மனித உரிமைகளின் உலகளாவிய அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள், OSCE என்றழைக்கப்படும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு நிறுவனத்திலும் எதிரொலிப்பது குறித்து திருப்பீடம் நிறைவு கொள்கிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவையில் கூறினார்.
வியன்னாவில், மார்ச் 7 இவ்வியாழனன்று நடைபெற்ற OSCE நிறுவனத்தின் 1219வது கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்ட அருள்பணி Janusz Urbanczyk அவர்கள், மனித உரிமைகளைக் காப்பதற்கு, OSCE நிறுவனம் 2018ம் ஆண்டு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் திருப்பீடம் பாராட்டுவதாக எடுத்துரைத்தார்.
பாதுகாப்பும், நிலையான தன்மையும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டது என்பதை தன் உரையில் குறிப்பிட்ட அருள்பணி Urbanczyk அவர்கள், மனித மாண்பும், மனித உரிமைகளும் மதிக்கப்படும்போது, பாதுகாப்பும், வளர்ச்சியும் உறுதி செய்யப்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
மனித உரிமைகளின் ஆரம்ப கட்டமாக, சமய உரிமை விளங்குகிறது என்று கூறிய அருள்பணி Urbanczyk அவர்கள், கிறிஸ்தவர்களுக்கும், சிறுபான்மை மதத்தவருக்கும் எதிராக தொடர்ந்துவரும் கொடுமைகளைக் குறித்து கவலை வெளியிட்டார்.
உலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்தோர் பிரச்சனையைக் குறித்து எடுத்துரைத்த அருள்பணி Urbanczyk அவர்கள், இதன் கொடுமையான விளைவுகளில் ஒன்றான மனித வர்த்தகத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு, OSCE நிறுவனம் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்தார்.