இயேசு எல்லாருக்குமான இறைவன்
நிகழ்வு
கிராசியன் வாஸ் எழுதிய “Little things about Great People” என்ற நூலில் இடம்பெறும் ஒரு நிகழ்வு. ஒருநாள் சுவாமி விவேகானந்தர் ஒரு கிராமத்துச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பசியெடுத்தது. யாராவது உணவு தருவார்களா? என்று அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, பெரியவர் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு முன்பாக இருந்த திண்ணையில் உணவு உண்டுகொண்டிருந்தார். அவரிடத்தில் சென்று உணவு கேட்போம் என்று விவேகானந்தர் அவரருகே சென்றார்.
“ஐயா! எனக்கு மிகவும் பசிக்கிறது… சாப்பிடுவதற்கு கொஞ்சம் உணவு தந்தால், நான் என்னுடைய பசியாற்றிக் கொள்வேன்” என்றார் விவேகானந்தர். அவரை மேலும் கீழுமாகப் பார்த்த அந்த பெரியவர், “உங்களுக்கு உணவுக்கு தருவதில் எனக்கொன்றும் ஆட்சோபனை இல்லை… ஆனால் நான் ஒரு துப்புரவுப் பணியாளன்; தீண்டத்தகாதவன். அப்படியிருக்கும்போது, நான் கொடுக்கிற உணவை நீங்கள் உண்பீர்களா? என்றுதான் நான் யோசிக்கிறேன்” என்றார்.
பெரியவர் இவ்வாறு சொன்னதுதான் தாம்தான், ‘ஒரு தீண்டத்தகாதவரிடமிருந்து உணவை வாங்கி உண்பதா?’ என்று விவேகானந்தர் வேகமாக நடக்கத் தொடங்கினார். சிறிதுதூரம் சென்றிருப்பார். அப்போது அவருடைய குருநாதர் சொன்ன ‘எல்லாரிடத்திலும் கடவுள் இருக்கிறார், அதனால் யாரும் யாருக்கும் கீழானவர்கள் அல்ல’ என்ற வார்த்தைகள் அவருக்கு நினைவுக்கு வந்தன. உடனே விவேகானந்தர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, அந்த பெரியவரை நோக்கி ஓடினார்.
“ஐயா! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்… என்னை உயர்வாகவும் உங்களைத் தீண்டத்தகாதவராகவும் நினைத்து, நீங்கள் கொடுத்த உணவை சாப்பிடாமல் உதாசீனப்படுத்திவிட்டேன்… இப்போது என்னுள் இருக்கின்ற அதே இறைவன்தான் உங்களுக்குள்ளும் இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்துகொண்டேன்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து உணவை வாங்கி உண்ணத் தொடங்கினார்.
எல்லாரும் இறைவனின் மக்கள்; மக்கள் எல்லாருக்குள்ளும் இறைவன் இருக்கின்றார். அப்படி இருக்கும்போது பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பது நல்லதல்ல என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுகிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில், நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், இயேசு யூதருக்கு மட்டுமல்ல, அவர் எல்லாருக்குமான இறைவன் என்றொரு செய்தியைத் தருகின்றது.
1. இயேசுவின் அமுதமொழியைக் கேட்டு வியப்புற்ற மக்கள்
இயேசு, தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து, அங்குள்ள தொழுகைக்கூடத்தில், இறைவாக்கினர் எசாயாவின் சுருளேட்டை எடுத்து வாசிக்கத் தொடங்குகிறார். மக்களோ அவருடைய வாயிலிருந்து வந்த அமுத மொழிகளைக் கேட்டு வியக்கின்றார்.
இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது, இயேசு பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் போலன்றி அதிகாரத்தோடு போதித்தார் என்பதாகும். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும், திருச்சட்டம் ‘இப்படிச் சொல்கிறது’ என்று போதித்து வந்தார்கள். இயேசுவோ அப்படியில்லாமல், “நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அதிகாரத்தோடு போதித்தார். ஒருவர் அதிகாரத்தோடு போதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான ஒரு காரியமில்லை. உள்ளத்தில் உண்மையும் செயலில் நேர்மையும் இருக்கின்ற ஒருவரால் மட்டுமே அப்படிப் போதிக்க முடியும். இயேசுவிடம் உண்மையும் நேர்மையும் குடிகொண்டிருந்தன. அதனால்தான் அவரால் அதிகாரத்தோடு போதிக்க முடிந்தது.
