கடவுளின் தாயான மரியா, நம்மை உற்றுநோக்குவதற்கும், நம்மைத் தழுவிக்கொள்வதற்கும், தம் கரத்தால் நம்மை எடுப்பதற்கும் அனுமதிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புத்தாண்டு திருப்பலியில் கூறினார்.
‘கடவுளின் தாய், புனித கன்னி மரியா’ விழாவான, சனவரி 01, இச்செவ்வாய் காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெத்லகேமில் குழந்தை இயேசுவைக் கண்ட இடையர்கள், அவரைப் பற்றிச் சொன்னவற்றைக் கேட்ட அனைவரும் வியப்படைந்தனர் (லூக்.2:18) என்ற லூக்கா நற்செய்தி திருச்சொற்களை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.
மரியாவால் வியப்படைய வேண்டும்
கடவுளின் தாயாகிய மரியாவால் நாமும் வியப்படைய வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, மரியா, கடவுளின்தாய் மட்டுமல்ல, ஆண்டவரிடம் நாம் மறுபிறப்பு அடைவதற்கு நமக்கு வழியைக் காட்டுகிறவர் எனவும், மரியா யார் என்பது குறித்து, திருஅவையும் வியப்படைய வேண்டும் எனவும் கூறினார்.
மரியா நம்மை உற்றுநோக்க அனுமதிக்க வேண்டும்
ஆண்டவரின் மணமகளாம் திருஅவை, வாழும் கடவுள் தங்கியிருக்கும் இடமாக இருந்து, தன் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் தாயாக இருக்க வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, மரியா நம்மை உற்றுநோக்கும்போதெல்லாம், அவர் நம்மைப் பாவிகளாக அல்ல, மாறாக, பிள்ளைகளாக நோக்குகிறார் என்றார்.
மரியா நம்மை உற்றுநோக்க அனுமதிப்பதன் வழியாக, கடவுளின் அழகு மற்றும் விண்ணகத்தின் பிரதிபலிப்பை நாம் பார்க்கிறோம் எனவும், மரியாவின் உற்றுநோக்கல், இருள்அடர்ந்த மூலையில் ஊடுருவும் மற்றும் நம்பிக்கையை உயிர்த்துடிப்புள்ளதாக்கும் எனவும், திருத்தந்தை மறையுரையாற்றினார்.
மரியா நம்மை உற்றுநோக்கும்போது, அன்புக் குழந்தைகளே, துணிவோடிருங்கள், உங்கள் தாய் இங்கே இருக்கிறேன் என்று சொல்கிறார் எனவும் உரைத்த திருத்தந்தை, மரியா, தாம் வாழ்ந்த காலத்தில், கானாவூரில் புதுமணத் தம்பதியருடனும், எருசலேம் மாடியறையில் சீடர்களுடனும், எலிசபெத்தைச் சந்தித்தவேளையிலும் நடந்துகொண்டதுபோலவே, இன்றும் நம் ஒவ்வொருவரிடமும் நடந்து கொள்கிறார் என்று கூறினார்.
அன்னையர் தங்கள் குழந்தைகளைக் கையிலேந்தி, அவர்களுக்கு அன்போடு வாழ்வை ஊட்டுகின்றனர், ஆனால் இன்று எத்தனையோ பிள்ளைகள், தங்கள் வாழ்வைக் கையில் எடுத்துக்கொண்டு அலைந்து, தங்களின் வாழ்வுப் பாதையை இழந்து விடுகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, அன்னையரின் வீரத்துவ வாழ்வு பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
மரியா, தம் கரத்தில் நம்மை எடுப்பதற்கு அனுமதிப்போம் என்று கூறியத் திருத்தந்தை, கடவுளுக்கும் ஒரு தாய் தேவைப்பட்டார், இயேசு, சிலுவையில் தொங்கிய வேளையில், மரியாவை, நமக்கு அளித்தார், எனவே மரியாவை, நம் வாழ்வில் வரவேற்க வேண்டும் என்று கூறினார்.
Source: New feed