
“படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?” (மத் 19:4).
கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். (தொ.நூ. 2:24) (அன்பின் மகிழ்வு 9)
படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், `ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்’, என்று கூறி, துவக்க நூலின் வார்த்தைகளை மீண்டும் நினைவூட்டுகிறார் இயேசு.
படைப்பின்போதே, கணவனும், மனைவியும், ஒன்றித்திருக்க பணிக்கப்பட்டிருக்கிறார்கள். ‘இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாய் இருப்பேன்’ என்று வாக்குறுதி கொடுத்தே, கணவனும், மனைவியும் குடும்பமாக இணைகிறார்கள். குடும்பம், அன்பால் கட்டி எழுப்பப்படுகிறது. ஏனென்றால், அன்பு இருக்கும் இடத்தில்தான், மன்னிப்பு, தியாகம், புரிந்துகொள்ளும் தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை எல்லாம் இருக்கும்.
“ஒரு திருமணத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென்றால் இருவர் தேவை. தோல்விக்கு ஒருவர் போதும்” என்பார் ஹெர்பர்ட் சாமுவேல் என்ற அறிஞர்.
Source: New feed