2. இயேசுவைப் புறக்கணித்த மக்கள்
இயேசு, எசாயாவின் சுருளேட்டை வாசித்தபோதும் அதற்கு விளக்கம் தந்த தும் வியப்புற்ற மக்கள், அவர் இறைவாக்கினர்கள் எலியாவைப் போன்று, எலிசாவைப் போன்று புறவினத்து மக்களுக்குப் பணிசெய்யப் போகிறேன் என்று சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த மக்கள் அவர்மீது சிற்றம் கொள்ளத் தொடங்குகிறார்கள்.
இஸ்ரயேலில் மூன்றரை ஆண்டுகள் வானம் பொய்த்து, கடுமையான பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில், கைம்பெண்கள் பலர் இருந்தார்கள். ஆனால் இறைவாக்கினர் எலியா சீதோனைச் சார்ந்த சாரிபாத்துக் கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்டார். (1அர 17:8-16) இறைவாக்கினர் எலிசாவோ இஸ்ரயேல் குடிகளில் தொழுநோயாளர்கள் பலர் இருந்தபோதும், புறவினத்தாராகிய சிரியாவைச் சார்ந்த நாமானின் தொழுநோயையே நீக்கினார் (2 அர 5: 1-15). இப்படி இரண்டு இறைவாக்கினர்களும் இனம் கடந்து, குறுகிய எல்லைகளைக் கடந்து, எல்லா மக்களுக்கும் பணிசெய்ததைப் போன்று, தானும் பணிசெய்யப் போகிறேன் என்று சொன்னதால், மக்கள் அவர்மீது சீற்றம் கொள்ளத் தொடங்குகிறார்கள்.
புறவினத்தாரை நாயினும் கீழென நினைத்த யூதர்கள் மத்தியில், அவர்களைப் பற்றிப் பேசினாலோ அல்லது அவர்களது மத்தியில்தான் தான் பணிசெய்யப் போகிறேன் என்று சொல்வதனாலோ, தனக்கு மிகப்பெரிய பிரச்சினை வரும் என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தாலும் இயேசு தன் இலக்கு என்ன, இலக்கு மக்கள் யார், யார் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி, தான் யூதர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமான இறைவன் என்பதை எடுத்துச் சொல்கிறார்.
இயேசு யூதர்கள் மட்டுமல்ல, எல்லாருக்குமான இறைவன் என்பதை, அவர் இறப்பின்போது, எருசலேம் திருக்கோவிலின் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தததும் விண்ணேற்றம் அடையும்போது தன் சீடர்களிடம் சொன்ன, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத் 28:19) என்ற வார்த்தைகளும் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.
3. இயேசுவைக் கொலை செய்யவும் துணிந்த மக்கள்
இயேசு, தான் யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுடைய மீட்புக்காகவும் வந்திருக்கிறேன் என்று சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த யூதர்கள், அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் இருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயல்கிறார்கள். இயேசுவின் அமுதமொழியைக் கேட்டு வியந்த மக்களா, சிறிதுநேரத்தில் அவரை மலை உச்சிலிருந்து கீழே தள்ளிவிடப் பார்க்கிறார்கள்! என நினைக்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது… அந்தளவுக்கு அவர்கள் இனவெறியில் ஊறிப்போனவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கின்றபோதுதான் வேதனையாக இருக்கின்றது.
பலநேரங்களில் நாமும்கூட யூதர்களைப் போன்று கடவுள் ‘எங்கள் இனத்திற்கு அல்லது குலத்திற்குத்தான் சொந்தம்’ என்று உரிமை கொண்டாடுவது நம்முடைய குறுகிய மனப்பான்மையைக் காட்டுவதாக இருக்கின்றது. ஆகவே, கடவுளை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ளாமல், அவர் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற பரந்த பார்வையோடு பார்ப்பது நல்லது.
சிந்தனை
“எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவர்; அவர் எல்லாருக்குள்ளும் இருப்பவர்” என்பார் தூய பவுல் (எபே 4:6). ஆம், எல்லாருக்கும் தந்தை ஒருவராக இருக்கின்ற போது… அவர் எல்லாருக்குள்ளும் இருக்கும்போது இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டிற்கு வழியே இல்லை.
ஆகவே, இயேசுவை எல்லாருக்குமான இறைவன் என்பதையும் உணர்ந்து, நாம் அனைவரும் அவருடைய சகோதர, சகோதரிகள் என்பதை உணர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed