பயணமாகும் திருச்சபையாகிய நாம் விண்ணகத்தை அடைவதற்கான படகுதான் அன்னை மரியா – தூய ஜெர்மானுஸ்.
இன்று நாம் மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். மகிழ்ச்சி மிகுந்த இந்த பொன்னாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்பதைச் சந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
வரலாற்றுப் பின்னணி
இஸ்ரயேலில் பிறந்த ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்குச் சொந்தம் என்பதைப் போன்று, பெண்தலைப்பேற்றை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற எந்தவொரு விதிமுறை இல்லை. ஆனாலும் மரியாவின் பெற்றோரான ஜோக்கினும் அன்னாவும் அவரை ஆண்டவருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கின்றார்கள்.
மரியா ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதைப் பற்றியா செய்தி விவிலியத்தில் எங்கும் காணக்கிடைக்கவில்லை. ஆனால் திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில் இதைப் படிக்கின்றோம். மரியாவின் பெற்றோருக்கு நீண்டநாட்களாக குழந்தைப் பாக்கியம் இல்லை. எனவே இருவரும் குழந்தைக்காக ஆண்டவரிடத்தில் இடைவிடாது வேண்டிவந்தார்கள். அதன் பயனாக அவர்களுடைய முதிர்ந்த வயதில் மரியா பிறந்தார். எனவே இறையருளால் பிறந்த மரியாவை, அவருடைய பெற்றோர் அவருக்கு மூன்று வயது நடந்துகொண்டிருந்தபோது ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர். இப்படித்தான் யாக்கோபு நற்செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.
543 ஆம் ஆண்டு ஜஸ்டினியன் என்ற மன்னன் மரியாவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தை நினைவுகூரும் வகையில் எருசலேமில் மரியாவுக்கென்று ஓர் ஆலயத்தைக் கட்டிஎழுப்பினான். அந்த ஆலயம் கட்டப்பட்டதிலிருந்து மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது ஒரு விழாவாகக் கொடுக்கப்பட்டது. 1166 ஆம் ஆண்டு மனுவேல் கமீனஸ் என்பவரால் இவ்விழா கொண்டாடப்பட்டதற்கான ரலாற்றுக் குறிப்பு இருக்கின்றது. இப்படியாக பல்வேறு நபர்களால், பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்ட இவ்விழா 1585 ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் என்பவரால் உலகம் கொண்டாடப் பணிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இவ்விழா நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பாவ மாசின்றிப் பிறந்த மரியா, ஆண்டவர் இயேசு அவருடைய வயிற்றில் பிறக்க சிறந்த விதமாய் தயாரிக்கப்படுகின்றார், அதன் ஒரு படிதான் அவர் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மரியா தன்னுடைய உள்ளத்தை/ உதிரத்தை எப்போதும் இறைவன் தாங்கும் இல்லிடமாகவே வைத்திருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடும் இந்த நாளில், இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்னவென்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1. இறைவனுக்கு நம்மை முழுமையாய் அர்ப்பணித்தல்
மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பிறகு, இறைவனுக்குத் தன்னை முழுமையாய் அர்ப்பணித்து, இறைவனின் திருவுளமே தன்னுடைய திருவுளம் என உணர்ந்து வாழ்கின்றார். வானதூதர் கபிரியேல் அவரிடம் மங்கள வார்த்தை சொன்னபோதுகூட, “என்னுடைய விரும்பம் அல்ல, உம்முடைய விரும்பப்படியே ஆகட்டும்” என்கிறார். ஆகையால் இந்த விழா உணர்த்தும் மிக முக்கியமான செய்தியாக நாம் புரிந்துகொள்ளவேண்டியது கடவுளுக்கு நம்மை முழுமையாய் அர்ப்பணிக்கவேண்டும் என்பதாகும். அரைகுறை மனதோடு அல்ல, முழுமையாய் நாம் இறைவனுக்கு நம்மையே அர்ப்பணிக்கவேண்டும்.
ஒர் ஊரில் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனிடம் அளவுக்கு அதிகமாக செல்வம் கொட்டிக்கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்லை. இந்த வாழ்க்கை வீண் என்று துறவறத்தில் இறங்கினான். எனவே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், பணம் எல்லாவற்றையும் ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துகொண்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான். அப்போது துறவி மரத்தடியில உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்த அந்த செல்வந்தன், அந்த மூட்டையை துறவியின் காலடியில் வைத்து விட்டு, “குருவே! இதுதான் என்னுடைய மொத்த சொத்தும். இவை அனைத்தையும் உமக்குத் தருகின்றேன்.. இனி இவை எதுவும் எனக்கு வேண்டாம். எனக்கு துறவியின் அமைதியும், சந்தோஷமும் மட்டும் போதும்” என்றான்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட துறவி, “இவை அனைத்தையும் பூரணமாக அர்ப்பணித்து விட்டாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆம் குருவே!” என்றான். இப்படி அவன் சொல்லி முடித்ததுதான் தாமதம், துறவி அந்த மூட்டையை தலையில் வைத்துக்கொண்டு வேகமாக ஓட ஆரம்பிச்சார். அதைப் பார்த்ததும் செல்வந்தனுக்கு பேரதிர்ச்சி. போலித் துறவியாக இருப்பாரோ இவர், என நினைத்த அவன் துறவியைத் துரத்த ஆரம்பித்தான். துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் துறவி எல்லாத் தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்றார். அப்போது அந்த செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார், “என்ன பயந்துவிட்டாயா? இப்போதாவது உன் பூரண அர்ப்பணத்தையும் துறவையும் புரிந்து கொண்டாயா?, எல்லாவற்றையும் முழுமையாய் அர்ப்பணித்திருந்தாய் என்றால், என்பின்னால் இப்படி ஓடி வந்திருக்கமாட்டாய், என் பின்னால் ஓடியதிலிருந்தே தெரிகின்றது நீ இன்னும் துறவற வாழ்க்கைக்கு உன்னை முழுதாய் அர்ப்பணிக்கவில்லை என்று” என்று சொல்லிவிட்டு, “இந்தா உன் சொத்து மூட்டை, நீயே வைத்துக்கொள்” என்று சொல்லி அதனை அவனிடம் திருப்பிக் கொடுத்தார். துறவியின் வார்த்தைகளைக் கேட்ட செல்வந்தன் வருத்ததோடு வீடு சென்றான்.
முழுமையாகத் தன்னை அர்ப்பணிக்காத யாரும் துறவற வாழ்வுக்குத் தகுதியில்லை என்பதை இந்த கதை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.
ஆனால் மரியா அப்படியில்லை, அவர் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிறகு தன்னுடைய உடல் பொருள் ஆவி அத்தனையையும் அவருக்காகக் கொடுத்தார். எனவே, மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்த விழாநாளில் நாமும் மரியாவைப் போன்று இறைத்திருவுளம் நிறைவேற, இறைவனுக்காக நம்மை முழுமையாய் அர்ப்பணிப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்
Source: New feed