குடும்பங்களுக்கும், பள்ளிக்கூட அமைப்புக்கும் இடையேயுள்ள கூட்டமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் ஒரு சூழலில், பெற்றோர், பள்ளிகளோடு இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆசிரியர்களின் பணியை, குடும்பங்கள் பாராட்டாமல் இருப்பதும், பெற்றோரின் தலையீடு அதிகமாக இருப்பதாக, பள்ளிகள் உணர்வதும், இத்தாலியில் நிலவும்வேளை, இச்சூழலை மாற்றி, இவ்விரு தரப்புக்கும் இடையே நம்பிக்கையை உருவாக்குவதற்கு, யாராவது ஒருவர் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.
இத்தாலிய பெற்றோர் கழகத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கழகத்தின் ஏறத்தாழ 1,400 உறுப்பினர்களை, செப்டம்பர் 07, இவ்வெள்ளி நண்பகலில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெற்றோருக்கும், பள்ளிகளுக்கும் இடையே இருக்கவேண்டிய ஒத்துழைப்பு பற்றி வலியுறுத்தினார்.
தனது அன்பின் மகிழ்வு (Amoris Laetitia) திருத்தூது அறிவுரைத் தொகுப்பில் பள்ளிக்கூடம் பற்றிக் கூறியிருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, பள்ளிக்கூடம், பெற்றோருக்குப் பதிலாக இருப்பதில்லை, மாறாக, இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட வேண்டியவை என்று கூறினார்.
பள்ளிகள் பற்றி, குடும்பங்கள் கொண்டிருக்கும் எண்ணங்களை அகற்றுவதற்கு உதவ வேண்டியது, திருஅவையின் கடமை என்றும், குடும்பங்கள் நம்பிக்கையும் ஆதரவும் பெறுகின்ற இடமாக திருஅவை சமூகம் இருக்க வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.
இறுதியில், தனக்காகச் செபிக்குமாறும், இத்தாலிய பெற்றோர் கழகத்தினரிடம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்