எக்காலத்தையும்விட இக்காலத்தில், நம் சமுதாயங்களுக்கு, அமைதியின் கலைஞர்களும், மனிதக் குடும்பத்தின் நன்மையையும், மகிழ்வையும் விரும்புகின்ற தந்தையாம் இறைவனின் தூதுவர்களும், சாட்சிகளும் தேவைப்படுகின்றனர்” என்ற சொற்களை, சனவரி 01, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புத்தாண்டு நாளில் திருஅவை, 52வது உலக அமைதி நாளைக் கடைப்பிடித்ததைமுன்னிட்டு, உலகின் அமைதிக்காக உழைப்பவர்கள், இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றனர் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள மற்றுமொரு டுவிட்டரில், “கடவுளின் தாயான மரியா, இப்புதிய ஆண்டில், நம்மைப் பாதுகாத்து, நம்முடன் வழிநடப்பாராக மற்றும், நம் இதயங்களிலும், உலகிலும், தம் திருமகனின் அமைதியைக் கொணர்வாராக” என்று செபித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
2019ம் ஆண்டு, சனவரி 01, இச்செவ்வாயன்று, கடவுளின் தாய், புனித கன்னி மரியா என்ற விழாவை, திருஅவை சிறப்பித்ததையொட்டி, இவ்வாறு, அன்னை மரியாவின் பரிந்துரையைக் கேட்டுச் செபித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆண்டவருடைய பிறப்பின் எட்டாம் நாளாகிய இன்று, கத்தோலிக்கத் திருஅவையில், புனித கன்னி மரியா, கடவுளின் தாய் என்று எழுச்சியுடன் கொண்டாடப்பெறுகிறார். 1974ம் ஆண்டில், புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், Marialis Cultus எனப்படும் திருத்தூது கொள்கை வழியாக, சனவரி முதல் நாளில் இவ்விழா சிறப்பிக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார். இதற்குமுன், சனவரி முதல் நாள், குழந்தை இயேசுவுக்குப் பெயர் சூட்டும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
ஐந்தாம் நூற்றாண்டில், நெஸ்டோரியஸ் என்பவரின் தவறான கொள்கையைப் பின்பற்றியவர்கள், மரியா, இயேசுவின் தாய்தான், கடவுளின் தாய் அல்ல என்று பிதற்றி வந்தனர். இதற்கு மறுப்பு தெரிவிப்பதற்காக, கி.பி.431ம் ஆண்டில் எபேசு நகரில் கூடிய பொதுச் சங்கம், “மரியா, கடவுளின் தாய்” (Mary is Theotokos) என்பதை வரையறுத்து கூறியது. அன்னை மரியாவைப் பற்றிய நான்கு விசுவாசக் கோட்பாடுகளில் இதுவே, முதன்மையானதும், பழமையானதும் ஆகும்.
மரியா, எப்பொழுதும் கன்னி (கி.பி.553); மரியா, அமல உற்பவி (கி.பி.1854); மரியா, விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டார் (கி.பி.1950) ஆகியவை, மரியாவைப் பற்றிய ஏனைய மூன்று விசுவாசக் கோட்பாடுகள் ஆகும்.
Source: New feed