நல ஆதரவுப் பணிகளில் இத்தாலியின் உயிரியல் மருத்துவப் பல்கலைக்கழக அறக்கட்டளை ஆற்றிவரும் சேவைக்கு தன் ஆதரவையும் நன்றியையும் வெளியிடுவதாக, அவ்வமைப்பினரை, திருப்பீடத்தில் சந்தித்தபோது தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 18ம் தேதி, இத்திங்கள்கிழமை, மருத்துவரான புனித லூக்காவின் திருநாளன்று, இவ்வமைப்பினரை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்கள் மருத்துவ உதவிகளை மட்டும் ஆற்றுவதில்லை, மாறாக, நோயுற்றோர் மீதான அக்கறையுடன் கூடிய அன்புடன், நோயாளிகளுக்கு இயைந்த சிகிச்சைமுறை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவருவதையும் பாராட்டினார்.
மனிதர்களுக்கு சேவைபுரிவது இறைவனுக்கு மகிழ்வைத் தருவதாக உள்ளது என்ற திருத்தந்தை, மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படும் அனைத்து ஆய்வுகளையும் வரவேற்பதாகவும், மனிதனின் உடைபட்ட நிலையில், சிலுவையில் அறையுண்ட இயேசுவின் சாயலைக் காண்பது என்ற கிறிஸ்தவ மெய்மை நிலை ஒருநாளும் இழக்கப்பட்டுவிடக்கூடாது என்ற அழைப்பை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.
எந்த ஓர் உயிரும் பயனற்றது என ஒதுக்கி தள்ளப்பட முடியாதது என்பதற்கு கிறிஸ்தவ நல ஆதரவு மையங்கள் தங்கள் பணிகள் வழியாக சான்று பகிர்கின்றன எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, மனித மாண்புடன் ஒவ்வொருவரும் நடத்தப்படும் இடங்களாக இவ்வமைப்புக்கள் உள்ளன எனவும் உரைத்தார்.
அறிவியல், ஆய்வுகள், மற்றும் அக்கறையுடன் கூடிய பராமரிப்புகள் ஆகியவைகளுக்கு இடையேயுள்ள தொடர்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அறிவுத்திறனும் கருணையும் ஒன்றிணைந்து செயல்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலாப நோக்கத்திற்கான வாய்ப்பாக நோக்கப்படாமல், நோயுற்றோர் மீதான அக்கறையின் வெளிப்பாடாக நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாம் ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதன் தேவையை இன்றைய பெருந்தொற்றுக் காலம் நமக்குக் கற்பித்துத் தந்துள்ளது என்ற திருத்தந்தை, அறிவு பகிரப்படவேண்டியது என்பதை நாம் செயல்படுத்தவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இன்றையச் சூழலில், தடுப்பூசிகள், ஏழைநாடுகளோடு பகிரப்படவேண்டியதன் அவசியத்தையும், அச்செயல், அனுதாபத்தின் நடவடிக்கையாக இல்லாமல், அந்நாடுகளின் மாண்பை மதிப்பதை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்