“என் மீட்பர் வாழ்கிறார்”
நிகழ்வு
ஓர் ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். இவரிடம் கூலியாளாக ஒருவர் வேலை பார்த்து வந்தார். இந்தக் கூலியாள் பண்ணையாரிடம் நிறையக் கடன் வாங்கியிருந்ததால், அதை அடைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். இந்தக் கூலியாளுக்குத் திருமண வயதில் ஒரு மகள் வேறு இருந்தாள்.
ஒருநாள் பண்ணையார் தன்னிடம் வேலைபார்த்து வந்த கூலியாளை அழைத்து, “நீ என்னிடம் பட்ட கடனை அடைப்பதற்குப் பல ஆண்டுகளாக முயற்சி செய்துகொண்டு இருக்கின்றாய்; ஆனாலும், உன்னால் முடியவில்லை. அதனால் நீ உன் கடனை அடைப்பதற்கு நான் ஒரு வழி சொல்கின்றேன். உனக்கொரு மகள் இருக்கின்றாள் அல்லவா! அவளுக்கு முன்பாக ஊர்மக்களைச் சாட்சியாக வைத்து, ‘பண்ணையாரைத் திருமணம் செய்யவேண்டும்’, ‘பண்ணையாரைத் திருமணம் செய்யவேண்டாம்’ என்று இரண்டு சீட்டுகளை எழுதிப் போடுகின்றேன். அதில் எந்தச் சீட்டு வருகின்றதோ, அந்தச் சீட்டில் சொல்லப்பட்டதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். உன்னுடைய கடனும் அடைந்துவிடும்” என்றார்.
பண்ணையார் இப்படிச் சொன்னதைக் கேட்டதும், கூலியாளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஏனெனில், பண்ணையார் மிகவும் தந்திரமானவர் என்பது கூலியாளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் கடனை அடைக்க அவருக்கு வேறு வழி தெரியாதததால், பண்ணையார் சொன்னதற்கு அவர் சரியென்று ஒத்துக்கொண்டார். இதன்பிறகு கூலியாள், தன் வீட்டிற்கு வந்து மகளிடம், பண்ணையார் சொன்னதைச் சொல்ல, அவர் அதிர்ந்துபோனார். ஆனாலும் அவர், ‘திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணையாக இருக்கும்பா’ என்று தன் தந்தையிடம் சொல்லி, அந்த நாளுக்குத் தயாராக இருந்தார்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. ஊர் மக்கள் யாவரும் கூடியிருக்க, பண்ணையார் தான் ஏற்கெனவே, ‘பண்ணையாரை மணந்துகொள்ளவேண்டும்’ என்று எழுதி வைத்திருந்த இரண்டு சீட்டுகளையும் கூலியாளின் மகள் முன்பாகப் போட்டு, அதை எடுக்கச் சொன்னான். பண்ணையாரின் தந்திரத்தை நன்கு அறிந்துவைத்திருந்த கூலியாளின் மகள், அந்த இரண்டு சீட்டுகளில் ஒரு சீட்டை எடுத்து, அதைத் தெரியாமல்போல, தனக்குப் பக்கத்தில் வைத்திருந்த வெந்நீர் இருந்த செம்புக்குள் போட்டார். இதனால் அந்தச் சீட்டில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் அழிந்துபோயின.
இதைப் பார்த்துவிட்டுச் சூழ்ந்திருந்த மக்கள், ‘இப்படி ஆகிவிட்டதே! என்று புலம்பத் தொடங்கினார்கள். அப்பொழுது கூலியாளின் மகள் அவர்களிடம், “சீட்டு, வெந்நீருக்குள் விழுந்துவிட்டதே என்று கவலைப்படவேண்டாம்! இன்னொரு சீட்டில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டால், முதல் சீட்டில் என்ன எழுதப்பட்டிருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்” என்றார். ஊர் மக்கள் அதற்கு, “இது நல்ல யோசனை” என்று சொல்ல, கூலியாளின் மகள், இன்னொரு சீட்டை எடுத்து, அதில் எழுதப்பட்டிருந்த, ‘பண்ணையாரை மணக்கவேண்டும்’ என்ற வார்த்தைகளை வாசித்துக்காட்டினார்.
அப்பொழுது கூட்டத்திலிருந்தவர்கள், “இந்தச் சீட்டில் ‘பண்ணையாரை மணக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டு இருப்பதால், முதல் சீட்டில் ‘பண்ணையாரை மணக்க வேண்டாம்’ என்றுதான் எழுதப்பட்டிருக்கும் என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள். இவ்வாறு கூலியாளின் மகள் ஆண்டவரின் அருளாலும் துணையாலும் மிகப்பெரிய சூழ்ச்சியை வெற்றிகொண்டார். முடிவில் கூலியாள் பட்ட கடனும் அடைக்கப்பட்டது.
ஆம், கடவுள் தம் அடியார்களையும், தம்மை நோக்கிக் கூவி அழைப்போரையும் ஒருபோதும் கைவிடுவதில்லை; கை நெகிழ்வதுமில்லை. அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில், யோவுவின் நண்பர்கள் அவர்மீது பழி சுமத்தியபொழுது, அவர் அவர்களிடம், “என் மீட்பர் வாழ்கின்றார்…இறுதியில் இந்த மண் மேல் எழுவார்” என்கின்றார். யோபு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தன் நண்பர்கள் தன்மீது பழிசுமத்தியபொழுது, ‘என் மீட்பர் வாழ்கிறார்’ என்ற யோபு
ஆண்டவருக்கு அஞ்சி, நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்ந்து வந்த யோபுவின் உடைமைகள் அவரை விட்டுப் போயின; அவருடைய பிள்ளைகள் இறந்தார்கள். இதைப் பார்த்துவிட்டு அவருடைய நண்பர்கள் அவரிடம், நீ பாவி என்பதால்தான் உனக்கு இப்படியெல்லாம் நடக்கின்றது என்று அவர்மீது பழி சுமத்துகின்றார்கள். அப்பொழுதுதான் யோபு அவர்களிடம், “என் மீட்பர் வாழ்கின்றார் என்றும், இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன்…” என்கின்றார்.
யோபுவின் நண்பர்கள் யோபுவின்மீது பழி சுமத்தியபொழுது அல்லது அவருக்குத் துன்பம் வந்தபொழுது, அவர் ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையை இழக்கவில்லை. மாறாக அவர் ஆண்டவர்மீது மிக உறுதியான நம்பிக்கை கொண்டவராய், மேலே உள்ள வார்த்தைகளை உதிர்க்கின்றார். யோபுவின் வாழ்க்கையில் துன்பங்கள் வந்ததுபோன்று, நம்முடைய வாழ்க்கையிலும், நாம் ஒரு தவறு செய்யாத பொழுதும் துன்பங்கள் வரலாம். இத்தகைய தருணங்களில் நாம் மனம் சோர்ந்துபோய்விடாமல் அல்லது இறைவனைப் பழித்துரைத்துக் கொண்டு இராமல், அவர்மீது நம்பிக்கையோடு வாழ்வதே சிறந்தது.
ஆகையால், நாம் யோபுவைப் போன்று எத்தகைய துன்பங்கள் வந்தாலும், ஆண்டவரில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, அவரது அன்பில் நிலைத்திருப்போம்.
சிந்தனை
‘இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்’ (திபா 34:6) என்பர் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் நம்முடைய இக்கட்டான வேளையில் மட்டுமல்லாமல், எல்லா வேளையிலும் யோபுவைப் போன்று ஆண்டவரைத் துணைக்கு அழைத்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed