில் நாம் காண்கின்றோம். இயேசுவின் இந்த செப வாழ்வு, அவர் தம் இறைத்தந்தையோடும், அவரது ஒவ்வொரு செயலையும் வழிநடத்திய தூய ஆவியாரோடும் ஒன்றித்திருந்ததிலிருந்து பிறந்ததாக அமைந்திருந்தது. இயேசுவின் இடைவிடாத செபத்தை, அனைத்திற்கும் மேலாக, அவரது திருப்பாடுகள் நிகழ்வுகளில் காண முடிகின்றது. இறுதி இராவுணவின்போது, பேதுரு விசுவாசத்தில் உறுதியாய் இருக்குமாறு, இயேசு செபித்தார். அந்நேரத்தில் இயேசு பேதுருவிடம், “நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்றார். (cf. லூக்.22:32). இயேசு சிலுவையில் உரைத்த இறுதி வார்த்தைகள், மன்னிப்புக்காகச் செபிப்பதாகவும், தம் தந்தையின் விருப்பத்தில் நம்பிக்கை வைப்பதை வெளிப்படுத்துவதாகவும் இருந்தன. செபிப்பது எப்படி என தங்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறு சீடர்கள் இயேசுவிடம் கேட்டபோது, அவர், “எங்கள் வானகத்தந்தையே” என்ற சொற்களை அவர்களுக்கு அளித்தார். தந்தையே எனச் சொல்வது எத்துணை அழகானது. ஆயினும், மனஉறுதியுடன், மனந்தளராமல் செபிக்க வேண்டும், நம் விண்ணப்பங்களுக்கு இறைத்தந்தைப் பதில் அளிப்பார் என்பதில் நம்பிக்கையுடன் செபிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதற்காக, இயேசு இரு உவமைகளைச் சொன்னார். கடவுள், நல்ல இறைத்தந்தையாக, நம் ஒவ்வொரு செபத்தையும், அவருக்கு உகந்த நேரத்திலும், அவரின் மீட்பளிக்கும் திட்டத்திற்கு ஏற்ற வகையிலும் பதில் அளிக்கின்றார். இறைத்தந்தையின் அந்த திட்டம் புதிராக இருந்தாலும், நம்முடையவர், அன்புத்தந்தை என்பதிலும், இவர், ஒவ்வொரு மனித இதயத்திலும் நிறைந்திருக்கும் மகிழ்வுக்காக ஏங்கும் ஆவலை நிறைவேற்றுவதற்கு ஏக்கமாய் இருப்பவர் என்பதிலும், நாம் உறுதியாய் இருக்கலாம்.
“எங்கள் வானகத்தந்தையே” என்ற தலைப்பில், தனது மறைக்கல்வியுரையை இவ்வாறு நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின்னர், இந்த நிகழ்வில் அமர்ந்திருந்த எல்லாரையும், குறிப்பாக, இளையோர், வயது முதிர்ந்தோர், நோயாளர் மற்றும், புதுமணத் தம்பதியரை வாழ்த்தினார். மேலும், சனவரி 13, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் ஆண்டவரின் திருமுழுக்கு விழா பற்றிச் சொல்லி, இயேசுவுக்கு துணிச்சலான சான்றுகளாக வாழ்வதற்கு, தூய ஆவியாரிடம் சக்தியைக் கேட்போம் என்று திருத்தந்தை கூறினார். இறுதியில், அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்
Source: New feed