ஐசக் ஒலே (Isaac Ole) என்ற இளையவர், தன் பாட்டி சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். அவர்கள் குடும்பத்தில் நிலவும் பெருமை மிகுந்த ஒரு பாரம்பரியத்தைப்பற்றி பாட்டி சொன்னது, ஐசக்கை அதிகம் கவர்ந்தது. அதாவது, ஐசக்கின் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என்று, மூன்று தலைமுறையினர், தங்கள் 21வது பிறந்தநாளன்று, ஊருக்கு நடுவே இருந்த ஏரியில் நடந்து சென்று, மறுகரையில் இருந்த ‘கிளப்’பில் முதல் முறையாக, சட்டப்பூர்வமாக மது அருந்திவிட்டு, மீண்டும் ஏரியில் நடந்து, வீட்டுக்குத் திரும்பினர் என்று பாட்டி சொன்னது, ஐசக்கின் மனதில் ஆழப் பதிந்தது.
ஐசக் ஒலே, தன் 21வது பிறந்தநாளன்று, நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு ஏரிக்குச் சென்றார். இருவரும் ஒரு படகில் ஏறி, ஏரியின் நடுப்பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்து அடுத்தக் கரைக்கு நடந்து செல்ல, ஐசக் படகைவிட்டு இறங்கி, நீரில் கால் வைத்தபோது, தண்ணீரில் மூழ்கினார். படகிலிருந்த நண்பர் அவரைக் காப்பாற்றி, கரை சேர்த்தார்.
அவமானமும், ஆத்திரமும் நிறைந்தவராய், வீடு திரும்பிய ஐசக், பாட்டியிடம் சென்று, “என் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா, எல்லாரும் 21வது வயதில் ஏரியில் நடந்தார்கள் என்றால், என்னால் மட்டும் ஏன் அது முடியாமல் போனது?” என்று கத்தினார்.
பாட்டி அவரை அமைதிப்படுத்தி, அமரவைத்து, “ஏனெனில், உன் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா எல்லாரும் சனவரி மாதம் பிறந்தவர்கள். எனவே, அவர்களுடைய பிறந்தநாளன்று, ஏரி பனியால் உறைந்திருந்தது. நீயோ, வெப்பம் நிறைந்த ஜூலை மாதம் பிறந்தவன்” என்று அன்பாக விளக்கமளித்தார்.
இது ஒரு சிரிப்புத் துணுக்கு என்றாலும், சிந்தனையைத் தூண்டும் கதை இது. பாரம்பரியம் என்ற போர்வைக்குள் மிக எளிதாக மறைக்கப்படும் உண்மைகளைப்பற்றி சிந்திக்க, இந்தத் துணுக்கு உதவியாக இருக்கும். கொள்ளுத்தாத்தா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்; தாத்தா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்; அப்பா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்… என்று வரிசையாகச் சொல்லி, 21ம் பிறந்தநாளன்று, ஆண் வாரிசுகள் ஏரியில் நடப்பது, அக்குடும்பத்தின் பாரம்பரியம் என்பதில், குடும்பத்தினர் பெருமைப்பட்டனர். ஆனால், அந்த சாகசத்தின் பின்னணியில், சனவரி மாதம், குளிர்காலம், ஏரி நீர் உறைந்திருப்பது போன்ற விவரங்கள், பாரம்பரியம் என்ற போர்வைக்குள் மறைந்துவிட்டன. பின்னணிகளை மறைத்துவிட்டு, ஏரியில் நடப்பதை மட்டும், ஒரு பாரம்பரியச் சடங்காக மாற்றிவிட்டது அக்குடும்பம். பாரம்பரியச் சடங்குகளுக்கு உள்ள சக்தி இது.
குடும்பங்களில், சமுதாயத்தில், பணியாற்றும் இடங்களில் பல பாரம்பரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றை ஏன் செய்கிறோம் என்பதற்குக் காரணங்களும் உள்ளன. ஆனால், காலப்போக்கில், காரணங்கள் மறக்கப்பட்டு, அல்லது, மறைக்கப்பட்டு, ‘இப்படித்தான் செய்யவேண்டும்’ என்ற கட்டாயமாக மாறும்போது, அவை சடங்குகளாகின்றன.
இத்தகையைச் சடங்குகள், சம்பிரதாயங்கள், கடவுளோடும், கோவிலோடும் இணைக்கப்படும்போது, அவை, இம்மியளவும் மாற்றப்பட முடியாத மதச் சடங்குகளாக மாறிவிடுகின்றன. பல வேளைகளில், இந்தச் சடங்குகளும், பாரம்பரியங்களும் கடவுளைவிட முக்கியமான இடம் பெறும் ஆபத்தும் உள்ளது. இத்தகைய ஓர் ஆபத்தைப்பற்றி சிந்திக்க, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்மை, அழைக்கின்றன. வெறுமையான சடங்குகளை மதம் என்று சொல்லும் விபரீதத்தை ஆய்வு செய்ய, இன்றைய வாசகங்கள் வாய்ப்பளிக்கின்றன.
இன்றைய நற்செய்தியில், ‘கழுவுதல்’ என்ற மரபு பற்றிய விவாதம் எழுகிறது. கழுவாதக் கைகளுடன் இயேசுவின் சீடர்கள் உண்பது, பெரும் சர்ச்சையை உருவாக்குகிறது. சம்பிரதாயக் கழுவுதல் (Ritual Washing) என்பது யூதர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பின்பற்றப்பட்ட ஒரு சடங்கு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் வரிகள், இதனை உறுதி செய்கின்றன:
மாற்கு நற்செய்தி 7: 3-4
பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;4 சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
மேலோட்டமாகப் பார்த்தால், இச்சடங்கு மக்களின் உடல் நலனை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட வழிமுறை என்று நாம் பொருள்கொள்ள முடியும். சந்தையிலிருந்து வாங்கிவரும் பொருள்கள் சுத்தமில்லாமல் இருக்க வாய்ப்புண்டு. அதேபோல், வெளியில் சென்று வீடு திரும்புவோரும் கிருமிகள் பலவற்றைச் சுமந்து வர வாய்ப்புண்டு. எனவே, கைகளையும், பொருள்களையும் கழுவுவது, உடல்நலனுக்கு உகந்தது என்பதை, யாரும் மறுக்க இயலாது.
ஆனால், பரிசேயர்களும், யூதர்களும் கழுவுதலை ஒரு சடங்காக மேற்கொள்ள அவர்களை அதிகம் தூண்டிய காரணம், புற இனத்தவருடன் அவர்கள் கொண்ட தொடர்புகள். சந்தையில் வாங்கிய பொருள்கள், வெளி உலகில் அவர்கள் நடமாடிய இடங்கள் ஆகியவை, புற இனத்தவரும் பயன்படுத்திய இடங்கள், அல்லது, பொருள்கள் என்பதால், அவை ‘தீட்டுப்பட்டவையாக’ மாறுகின்றன. இந்தக் காரணமே, அவர்களை, இந்த கழுவுதல் சடங்கை மிக கவனமாக மேற்கொள்ளத் தூண்டியது. இத்துணை முக்கியத்துவம் பெற்ற கழுவுதல் சடங்கைச் செய்யாமல், இயேசுவின் சீடர்கள் தங்கள் உணவை உண்டது, அதிர்ச்சியையும், சர்ச்சையையும் உருவாக்கியது என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது.
இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற பல நூறு சம்பிரதாயங்கள், மரபுகள், சடங்குகள் கூடிக்கொண்டே சென்றன. இவற்றை, கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம் என்று, மோசே, மக்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியதை, இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.